வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 19

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.

சிவன்

உலகில் நல்ல செய்கையும், கெட்ட செய்கையும் மனிதர்கள் செய்கின்றனர். அவர்களிடத்து அந்தக் கர்மங்கள் இருவகைகளாகக் காணப்படுகின்றன. முன் செய்யப்பட்ட கர்மங்கள், தற்போது செய்யப்படும் கர்மங்கள் என அவைகள் இருவகைப்படும். காட்சிக்கு புலனாகாதது தெய்வம் என்றும், கருவிகளால் செய்யப்படுவது மானுஷம் என்றும் கூறப்படுகிறது. மானுஷம் செய்கை மட்டுமே, தெய்வத்தினாலே தான் பலன் நிறைவேறுகிறது. பயிர்த் தொழிலாகிய விவசாயம் செய்யும் போது உழுவது, விதைப்பது, நாற்று நடுவது, அறுப்பது முதலியவை முயற்சிகள். இவை இரண்டு விதங்களால் கை கூடாமல் இருக்கும், ஒன்று தெய்வத்தின் சங்கல்பம், மற்ரொன்று முயற்சியின் பிழை. நல்ல முயற்சியால் புகழ்ச்சியும், தீய முயற்சியால் இகழ்ச்சியும் உண்டாகும்.

உமை

ஆத்மாவானது கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருவது எப்படி என்பதை எனக்குச் சொல்லவேண்டும்?

சிவன்

இது ரகசியங்கள் எல்லாவற்றிலும் மேலானது. தேவ ரகசியத்தைக் காட்டிலும் ஆத்ம ரகசியம் பெரிதானது. தேவர்களும், அசுரர்களும் ஆத்மா போவதையும் வருவதையும் அறிய மாட்டார்கள். ஆத்மா நுட்பமானதாலும், எதிலும் பொருந்தி இராமல் இருப்பதாலும் அது மனிதர்களால் காண இயலாததாக இருக்கிறது. மாயைகளுக்குள் ஆத்மாவே பெரிய மாயை.

ஆத்ம மாயையால் தான் முட்டையிலிருந்து பிறக்கும் அண்டஜம், வேர்வையிலிருந்து பிறக்கும் ஸ்வேதஜம், வித்து முதலியவற்றை  பிளந்துகொண்டு  பிறக்கும் உத்பித்ஜம், கருப்பையிலிருந்து  பிறக்கும் ஸராயுஜம் ஆகியவற்றில் அந்த ஆத்மா சேருகிறது. இதற்கு புணர்ச்சி, சுக்கிலம், சோணிதம் மற்றும் தெய்வம் ஆகியவை காரணங்கள்.

சுக்கில, சோணிதங்களின் சேர்க்கையால் ஆத்மா கர்பத்தில் பிரவேசித்து கட்டியான உருவமாகிறது. இது அண்டஜம், ஸராயுஜம் இரண்டுக்கும் பொதுவானது.

கர்மங்களுக்கு ஏற்ப அதன் அங்கங்கள் உருவாகின்றன.இவ்வாறு கர்ப்பம் வளர வளர அதன் கூடவே கர்மத்துடன் சேர்ந்த ஆத்மாவும் வளர்கிறது.

பயிர்த் தொழில் காரணம்  முயற்சி என்றும், மழை பெய்விப்பது, முளைப்பது போன்றவை தெய்வம் காரணம் என்பது விளங்கும். ஐந்து பூதங்கள் நிலைகள், கிரங்களின் சஞ்சாரம்,மனிதர் புத்திக்கு எட்டப்படாத, கருவிகளால் செய்யப்படாத நல்லவை, தீயவைகள் அனைத்திற்கும் தெய்வம் காரணம் என்று அறி. இவ்வாறு ஆத்மா கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருகிறது.

முன்னொரு ஆதிகாலத்தில் மனிதர்கள் நல்வினைகளைச் செய்து இரண்டு உலகங்களை அறிந்து இருந்தனர். உலகம் இவ்வாறு இருந்தபோது எல்லோரும் தர்மத்தை விரும்பி இருந்தனர். இதனால் சுவர்கள் எளிதில் நிறைந்தது. இதனால் பிரம்ம தேவர் மனிதர்களை மயங்கச் செய்தார். அது முதல் மனிதர்கள் முன்வினையை அறியவில்லை. அதோடு காம, குரோதங்களையும் சேர்த்தபிறகு அவற்றால் கெடுக்கப்பட்ட மனிதர்கள் சுவர்க்கம் செல்லவில்லை. எனவே இவர்கள் முன்வினை எதுவும் இல்லை என மேலும் பாவங்களைச் செய்தனர். தன்னுடைய லாபத்திற்காக தர்ம காரியங்கள், பரலோகப் பயன்  ஆகியவற்றை மறந்து அழிவு உண்டாக்கும் அஞ்ஞானம் கொண்டனர். இவ்வாறு அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மாயா உலகில் ஆத்மா பிரவேசிக்கிறது.

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *