‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மன்று
பொருள்
- சபை
- சிதம்பரத்துள்ள கனகசபை
- நியாயசபை
- பசுத்தொழு
- பசு மந்தை
- மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
- தோட்டத்தின் நடு
- நாற்சந்தி
- வாசனை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
திண்ணம் பழுத்த சிந்தையிலே
தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே
மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே
தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன்
இறையுந் தரியேன் தரியேனே.
திருஅருட்பா – வள்ளலார்
கருத்து உரை
எத்தகைய துன்பங்கட்கும் சலிப்புறாத, உறுதியான மனத்தில் இனிமை செய்து அதன் தன்மை கெடாது இயல்பாகவே ஞானவொளி பெற்று என்றும் இடையறாது விளங்கும் சுய சோதி ஆனவனே, அழகு விளங்குமாறு பழுத்த ஒப்பற்ற பழம் போன்றவனே, தில்லையம்பலத்தில் செம்மேனி அம்மானாய் ஞான ஒளி கொண்டு விளங்குகின்ற மாணிக்க மணியின் சுடரொளியை உடையவனே, குளிர்ச்சி பொருந்திய சந்திரனிடத்தே நிலவும் அமுதத்தைத் தந்தருள்வாய்; அதற்கு இதுவே சமயமாகும்; எண்ணத்தில் முதிர்வுடையவனகிய யான், உடலாலும், உள்ளத்தாலும் பெற்ற ஞானப் பேற்றால் மென்மை உற்று உலகியல் துன்பங்களைத் தாங்கும் சிறுமையைப் பொறாததால் இனிமேல் சிறியவனாகி இந்த உலகியல் தரும் துன்பங்களைத் தாங்க மாட்டேன்.
விளக்க உரை
- தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் – யோக முறையில் சிரசின் மேல் துவாத சாந்தத்தில் சந்திரனாகத் தோன்றி ஞான அமுது தருகின்றான் என்பது பற்றியது
- இதுவே தருணம் – அதனைப் பெறுதற்குரிய பக்குவத்தைத் தான் அடைந்து கூறல்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அநாதி முக்தன் யார்?
சிவன்