அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இந்தனம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இந்தனம்

பொருள்

  • விறகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம்
எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன்
வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும்
மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால்
சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி
தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப்
பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப்
பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே,

சிவஞான சித்தியார்

கருத்து உரை

விறகில் தீயினைப் போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் சுவை போலவும், எள்ளினுள் எண்ணெயைப் போலவும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். எனவே இறைவனை அகத்திலோ, புறத்திலோ வணங்கி வழிபட்டால் அவர்களுக்கு அருள்பாலிப்பான். ஆயினும் தங்களைப் பற்றியுள்ள மலம் முற்றிலும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சிவபெருமானை அவனுடைய செந்தாமரை மலர்போன்ற  திருவடி ஞானத்தினால் தங்கள் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளுவித்து அகவழிபாடு இயற்றுவார்கள்.  அத்தகைய அடியார்கட்கு இறைவன் மாயை பற்றி விளக்கி, தானே  தோன்றி அவர்களது மலப்பற்றினை அறவே துடைத்து அருளுவான். நெருப்பில் இட்ட இரும்பானது நெருப்பின் தன்மையை பெறுவது போல இறைவனும் உயிரைத் தன் வண்ணம் ஆக்குவான். தனது பேரானந்தப் பெரும் செல்வம் முழுவதையும் உயிருக்கு அருளுவான்.

விளக்க உரை

  • அகவழிபாட்டின் சிறப்பு எடுத்து உரைத்தல் குறித்தது இப்பாடல்
  • பக்குவப் பட்ட உயிரின் வகையினைக் காலம் முன்வைத்து காட்டுவதற்காக 4 உவமைகள் கூறப்பட்டுள்ளன.
  • தீயானது தன்னில் இடப்பட்டவைகளின் மாசுகளை நீக்கி, தன் வண்ணமாக செய்து விடும். அது போல அகவழிபாடு கொண்ட ஆன்மாவை அதன் மலம் நீக்கி, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை,  முற்றுணர்வு உடைமை,  இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எண் குணத்தான் தன் வண்ணமாக செய்து பர முக்தியைத் தருவான்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *