பாடல்
வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றினால் ஆன கோட்டைகளை அமைத்துக் கொண்டு கொடுமை செய்த அரக்கர்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியவர்களின் முப்புரத்தினையும் புன்னகை செய்து தீயினால் வெந்து அழியுமாறு செய்த வில்லை உடையவனும் எமது தந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், தாம் இட்ட பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக்கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடுவனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைக்கப்பட்டு இறந்த தாய்ப் பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப செயலாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திருஉளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.
விளக்க உரை
- ‘வேவ’ முதல், “இயங்கு காட்டில்“ என்றது வரை, சிவபெருமான் அர்ச்சுனன் பொருட்டுப் பன்றியின் பின் வேடனாய்ச் சென்ற வரலாற்றைக் குறிப்பது.(பாசுபதாஸ்திரம் வழங்கிய காதை). அக்காலத்தில் தேவர்கள் ஏவல் செய்யும் வேடுவராய் வந்தனர் என்பதும் வரலாறு.
- கேழல் – பன்றி
- இறைவன் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த திருவிளையாடல்