அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவத்தை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவத்தை

பொருள்

  • நிலை பொருள்
  • வேதனை

வாக்கிய பயன்பாடு

தூக்கம் வரலேன்னாலே ரொம்ப அவஸ்த்த தான்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – சதாசிவ லிங்கம் – திருமூலர்

கருத்து உரை

சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கு தவிர ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டும். சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு என்று சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன*. இறைவனுக்குத் திருமேனிகள் அத்துவாக்கள் முன்வைத்து ஆறு` என்றும், அட்ட மூர்த்தங்கள் முன்வைத்து `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.

விளக்க உரை

  • * – திருவாடுதுறை போன்ற ஆதின அனுட்டானங்களில் 12 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம்; மற்ற மடங்களில் 16 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம் – ஆதீன முறைப்படி.
  • காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ இல்லாமவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு ஆகிய உயிரின் நிலைகள்
  • காரண அவத்தை – 1. கேவல அவத்தை ,2. சகல   அவத்தை , 3. சுத்த  அவத்தை
  1. கேவல அவத்தை: ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை
  2. சகல அவத்தை: மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது
  3. சுத்த அவத்தை: பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை
  • காரிய அவத்தை – உயிர் செயல்படும் நிலையைக் கூறுவது. மேற்கூறிய இம்மூன்று நிலைகளில் உயிரானது கூடி நிற்பது காரண அவத்தை. வகைகள் – 5
  1. நனவு – இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
  2. கனவு – இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
  3. உறக்கம் – இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
  4. பேருறக்கம் – இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
  5. உயிர்ப்படக்கம் – இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
  • கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை
  • சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை
  • சுத்த நிலையில் செயல்படும் பொழுது மலோலவத்தை

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கைலாயத்துக்குள் வளர்ந்த மரபு எது?
அகச்சந்தானம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *