அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – காணுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  காணுதல்

பொருள்

  • அறிதல்
  • காண்டல்
  • சந்தித்தல்
  • செய்தல்
  • வணங்குதல்

வாக்கிய பயன்பாடு

காணாதத கண்டது மாதிரி ஏன் இப்படி எல்லாத்தையும் திங்கற? வவுறு வலி வரும். சொல்றத கேளு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அவன்கழல் செலுமே.

சிவஞான போதம் – மெய்கண்டார்

கருத்து உரை 

காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல,  காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை தானேயாகக் காட்சி பெற்று காணும்படி காட்டின காரணத்தால் சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.

விளக்க உரை

  • ஒரு பொருளை காண வேண்டும் என விருப்பம் தோன்றும் போது, அதன் வழி நின்று கண் அப்பொருளைக் காண்கிறது. அவ்வாறு காணும் நேரத்தில் உயிரும் உடனிருந்து அப்பொருளைக் காண்கிறது. இவ்வாறு உயிரானது கண்ணுக்கு காட்டும் உபகாரத்தைச் செய்து, அதை காணச் செய்யும் உபகாரத்தையும் செய்கிறது. அதுபோல இறைவன் உயிரோடு இணைந்து காட்டவும் செய்து பின் காணவும் செய்கிறான். அவ்வாறு காணும் பொழுது ஆன்மாவானது இறை மீது அயரா அன்பு கொண்டு அரன் கழல் அடையும்.
  • இவ்வுடல் பெற்று உயிர் அடையும் பேறுகள் இருவகைப்படும். ஒன்று அருளுடன் கூடிய அருள் பேறு, மற்றொன்று சிவப்பேறு.
  • அருள் பேறு – கண் விளக்கின் ஒளியைக் கொண்டு இருள் நீங்கப் பெற்று புறப் பொருள்களைக் காண்பது. ( புற தரிசனம் )
  • சிவப்பேறு – கண்ணானது விளக்கின் ஒளியைக் கொண்டு ஒளிக்கு காரணமாகிய விளக்கையே காணுதல் (அக தரிசனம்)
  • அயரா அன்பின் – இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டும் என்பது பற்றியும் சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும்  என்பதை இது விளக்கும்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அகசந்தானாச்சாரியார் நால்வர் யார்?
திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினி மற்றும் பரஞ்சோதி முனிவர்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.