அமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)

பாடல்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

மேலே கூறப்பட்ட விநாயகர் அஷ்டகம் எனும் தோத்திரப் பாடல்களை தொடர்ந்து மூன்று தினங்கள் காலையும் மாலையும் சந்திக்கும் நேரமான சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் காரியங்களில் வெற்றிபெறுவார்கள்; தொடர்ந்து எட்டு தினங்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்; சதுர்த்தியன்று நல்ல சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை எனும் எட்டு வகையான அட்டமாசித்திகளையும் பெறுவார்கள்.

விளக்க உரை

  • சந்தியாக்காலம் என்பது திரேதா யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் இடையிலான  பயங்கரமான பஞ்சக்காலம் என்பதும் அக்காலகட்டத்தில் அரசமுனியான விஷ்வாமித்திரர் நாயிறைச்சி உண்டு வாழ்ந்தார் என்ற குறிப்புகளும் சில இடங்களில் காணப்படுகின்றன. இப்பாடல்கள் வறுமையை விலக்கி பஞ்சத்தினை போக்குபவைகள் என்றும் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *