தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்; ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்; மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக் காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர்களைந்தான்.
கம்பராமாயணம்
கருத்துஉரை
அகத்தியர், தூய்மையான கடல்களின் நீர் முழுவதையும் உணவாக உண்டு அதனை மீண்டும் உமிழ்ந்த முனிவரும்; அப்படிப்பட்ட செயலால் குறுகியது எனினும் விரும்பத்தக்க உடலை உடைய குறுமுனி என அத்தகையோரும்; வஞ்சகச் செயல்களையுடைய வாட்படையுடைய அரக்கனாம் வாதாபி என்பவனின் வலிய உடலை மகிழ்ந்து உண்டு; உலகமக்களின் கொடிய துன்பத்தைப் போக்கியவரும் ஆவார்.
உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும் இவ்வாறு இல்லாமல் மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் என்ன?
மலை அளவு பொற்குவியல் வைத்திருந்தாலும் எமன் வருகையில் அதை அள்ளிச் செல்வாரோ? (முடியாது என்பது துணிபு) . இவ்வாறு இல்லாமல் மனதினை தந்தையாகிய இறைவன் பால் வைத்தவர்கள் அழியாதவர்கள் என்று துணிந்து ஆடு பாம்பே (என்கிறார்)
காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன் கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித் துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம் பிறைமூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு பூணவே சங்கிலி மங்கென்றேதான் பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்துஉரை
இதுவரையில் பிரம்மா ஆகிய தலைவனைப்பற்றிச் சொன்னேன். இனி மணிபூரகம் பற்றிய கருத்தினை கேட்பாயாக. பிறைபோல பிளவுப்பட்டதும் இரத்தினம்போல் விளங்குவதும் ஆகியது மணிபூரகம். அதைச் சுற்றிலும் பத்து இதழ்கள். பளிங்குபோன்ற நிறம் உடையது பிறைபோன்ற அதன் நடுவே மகாரம் இட்டு ‘********’ * என்று நாள்தோறும் நூறுமுறை செபம் செய்வாயாக.
மணிபூரகம் பத்து இதழ்கள், பத்து எழுத்துக்களைக் கொண்டு மூன்று வட்டங்களுடன் நடுவில் (மகார) எழுத்தும் மகாரத்தின் நடுவில், மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் நாபித் தானத்தில் எழுந்தருளியிருக்கும் அமைப்புடையது..
இது பச்சை நிறமுடையது.
1008-நாடிநரம்புகளும் சூழ நாடி நரம்புகளுக்கெல்லாம் வேர் போல் உள்ளது
நெருப்பு ஜ்வாலையை (ஜடராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி.
பீஜமந்திரம் ‘ரங்’
ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன்
நீல நிற மேனி, வெள்ளிக் கழுத்து, இரு கைகளுடனும் தங்கப் புலித் தோலில் அமர்ந்த திருக்கோலம்.
கைகளில் – சூலம், உடுக்கை, மலர்
பெண் தெய்வம் : பெயர் : லாகிணி.
மூன்று தலைகள், நான்கு கைகள்
கைகளில் – வஜ்ராயுதம்(இடி), காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை
துக்கடா
ருத்ரயாமளம் என்ற தந்திரநூலின்படி மணிபூரகம் 2 விதமான பைரவர் மண்டலமாக குறிப்பிடப்படுகிறது.
வெண்ணிறமேனியுடன், பல அணிகள் அணித்தோர், அர்மாலை, அங்குசம், ஏடு(புத்தகம்), குழல் ஆகியவற்றை ஏந்தியவர்கள்.
ருருபைரவர் – தலைமை .
குரோத தம்ஷடரர்
ஜடாதரர்
விஸ்ரூபர்
வஜ்ரஹஸ்தர்
மஹாகாயர்
வீருபார்
க்ரீடனர்
இந்த தொகுதி ருரு பைரவர் மண்டலம்
நீலநிறமேனியுடன் மிக்க அழகுடயவராய் நான்கு கரங்களிலும், அழல், கதை, குண்டிகை, சக்தி ஆகிய படைக்கலன்களை தாங்கியோராவர்.
சண்டபைரவர் – தலைமை
பிரளயாந்தகர்
பூமிகம்பர்
நீலகண்டர்
விஷ்ணு
குலபாலகர்
முண்டபாலர்
காமபாலர்
இவர்களின் தொகுதி சண்டபைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
சித்திகளை வழங்குவது பைரவர்களுடன் உறையும் யோகினிகளே என்பதால் இவைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
அடையாளம் உரைத்த மூலவட்டத்தின் மேல் அச்சுதனுமிருக்குமந்த பிறை கீழாக கலைமளோடணைய நிற்கும் கமலந்தன்னில் கடிய நால் வட்டமடா சுவாதிட்டானம் துடியாக பவிழ நிறவர்ணமாக தொல்லுலகில் கம்பம் கால் வசங்கள் சுற்றி கடிய அலகை திருபதினாறு வீதி காணவே பஞ்சமியில் பிறை போலாமே.
வர்மலாட சூத்திரம் 300
கருத்துஉரை
இவ்வாறு அடையாளமாக உரைத்திட்ட மூலாதாரத்தின் மேல் மகாவிஷ்ணு தலத்திற்கு கீழாக கலைமகளோடு இருக்கும் தாமரை தன்னில் நான்கு சதுரங்களை உடையது சுவாதிட்டானம். இது பவழ நிறம் இருக்கும். இவ்வாறாக வாசியின் வழியாக மூச்சின் முறையை மாற்றி ஆக்கினை வரை காணவே ஆதாரங்களை கடந்து இறை தரிசனம் பெறலாம்.
ஓவியம் : இணையம்
விளக்கஉரை
‘ஸ்வ:’ என்கிற சொல்லானது பரமானலிங்கம் எனும் பொருள்படும். சுவாதிட்டானம்: ஆறு இதழ்த் தாமரை வடிவமுடையது. அதன் நடுவே நாற்சதுரவடிவம் போன்றும் உள்ளது. இதில் “ந” என்ற ஒலி இருக்கும். அட்சரத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள்
இதன் பீஜமந்திரம் ‘வம்’.
இது நீர் தத்துவத்தை குறிக்கிறது.
குண்டலினியில் இருந்து வெளிப்படும் செஞ்சுடரைச் சுவாதிட்டானத்தில் மனம் காணும் ஆற்றலைப் பெறுமாயின் அதுவே பேரின்பம் அடைவதற்கான அறிகுறி
மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர்ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
திருபதினாறு வீதி – ஆக்கினை
‘உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச் சந்தித்து காணமல் தட்டழிந்தேன் பூரணமே!’ என பூரணமாலையில் பட்டினத்து அடிகள் குறிப்பிடுவதும் இச் சக்கரத்தையே!
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும் அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ ஓம் ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து ஜபம் செய்ய கணபதியும் வல்லபையும் மனம் கனிந்து உன்னிடத்தில் வருவார்கள்.
விளக்கஉரை
மூலாதாரக் கடவுள் – வினாயகர். அவர் ஓங்கார வடிவம் என்பதாலும் மூலாதாரத்தில் ஜபம் செய்யும் போது வினாயகர் தோன்றுவார் எனும் பொருளிலும் விளக்கப்பட்டுள்ளது.
தன்மனமே சாக்ஷியாக – சாட்சி பாவனையுடன் கூடிய வழிபாடு
இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகிவற்றால் குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
இறைவரே, அடியார்களாகிய நாங்கள் `பெரியாரொடு நட்பு கொள்ளுதல் இன்பம் தருவது` என்று கருதியிருந்தாலும், நீர் கபால மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து அதில் இருந்து பெறப்பட்ட பெரிய விஷத்தினை எளிதாக உண்டீர், இந்த அண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லமை இல்லாதவர்களாக இருக்கிறோம். ஆதலினால், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங் கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
திருவருட்பா – இரண்டாம் திருமுறை – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
கருத்துஉரை
நாய் போன்றவனாகிய யான் துன்பக்கடலில் வீழ்ந்து வருந்துதல் அழகோ, நல்லவர்களுக்கு தானம் ஒன்றும் கொடுக்கவில்லை, யாதொன்றும் இல்லாதவன் என் செய்வேன். என்னுடைய அன்னையை போன்றவனே, சிறிதளவு என் மேல் கருணை காட்டினால் ஆகாதா, குழந்தை போன்ற என்னை விட்டு விடுவாயா, விட்டு விட்டால் உலகம் சிரிக்காதோ!
விளக்கஉரை
கருணை கொண்டவன் என்பதால் நீ விட்டுவிட மாட்டாய் என்பது மறைபொருள்
அருளாளர்கள் பெரும்பாலும் தன்னை நாயுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். நாய் பொதுவாக நன்றி உடைய தன்மை கொண்டு இருக்கும். ‘ உன் அருள் கிடைத்தும் நான் நன்றி அற்றவனாக இருக்கிறேன்’ எனும் பொருளில் ஒப்பீடு செய்வார்கள்.
அரசு முதலிய சமித்துக்கள், பசுவின் சாணம் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முந்தைய வடிவத்தை இழந்து உரு மாறிய, அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் நிரம்ப பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாகும்.
தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம், சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று நான்கு வகையான முறையில் ஐந்தெழுத்தாகவும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தாகவும், பஞ்சாட்சரத்துடன் ஓம் சேர்ந்து ஆறெழுத்தாகவும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தாகவும் தனக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே உச்சரித்து விதிப்படி அதன் உச்சரிக்கிற முறைமையால் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும், பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் என்னுடைய இருதயத்திலே வைத்து பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டற அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
விளக்கஉரை
பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து – சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை அறிந்து
ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்தி – சிவ சக்தி வடிவமாக (சிவ), சக்தி சிவ வடிவமாக (வசி) உபாசனை செய்ய அத்தன்மை உண்டாக்கும்.
பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணார் புவி.
திருநெறி 8 – திருவருட்பயன்- உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மானைக் காட்டி மானைப் பிடித்தல் போல், பக்குவப்பட்ட ஆன்மாக்களை முன் நிற்கச் செய்து தன்வசமாக்கிக் கொள்வதற்காக மானிட தேகம் எனும் சட்டையை சாத்திக்கொண்டு ஆசாரியமூர்த்தமாக எழுந்தருளி வந்ததென்று ஆன்மாக்கள் அறியச் செய்வார்கள்.
நேர்மையான (தவமுனிவருக்கும்) மான் ஈன்ற புதல்வியாகிய வள்ளியம்மையாரை வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், பெருமானும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து ”பேசாத மவுன நிலையில் சொற்களை விலக்கி சும்மா இருப்பாயாக!”, என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்து போனது!
விளக்கஉரை
பொதுவாக வள்ளி, முருகன், தெய்வானை என்பது சக்தியின் வடிவம்.(முறையே இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி).
ஞான நிலை வாய்க்கப் பெற்ற முருகன் இச்சைகளை விலக்க ஆணையிட்ட உடன் ஞானம் கிடைத்துவிட்டது என்கிறார்.
பிறவான் இறவான் – பிறப்பிலி; பிறப்பு இறப்பு அற்றவன்
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
கருத்துஉரை
கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக
விளக்கஉரை
*இன்று குமரகுருபரர் குருபூசை*. இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர்.
இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் பெற்றார்.
இவர் எழுதிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
திரிமலத்தார் ஒன்றதனிற் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆயும் உளர்.
திருநெறி 8 – உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மூன்று மலம் உடையவர்கள் திரிமலத்தார். ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலத்தினையுமுடைய ஆன்மாக்கள் சகலரென்றும், ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் பிரளயாகலர் என்றும், ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் ஆகிய மூன்று விதமான ஆன்மாக்களாக இருக்கும்.
தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில் கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே வாராது அகல், அந்தகா, வந்த போது உயிர் வாங்குவனே.
கந்தர் அலங்காரம்
கருத்துஉரை
நட்சத்திரக் கூட்டத்தில் பகுதி ஆகிய ஆறு தாய்கள் பேரும் தந்த முலைப் பாலை உண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப் பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின் திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் எனது சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது நீங்கிப் போவாயாக, மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!
விளக்கஉரை
ஆறு ஆதாரக்களையும் தாண்டி யோக அப்யாசத்தால் துரியாதீத அப்யாசம் செய்யும் போது மரணமில்லா பிறவி வாய்க்கும்.
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
மக்களைப் பெற்று குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலே அடிப்படை என வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல. இதை அறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மூன்று கோட்டைகள் உடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே !
அடியவர்கட்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற (அமரத்தன்மை) திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போன்றவனே, உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? என்னுடைய இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேள்ஆமை – நீள்ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.
தேவாரம் – 11ம் திருமுறை – காரைக்காலம்மையார்
கருத்துஉரை
தொலைவில் இருந்து நோக்குகையில் அவன் திருமேனி சிவப்பாகத் தோன்றியும், அணுகிய போது கண்டம் வேறு நிறமாக (கருமையாக) இருப்பதைப் போலவே, பெருங் கருணை உடையவனைப் போல வலிய வந்து ஆண்டு கொண்டவன் என் அல்லலைத் தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க, நான் பலமுறை முறையிட்டுக் கேளாமல் இருக்கிறான். (இன்னும் முறையிடல் வேண்டும் போலும் என்பது போல்.)
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ் சாதா ரணமாஞ் சதாசிவந் தானே.
திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
சதாசிவம் தானே ஆதாரமாக நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.
விளக்கஉரை
சிவபேதம் ஒன்பது. இவை நவந்தரு பேதம் எனப்படும்.
விந்து – பரவிந்து, நாதம் – பரநாதம் என தனித்தனியே இரண்டாகும். சிவாமங்களின் வேறுபாட்டுக்கு ஏற்ப சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை சக்தி, சிவம் என்றும், விந்து நாதங்களை சக்தி, சிவம் என்றும் கூறுவர்.
சதாசிவத்துக்கு மேல் உள்ள நான்கும் அருவம், கீழ் உள்ள நான்கும் உருவம். சதாசிவம் மட்டும் அருவம், உருவம் மற்றும் அருவுருவம். எனவே சதாசிவ மூர்த்தமே அனைத்து லிங்கமும் ஆகும். ஆகவே சதாசிவ மூர்த்தத்தை வழிபட சிவபேதம் அனைத்தையும் வழிபட்டது ஆகும்.
சிவன், தான் நேரே அருளுதல், குருமூர்த்தமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் அருளுவார். இவ்வாறான ஆதி குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அந்த உணர்வினால், பக்குவப்படுத்தி, பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் எல்லா நலங்களையும் அருளுவார்.