பாடல்
படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே
திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்
பதவுரை
அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானே; நீ மேலான ஞான நடனத்தைச் செய்கின்ற அருட்பதி ஆகிய இறை தத்துவமான சுத்த தத்துவ நிலை முதல் தத்துவாதீதப் பரவெளி நிலை கடந்து உரைப்பதற்கு இயலாத வெறுவெளி வரையிலான படிகளைக் கடந்து அதற்குரிய படிகள் எல்லாம் ஏறி அடையுமாறு அருள் செய்தாய்; அவ்வாறு அடைந்தப்பின் எனக்கு, ஒளிர்கின்ற கொடிகள் நிறைந்த மணிமாடத்தை யுடைய திருக்கோயிலையும், அவ்வருள் நிலையமாகிய திருக்கோயிலில் தலைவன் நடுவில் இருப்பதை எளியேன் காணச் செய்து, அக்கோயிலில் கோபுர வாயிலில் குற்றமில்லாத அழகிய கதவைத் திறந்து காட்டிப் பின்னர் அதனை மூடும்படி செய்து அருள் செய்தாய்; அதற்கு ஏற்ற தருணம் இதுவாக இருப்பதால் அதனைத் மீண்டும் திறந்து அடியேனுக்கு அருளுதல் வேண்டும்; அவ்வாறு இன்றி தாமதித்தால் நான் அரைக்கணமும் உயிர் தாங்க மாட்டேன்.
விளக்க உரை
- தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு அத்தத்துவம் முப்பத்தாறினையும் ஆராய்ந்து கடந்து, சாக்கிராதீதத்தில் யோகக் காட்சி கண்டு தத்துவாதீதப் பரவெளியில் திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புற்ற திறம் பற்றி கூறியது.
- படிகள் எலாம் – படிகளாகிய தத்துவங்கள் – ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூன்று வகையாய், பின்னர் இருபத்துநாலும் ஏழும் ஐந்துமாக முப்பத்து ஆறாய் விரிந்து நிற்பதை குறிப்பிடும் வரிகள்
- ஏற்றுவித்தீர், அடைவித்தீர் – தமது யோக நெறிக்குத் துணை புரிந்த திருவருளை சிவன் செயலாக உரைத்து அதை உடன் உணர்ந்து உரைக்கும் திறன் பற்றியது
- செடிகள் இலாத் திருக்கதவம் – ஞானக் கோயிலுக்கு குற்றங்கள் எனும் கதவுகள் இல்லை என்பதை உரைத்தது. (செடி – குற்றம்)
- விளங்குதல் – ஒளிர்தல், தெளிவாதல், விளக்கமாதல், பளபளப்பாதல், பெருகுதல், மிகுதல், அறிதல்