
பாடல்
பதியான பதியதுதான் பரசொரூபம்
பசுவான வாசியடா காலுமாச்சு
விதியான பாகமாடா வீடதாச்சு
வீடரிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால்
கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று
கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால்
மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து
மாசற்ற சோதியென வாழலாமே
சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து –வாசி வழி வினைகளை அறுத்தல் பற்றி அகத்தியர் கூறும் பாடல்
பதவுரை
பர சொரூபமாக இருக்கும் பதியே பிரபஞ்ச பிராண சக்தி; உடலில் இருந்து பிராண சக்தியினை தருவதை வாசி என்றும், கால் என்றும் அழைக்க பெறும் காற்றுத் தத்துவமே பசு; ஜீவனுக்கு உடலானதும், பிரபஞ்ச பிராணனுக்கு வெட்ட வெளி ஆனதும் ஆனதும் பாசம் எனப்படுவதும் ஆன வாசி எனும் வீட்டினுள் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் வாசியினை வாகனமாகக் கொண்டு விதி என்று உடலினுள் வருகிறது; இந்த உண்மையை அறிந்து கும்ப நிலையில் மூச்சுக் காற்றை நிறுத்தி இருக்க வேண்டும்; இவ்வாறு பதி, பசு, பாசம் என்பதை அறிந்தும் உணர்ந்து வாசி யோகத்தைச் செய்தால் முச்சுடர்கள் எனப்படும் சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் ஒன்றாக கூடும் கேசரமாகிய உச்சியில் நின்று ஆடுவதான வெட்டவெளியை தரிசனம் காணலாம்; இந்த நிலையில் எண்ணங்கள் ஆகிய மதியில் இருக்கும் மயக்கங்கள் விலகி ஆதி நிலையாகிய மாசற்ற சோதியாக வாழலாம்.
விளக்க உரை
- கேசரம் – க+ ஏ+சரம்; க-வெளி, சரம்- எல்லை, இ- சங்கல்ப சக்தி
- அசி – பசு பதியை அடையும் வழி