வெகுளி என்னும் குற்றதால் உட்கருவியாகிய மனம் தளர்ந்து சுழல் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் சுழலுகின்றேன்; இந்தக் குற்றத்தினின்று நீக்குதற்கு நின் அருள் அல்லாது பற்றுக்கோடு இல்லை. அருள் துணை புரிவதற்கு இப்பொழுதாகிலும் நின் திருவுள்ளம் இரங்குமோ? இரங்காது எனில் இது என்ன நியாயம்? என்னளவில் உந்தன் அருள் இல்லையோ? என் வல்வினையின் காரணமாக கற்பிக்கப்பட்டு இந்நிலை ஏற்பட்டதோ? என்னென்று கூறுவேன்.
விளக்க உரை
மாயையினைப் பற்றி அறிவு சுழலுவதால் உண்மை அறியாமல் உடல் தளர்ந்தது;
“என் அளவில் நின்பால் தண்ணருள் இலையோ” – எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் அருள் பெருகிப் பாயும் நின் திருவுள்ளம், என்பால் அஃது இல்லாமல் போயிற்றோ எனும் பொருளில்.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
சந்தானம் என்பது எதைக் குறிக்கும்? குரு சிஷ்ய பரம்பரை
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.
அபிராமி அந்தாதி
கருத்துஉரை
உன்னால் கவரப்பட்ட பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும், அவ்வாறான ஈசனுடன் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் மனத்துள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என் உயிரைக் கவர காலன் கோபத்துடன் வரும் வேளை தோன்றி அருள வேண்டும்.
தேவனே! திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி பள்ளி எழுந்தருள்வாயாக.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
திருக்கயிலாய பரம்பரை யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம் உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
திருச்சேறைச் செந்நெறிச் செல்வ மூர்த்தியானவர், விரிந்த பல்வேறு விதமான ஒளியை உடைய சூலத்தையும், வெடி முழக்கம் போல் ஒலியினை ஏற்படுத்தும் உடுக்கையையும் கையில் ஏந்தி, தலையில் கங்கையினை தரித்தும் அழகிய தோற்றம் உடைய கால பைரவ மூர்த்தியாகி, யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச, ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார்.
அவனே தானே ஆகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.
திருநெறி 1 – 10ம் சூத்திரம் – சிவஞானபோதம்
கருத்துஉரை
மாயைக்கு உட்பட்டு எவ்வாறு ஆன்மாவானது அதனோடு கலந்து நிற்கிறதோ அதுபோலவே சுத்த நிலையில் ஆன்மா கலந்து நிற்கும் பொழுதுகளில் அவன் தானாகவே ஒன்றாகி அந்த நெறிபற்றி நிற்பான். அந்நிலையில் ஆன்மாவினை மலம் பற்றாது. பற்றினாலும் வலிமை குறைந்துவிடும்.
பந்தணைநல்லூர்ப் பெருமான் முற்றாத (இளம்) பிறை சூடிய சடையினர்; மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர்; மூவுலகாலும் துதிக்கப்படும் முதல்வர்.சான்றோர்களால் துதிக்கப்படும் திருவடிகளை உடையவர்; பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர்; மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதியினை தனது பாகமாக உடையவர்; வெண்மையான திருநீறு அணிபவர்; தம் இயல்பான பண்பினால் உலகங்கள் ஆக நிற்பவராகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர்; குளிர்ந்த கண் கொண்டவராகி அரக்கர்களின் பகைவர் மதில்களை எரித்தவர் அப்பெருமானார்
விளக்க உரை
புறப்பற்றுதல் மூவரானார் – அயன் , மால் , உருத்திரன் ` – காரணக் கடவுளர். இவர்கள் ஒரோவோர் அதிகாரத்தை தங்களிடத்தில் வைத்து அதன் வாயிலாக, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களை நடத்துதலால் மூவரானார்.
முதல்வரானார் – முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி ‘முதல்வரானார்.
ஊழி ஆனார் – ஊழி பற்றி உலகம் ஒடுங்குங்காலம் உலகமானார்.
முற்றா மதிச்சடையார், திங்கள் கங்கையாள் காதலார் – ஒரே பாடலில் இருமுறை திங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. தனது தவற்றினை ஒப்புக்கொண்டதால் கங்கையைக்கு நிகராக திங்களைக் காதலிக்கிறார் என்றும், அதனால் திங்களையும் தனது சடையில் சூடி உள்ளார் என்பதும் விளங்கும்.
6ம் திருமுறை – திரு அருட்பா – சிவ தரிசனம் – வள்ளலார்
கருத்துஉரை
எல்லாம் அறிந்தவனே. நல்ல நிதியினை உடையவனே, எனது நாயகனே அனைவராலும் வணங்கத் தக்கவனாக விளங்கும் நடராஜ பதியே! எப்பொழுதும் பெரும் இன்பம் உடைய தேவர்கள் உன்னை தலைமேல் தாங்கி நீ மண்ணாளவும், வானத்தையும் ஆள மனதால் நினைத்தேனோ.; அப்படிப்பட்ட உன்னை மனித்தில் நினைத்தேனோ, உன் பெருமை பேசாமல், தேன் போன்று பலவகையிலும் வேறு வார்த்தை உரைப்பவர்களும் மகிழ்ந்து இருக்க விரும்பினேனோ; இன்சுவைகளை விரும்பினேனோ; தீமைகள் ஏதாகிலும் செய்தேனோ; உடையவனே நான் எந்த பாவமும் அறியவில்லை; நீ ஏன் இருமையில் இருக்கின்றாய், இது அழகோ! எனது ஒருமையினை நீ அறியாயோ!
விளக்க உரை
பலவகையிலும் தேன் மொழி உரைப்பவர்கள் – இறை சொற்கள் அன்றி பிற சொற்கள் பேசுவோர்
நன்னிதி – குறைவு வரா செல்வம்
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் – நீ எப்பொழுதும் அருளுபவன், இப்பொழுது அருள் செய்யவில்லை எனும் பொருளில்.
என்ஒருமை அறியாயோ – என் மனம் எப்பொழுதும் உன் சிந்தனையைப் பற்றி இருக்கும். இது நீ அறியாயோ?
துக்கடா
சைவசித்தாந்தம்வினாவிடை
முதன் முதலில் சித்தாந்தம் எனும் சொல்லை கையாண்டவர் திருமூலர்
கயிலாயத்தில் உறைபவனே! பெண் குரங்கானது தனது குட்டிப் பற்றி நினைவுறாது அங்கும் இங்கும் தாவும், குட்டி தாய்க்குரங்கைப் பற்றிக் கொள்ளும். அதுபோல் இந்த ஆத்மாவானது பரமாத்மாவாகிய உன்னைப் பற்றிக் கொண்டால் வினைகள் அறுபடும். நாயேன் இந்த உண்மையை அறிந்து புறத் தேடல்களை கொள்ளும் சிந்தனையை என்ன செய்வேன்? ஆகவே பெருமானே எனது தீவினைகளை அகற்றி, பூசை செய்வதை ஒத்து தாய்ப் பூனை தனது தனது குட்டியை எங்கு சென்றாலும் கவ்விக் கொண்டு செல்லுமோ அவ்வாறு இந்த நாயேனை நீ ஆட்கொண்டு அருள வேண்டும்.
விளக்க உரை
புறப்பற்றுதல் விடுத்து அவனே வந்து ஆட்கொள்ளும் அகப்பற்றினை வேண்டுதல் குறித்தது.
சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், ப்ராமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும், ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும், கையிலே பாசமும் ,அங்குசமும், பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றவளும், தாமரையில் வீற்றிருப்பவளும்,. சிவபுரத்தை ஆட்சி செய்வவளும், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவளும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்பவளும், தாமரை முகம் கொண்டவளும், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவளும், கருணை கொண்டவளும், திருக்கயிலை மலையில் ஈசனின் கூட இருப்பவளும். நவரச குணங்கள் கொண்டவளும், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவளும். மேகம் போன்ற நிறம் உடையவளும், சிவந்த உதடுகள் உடையவளும் ஆன அழகான அபயாம்பிகைத்தாய் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.
விளக்க உரை
வழிபடும்தெய்வங்கள்அனைத்திலும்அன்னையே அந்த தெய்வவடிவாகஇருக்கிறாள்எனும்பொருளில்இப்பாடல்
எண்ண இயலாதா அளவு துளைகளுடன் கூடிய இருட்டறை ஒன்று உள்ளது. ஆயினும் அந்த அறையில் சிறிதும் ஒளிபுகாது இருட்டில் இருக்கிறது. இந்த இருள் எத்தகைய துன்பத்தை தரும் என்பது குறித்து சொல்லப்பட வேண்டியது இல்லை. ஆனாலும் இறைவன் திரு உள்ளம் பற்றுவான் ஆயின் பெரிய இன்பம் தரும் மாளிகை ஒத்ததாகிய இல்லம் கிடைத்துவிடும்.
விளக்க உரை
திருவருள் துணைகிடைத்தலின் அருமையை இப்பாடல் விளக்கும்
சொல்லப்படும் மந்திரங்களின் மேம்பட்ட நிலை, அம்மந்திரமாக ஆகுதல். தன்னிலை மறந்து அவ்வகைப்பட்ட ஐந்தெழுத்தில் ஒன்றும் போது அமுத தாரகைகள் அன்னாக்கில் தோன்றும். மேல் விபரங்களை குரு மூலமாக அறிக
தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
விளக்க உரை
தேய்ந்து விளங்கக்கூடிய பிறைச்சந்திரனை அணிந்தவனே அல்லது தேய்ந்து விளங்கும் வெளிறிய அறிவு உடையவனே – சிலேடை
உன் தலை மேல் இருப்பவள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். நீ அதைக் கவனிக்காமல் பார்வதியோடு இங்கு வீற்றிருக்கிறாய். உன் மனைவிக்கு பயந்ததாகவும் தெரியவில்லை. அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு இருக்கிறாளோ? வேறு எந்தப் பெண்ணும் இவ்வாறு பொறுமையுடன் இருக்கமாட்டாள். உன் கைகளில் இருக்கும் மழு, ஆயுதம் கண்டு பயந்து உடன்பட்டு இருக்கிறாளோ, இந்த ரகசியத்தை எனக்குச் சொல் என்று சிலேடையாகப் பாடுகிறார்.
ஏந்து மங்கை – ஏந்தப் பெற்ற மங்கை; இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, பாலாம்பிகா – (வாலாம்பிகை) என்றனர் வட மொழியில்
இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம் எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன் வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும் மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால் சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப் பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப் பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே,
சிவஞான சித்தியார்
கருத்துஉரை
விறகில் தீயினைப் போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் சுவை போலவும், எள்ளினுள் எண்ணெயைப் போலவும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். எனவே இறைவனை அகத்திலோ, புறத்திலோ வணங்கி வழிபட்டால் அவர்களுக்கு அருள்பாலிப்பான். ஆயினும் தங்களைப் பற்றியுள்ள மலம் முற்றிலும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சிவபெருமானை அவனுடைய செந்தாமரை மலர்போன்ற திருவடி ஞானத்தினால் தங்கள் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளுவித்து அகவழிபாடு இயற்றுவார்கள். அத்தகைய அடியார்கட்கு இறைவன் மாயை பற்றி விளக்கி, தானே தோன்றி அவர்களது மலப்பற்றினை அறவே துடைத்து அருளுவான். நெருப்பில் இட்ட இரும்பானது நெருப்பின் தன்மையை பெறுவது போல இறைவனும் உயிரைத் தன் வண்ணம் ஆக்குவான். தனது பேரானந்தப் பெரும் செல்வம் முழுவதையும் உயிருக்கு அருளுவான்.
விளக்க உரை
அகவழிபாட்டின் சிறப்பு எடுத்து உரைத்தல் குறித்தது இப்பாடல்
பக்குவப் பட்ட உயிரின் வகையினைக் காலம் முன்வைத்து காட்டுவதற்காக 4 உவமைகள் கூறப்பட்டுள்ளன.
தீயானது தன்னில் இடப்பட்டவைகளின் மாசுகளை நீக்கி, தன் வண்ணமாக செய்து விடும். அது போல அகவழிபாடு கொண்ட ஆன்மாவை அதன் மலம் நீக்கி, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எண் குணத்தான் தன் வண்ணமாக செய்து பர முக்தியைத் தருவான்.
சிவபெருமானே, பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஏத்தும் திருவொற்றியூரில் உள்ள சிவக்கரும்பே, சிவகதியை நல்கும் கருணைக் கடலே, வஞ்சம் புரியும் வினைகளுக்கு ஒரு கொள்கலம் போன்ற மனமுடைய யான் எல்லா வகையிலும் கொடியவனாவேன்; எளிமைக்கேற்ற புகலிடமென்று நினைந்து நின் திருக்கோயிலை அடைந்து நின் சன்னிதிக்கு முன்பு நிற்கின்றேன்; பொறுக்குமளவிற்கு அடங்காத பாவியெனக் கருதி இகழ்ந்து என்னை விலக்கினால் யான் என்ன செய்வேன்?
விளக்க உரை
மிக்க பெரும் பாவியென்று இகழ்ந்து ஒதுக்காது அருள் செய்தல் வேண்டுமென்று முறையிட்டவாறு
வஞ்சகவினை – ஈஸ்வர அனுபவமே பெரிது என்று எண்ணி உயிர்கள் பிறக்கும் போது கொண்ட நினைவு மறந்து மாயைக்கு உட்பட்டு வினைகளை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறத்தல் கண்டு இவ் வார்த்தை. வினைகள் நிரம்பப் பெற்றதால் உடல் கொள்கலன்
கதி தரும் கருணையங் கடலே – மாயைக்கு உட்பட்ட உயிர்கள் அனைத்தையும் அவற்றின் குறையைக் காணாமல் பக்குவப்படுத்தி அருள்கூர்ந்து சிவகதி தருதலால் பொருட்டு
அனைத்திலும் கொடியேன் – மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் கொடியவன் எனும் பொருள் பற்றி
‘பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஓதும்’ என்பதையும் ‘எஞ்சலில் அடங்காப் பாவி’ என்பதையும் ஒப்பு நோக்கி தெய்வங்களுக்கும், வினை கொண்ட உயிர்களுக்கும் ஒன்றாகவே அருள்கிறான் எனும் பொருள் பற்றி.
கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும் சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும் அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்துதோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சோலைகளால் சூழப்பட்டு இருக்கும் பூவணத்தில் உறையும் எம் புனிதனார் அடியார்களுக்கு மனக்கண் முன்னர், கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் , பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மேம்பட்ட மறைகளை ஓதும் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் அகிய நால்வரருக்கு வேத நெறிகளைச் சொற்களால் விளக்காமல் மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும், உடலைச் சுற்றி பாம்புகளை அணிந்த காட்சியும் கையினில் மான் ஏந்திய காட்சியும் , அறத்தின் உண்மையை உணராத காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் வெறுக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.
விளக்க உரை
ஐவகை – ஐந்து நிறம் . படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்கள் இந்த ஆற்றல்கள் ஒருங்கி நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்கும். இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் . – ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்‘ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் யாண்டும் சிந்திக்கத் தக்கது.
புறத்தில் உள்ள பஞ்சகோசமாகவும், அதனுள் உறையும் உயிராகவும், அவ்வாறு இல்லாத பொருள்களிலும் உறைபவனாக இருத்தலினால் எல்லா இடங்களிலும் அவனை வழிபடுக எனும் பொருளில். அஃதாவது சகலமும் ஈஸ்வரப் பொருள் பற்றியது.
பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.
கந்த புராணம் – ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்துஉரை
தாமரை மலரின் மீது ஆசனத்தைக் கொண்டவனாகிய தேவர் உலகம் சார்ந்தவராகிய பிரம்மா, ஈசனை மதித்திடால் கர்வம் கொண்ட பொழுதினில் ஒரு தலையை கிள்ளி அதனால் பெறப்படும் இரத்தினை கைகளில் கொண்டும் அவர்தம் கர்வத்தை அழித்தும் (அத்துணை கோபம் உடையவராக இருப்பினும்) உயிர்கள் மீதுபரிவும் உடையவராகிய வடுகனைப் போற்றுவோம்.