‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மணிபூரகம்
பொருள்
- உந்திக்கமலம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம்
பிறைமூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து உரை
இதுவரையில் பிரம்மா ஆகிய தலைவனைப்பற்றிச் சொன்னேன். இனி மணிபூரகம் பற்றிய கருத்தினை கேட்பாயாக. பிறைபோல பிளவுப்பட்டதும் இரத்தினம்போல் விளங்குவதும் ஆகியது மணிபூரகம். அதைச் சுற்றிலும் பத்து இதழ்கள். பளிங்குபோன்ற நிறம் உடையது பிறைபோன்ற அதன் நடுவே மகாரம் இட்டு ‘********’ * என்று நாள்தோறும் நூறுமுறை செபம் செய்வாயாக.
* இது யோக மார்க்கமானது என்பதாலும், மந்திரங்கள் குருமுகமாக அறியப்படவேண்டும் என்பதாலும் மந்திரங்கள் மறைபொருளாக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் / ஓவியம் : இணையம்
விளக்க உரை
- மணிபூரகம் பத்து இதழ்கள், பத்து எழுத்துக்களைக் கொண்டு மூன்று வட்டங்களுடன் நடுவில் (மகார) எழுத்தும் மகாரத்தின் நடுவில், மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் நாபித் தானத்தில் எழுந்தருளியிருக்கும் அமைப்புடையது..
- இது பச்சை நிறமுடையது.
- 1008-நாடிநரம்புகளும் சூழ நாடி நரம்புகளுக்கெல்லாம் வேர் போல் உள்ளது
- நெருப்பு ஜ்வாலையை (ஜடராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி.
- பீஜமந்திரம் ‘ரங்’
- ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன்
- நீல நிற மேனி, வெள்ளிக் கழுத்து, இரு கைகளுடனும் தங்கப் புலித் தோலில் அமர்ந்த திருக்கோலம்.
- கைகளில் – சூலம், உடுக்கை, மலர்
- பெண் தெய்வம் : பெயர் : லாகிணி.
- மூன்று தலைகள், நான்கு கைகள்
- கைகளில் – வஜ்ராயுதம்(இடி), காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை
துக்கடா
ருத்ரயாமளம் என்ற தந்திரநூலின்படி மணிபூரகம் 2 விதமான பைரவர் மண்டலமாக குறிப்பிடப்படுகிறது.
வெண்ணிறமேனியுடன், பல அணிகள் அணித்தோர், அர்மாலை, அங்குசம், ஏடு(புத்தகம்), குழல் ஆகியவற்றை ஏந்தியவர்கள்.
- ருருபைரவர் – தலைமை .
- குரோத தம்ஷடரர்
- ஜடாதரர்
- விஸ்ரூபர்
- வஜ்ரஹஸ்தர்
- மஹாகாயர்
- வீருபார்
- க்ரீடனர்
இந்த தொகுதி ருரு பைரவர் மண்டலம்
நீலநிறமேனியுடன் மிக்க அழகுடயவராய் நான்கு கரங்களிலும், அழல், கதை, குண்டிகை, சக்தி ஆகிய படைக்கலன்களை தாங்கியோராவர்.
- சண்டபைரவர் – தலைமை
- பிரளயாந்தகர்
- பூமிகம்பர்
- நீலகண்டர்
- விஷ்ணு
- குலபாலகர்
- முண்டபாலர்
- காமபாலர்
இவர்களின் தொகுதி சண்டபைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
சித்திகளை வழங்குவது பைரவர்களுடன் உறையும் யோகினிகளே என்பதால் இவைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)