அமுதமொழி – விகாரி – ஆடி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
   அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
   நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
   பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
   காடான தத்துவத்தைக் கண்டு தேரே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.

பதவுரை

உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60  தத்துவங்கள் உண்மையில் செயல்படும்  சக்தியின் கூறுகள் ஆகும்;  ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்;  உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.

விளக்க உரை

  • சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 19 (2019)


பாடல்

அணைத்துமிகத்தான் உருக்கி எடுத்துப்பார்த்தால்
     ஆதிமிக சோதி என்ற தங்கத் தாய்தான்
நினைத்தபடி தான்குடுக்குஞ் சோதித்தாயை
     நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசைப்பண்ணி
மனதைமிகத் தானிருத்தி சோதிப்பார்த்தால்
     மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினந்து வருங்காலனவன் ஓடிப் போவான்
     சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – ஆக்ஞையில் சோதி வடிவான அன்னையைக் கண்டவர்களை காலன் அணுகான் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பிராணன் தனது வாகனமாக மூச்சுடன் வா (உள்மூச்சு- காற்றுத் தத்துவம்) என்றும்  சி(வெளி மூச்சு – அக்னி தத்துவம்)  என்றும் கூடி குண்டலினி அக்னியை மேலே எழுப்புகிறது. அவ்வாறு எழுந்த அக்னி வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது. (சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன). இவ்வாறு பெறப்படும் அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது. இவ்வாறு எழும் அக்கியானது குருபதம் எனப்படுவதாகிய ஆக்ஞையில் உணர்வு செல்லும்போது ஞானம் ஏற்படுகிறது. அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்ஞையில் நிற்க வேண்டும். தினமும், மனம் வாக்கு காயங்களால் தூயவராகவும் மனத்தை  வாசி எனும் சிவ யோகத்தால் நிறுத்தியவராகவும் இருப்பவர் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களில் கூறிய பொருள்களை சேர்த்து உருக்கி எடுத்து பார்க்கும்போது ஆக்ஞையில்  அடியவர்கள் விரும்பதை அவர்கள் விரும்புகின்ற அளவில் கொடுப்பவளானவளும், தங்கமேனி கொண்ட  தாய் என அழைக்கப்படுபவளும் ஆன சக்தி தென்படுகிறாள். அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் உயிர்களை கொல்ல சினம் கொண்டு வரும் காலன் ஓடிப்போவான்.

விளக்க உரை

  • வாசி/சிவயோகம் என்பது சித்தர்களின் பிராணாயாம முறை என்பதால் குரு முகமாக செய்முறைகளை அறிக.
  • ஆதிமிக சோதி – அறியமுடியா காலத்தால் இருந்து இருப்பவள்; அளவிட முடியா ஜோதி வடிவாக இருப்பவள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 9 (2019)


பாடல்

பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
   பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
   கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
   ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
   அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே

அகத்தியர் – தற்க சாஸ்திரம்

கருத்துநீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும்  சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.

பதவுரை

தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.

விளக்க உரை

  • மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 12 (2019)


பாடல்

பதியான பதியதுதான் பரசொரூபம்
பசுவான வாசியடா காலுமாச்சு
விதியான பாகமாடா வீடதாச்சு
வீடரிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால்
கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று
கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால்
மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து
மாசற்ற சோதியென வாழலாமே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்துவாசி வழி வினைகளை அறுத்தல் பற்றி அகத்தியர் கூறும் பாடல்

பதவுரை

பர சொரூபமாக இருக்கும் பதியே பிரபஞ்ச பிராண சக்தி; உடலில் இருந்து பிராண சக்தியினை தருவதை வாசி என்றும், கால் என்றும் அழைக்க பெறும் காற்றுத் தத்துவமே பசு; ஜீவனுக்கு உடலானதும்,  பிரபஞ்ச பிராணனுக்கு வெட்ட வெளி ஆனதும் ஆனதும் பாசம் எனப்படுவதும்  ஆன வாசி எனும் வீட்டினுள் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் வாசியினை வாகனமாகக் கொண்டு விதி என்று உடலினுள் வருகிறது; இந்த உண்மையை அறிந்து கும்ப நிலையில் மூச்சுக் காற்றை நிறுத்தி இருக்க வேண்டும்; இவ்வாறு  பதி, பசு, பாசம் என்பதை அறிந்தும் உணர்ந்து வாசி யோகத்தைச் செய்தால் முச்சுடர்கள் எனப்படும் சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் ஒன்றாக கூடும் கேசரமாகிய உச்சியில் நின்று ஆடுவதான வெட்டவெளியை தரிசனம் காணலாம்; இந்த நிலையில் எண்ணங்கள் ஆகிய மதியில் இருக்கும் மயக்கங்கள் விலகி ஆதி நிலையாகிய மாசற்ற சோதியாக வாழலாம்.

விளக்க உரை

  • கேசரம் – க+ ஏ+சரம்;  க-வெளி, சரம்- எல்லை, இ- சங்கல்ப சக்தி
  • அசி – பசு பதியை அடையும் வழி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 10 (2019)

பாடல்

பூசியே செவ்வரளிப் புஷ்பம்வாங்கிப்
பூரணியே யென்றுமன் துறுதியாகத்
தேசியே கேசரியே தாயேயென்று
தினந்தோறு மந்திரத்தை செபித்துமைந்தா
பேசியே திரியாமல் வாமம்வைத்துப்
பேரான மாமிசமும் வடைதேன்பாலு
வாசியே மனதடங்க அன்னம்வைத்து
மாங்கனியோ வற்கடலை பயிறும்வையே

யோகஞானம் – 500 (முருகப்பெருமான் அகத்தியருக்கு உபதேசம் செய்தது)

பதவுரை

முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே,  தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.

விளக்க உரை

  1. தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
  2. வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
  • மாமிசம் – மா-ம்-இ- சம்
  • மா – பெருமை மிக்க
  • ம்-இம் எனும் ஊமை மூலம்
  • இ-அருட்பிரணவம்
  • சம்- சுகம்
  • இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும்  எனவும் கொள்ளலாம்.

மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 26 (2019)

பாடல்

நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
     நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
     நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
     மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
     சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே

அகத்தியர் சௌமிய சாகரம்

பதவுரை

மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை  வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில்  தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு,  தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.

விளக்க உரை

  • நலங்குதல் – நொந்துபோதல்; வருந்துதல்; நுடங்குதல்; கசங்குதல்
  • மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒன்றுபட்ட நிலையில்  ஆத்ம ஜோதியை நாடுவது எளியதும், சாத்தியமாகவும் ஆகிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 12 (2018)

பாடல்

ஆமப்பா குருவுக்குத் திருநேத்திரங்கள்
அப்பனே காளகண்ட மான்மழுவினோடு
தாமப்பா புலித்தோலா லாடைசாத்தி
தந்தியுட தோல்போற்றிக் கண்டந்தன்னில்
வாமப்பா அரவமணிந்து விபூதி சாத்தி
மாதுசிவ காமியொரு பாகராய்
ஓமப்பா ரிஷபவா கனத்திலேறி
இச்சைபெறச் சொரூபசித்தி கொடுத்தாள்வாரே

அகத்தியர் பூஜா விதி – 200 – அகத்தியர்

பதவுரை

ஈசன் குருவாய் வரும் பொழுது, மூன்று கண்கள், கருமை நிறம் உடைய கண்டம் கொண்ட மான் மற்றும் மழுவினை கைகளில் ஏந்தி, புலித் தோல் ஆடை உடுத்தி, மெல்லியதான அரவமாகிய பாம்பினை கண்டத்தில் அணிந்து, விபூதி தரித்து சிவகாமி உடன் உமை ஒரு பாகனாய் ரிஷப வாகனத்தில் ஏறி விரும்பியதை அருள சொரூப காட்சி கொடுத்து அருள்வார்.

விளக்க உரை

  • ஈசன் குருவாய் வரும் திறம் சொல்லியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 15 (2018)

பாடல்

மாடுதானாலும் ஒருபோக்குண்டு; மனிதருக்கோ
     அவ்வளவும் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்;
     நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு; அரிய தந்தை
     யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான
     தீயில்விழத் தயங்கினாரே

அகத்தியர்

பதவுரை

ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட  பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.

விளக்க உரை

  • மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
  • தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும்  கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மெய்ஞ்ஞானம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மெய்ஞ்ஞானம்

பொருள்

  • உண்மை அறிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மேவியே எங்குமாய் நிறைந்தோம் என்றீர்
   மெய்ஞ்ஞான முழுவதையும் பெற்றோ மென்றீர்
ஆவியே மும்மூலம் கொள்ளா மற்றான்
   அதிசயமாய் சிரஞ்சீவி யருளு முண்டேன்
தாவியே வாசியதைப் பாரா மற்றான்
   தனவானே யவனாகும் தகைமை செய்வீர்
ஆவியே அறுமுகமே குருவே சுவாமி
   ஐயனே யிந்தவகை யருளு வீரே

முருகன் அகத்தியருக்கு உபதேசித்து அருளிய யோகஞானம் 500

கருத்து உரை

தானே அணுவாகவும், அதன் பொருட்டான அசைவாகவும் ஆகி அண்டம் முதல்  பிண்டம் வரை அனைத்திலும் நிறைந்த வஸ்துவானது,  அணு இல்லா இடம் ஏதும் இல்லாமையால் பிரபஞ்சம் எங்கிலும் நிறைந்தது.  வினைகளின் வழியே வரும் அஞ்ஞானம் விலகும் பொழுது மெய்ஞானம் என்று ஒன்றுள்ளது என்பது புலனாகும். மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்தவர் கந்தக் கடவுள்.  மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கும என்பது நடைமுறை. ஆனால் கந்தனே  மும்மூல வடிவாக ஆனதனால் அவ்வாறான மும்மூல வடிவம் கொண்டப்பின் கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை.  சிரத்தில் இருக்கும் பூரணமான  மெய்ப்பொருள் மலங்களை களையறுத்த பின்  கிட்டும் உன்னத நிலையே சிரஞ்சிவி தன்மையாகும். தான் யார், தன் தன்மை என்ன என்ற உண்மை அறியாது தேகம் விடுதலையே இறப்பு என்பர்.  மாறாகத் தான் யார் எனும் தன்மையினை அறிந்து கொண்டோர் இவ்வுடலை விலக்கும் காலம் ‘இது ஆடை மாறுதல் போல்’  என்று அறிவர்.  இவ்வாறு காயம் நீக்குதலை தாமற்ற மாற்றொன்று என அறிந்தவரே  சிரஞ்சிவி ஆவார்.  உண்மையின் வடிவமாக கந்தன் உருக் கொண்டு நின்றதால் மும்மூலம் கொள்ளாது  சிரஞ்சிவி ஆனான்.  மும்மூலம் கொள்ளுவதன் காரணமாக வாசி கூடி நிலை மாறி வாசியானது சிவா என்று மாறும். இவ்வாறான சிவமே கந்தனானதால் மாறுதலுக்கு உட்படவும் கொள்ளவும் எதுவுமில்லை.  நிதியிலோ நிலையிலோ இல்லை என்ற நிலையில்லாதவரை உலகம் தனவானென்று கூறும். ஆனால் ‘தான் இல்லை’ என்ற உண்மையை அறிந்தவரே உண்மையில் தனவான் ஆவார்கள். ‘தளர்ச்சி இல்லா தேகம்’, ‘நரை முடி இல்லாமை’ ஆகியவை கொண்டிருப்பதுவே அறிவீலிகளால் இளமை என்று குறிக்கப்பெறும். உண்மையில்  ‘தளர்ச்சி இல்லா செயல் ஆக்கம்’, ‘மருட்சி அற்று தீர்மான முடிவு எடுக்கும் நிலை’ ஆகியவையே இளமை ஆகும்.  இவர்களை குமரன் என்றும் கூறுவார்கள். வயதில் முதியவர்கள் செயலில் வேகம் காணும் போது அவரை குமரன் என்று கூறுவார்கள். அந்த நிலையை யாம் வேண்டி நின்றோம். இந்த நிலையை அருளக் கடவீர் என அகத்தியெம்பெருமான் தனது குருவாகிய கந்தக் கடவுளிடம் வேண்டுகிறார்.

விளக்க உரை

  • அகத்தியர் முருகனிடத்தில் ‘அருள்வீர்’ என வேண்டும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் இரண்டு வகைகள் யாவை?
தன்பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்

(இப் பாடலுக்கான விளக்கம் முழுவதும் சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்