ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – இலங்குதல்
பொருள்
- ஒளிசெய்தல்
- விளக்கமாகத் தெரிதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தேய்ந்து இலங்கும் சிறுவெண்மதியாய்! நின் திருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப்புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!—அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
விளக்க உரை
- தேய்ந்து விளங்கக்கூடிய பிறைச்சந்திரனை அணிந்தவனே அல்லது தேய்ந்து விளங்கும் வெளிறிய அறிவு உடையவனே – சிலேடை
- உன் தலை மேல் இருப்பவள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். நீ அதைக் கவனிக்காமல் பார்வதியோடு இங்கு வீற்றிருக்கிறாய். உன் மனைவிக்கு பயந்ததாகவும் தெரியவில்லை. அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு இருக்கிறாளோ? வேறு எந்தப் பெண்ணும் இவ்வாறு பொறுமையுடன் இருக்கமாட்டாள். உன் கைகளில் இருக்கும் மழு, ஆயுதம் கண்டு பயந்து உடன்பட்டு இருக்கிறாளோ, இந்த ரகசியத்தை எனக்குச் சொல் என்று சிலேடையாகப் பாடுகிறார்.
- ஏந்து மங்கை – ஏந்தப் பெற்ற மங்கை; இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, பாலாம்பிகா – (வாலாம்பிகை) என்றனர் வட மொழியில்