‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சுவாதிட்டானம்
பொருள்
- தனது இடம்
- கொப்பூழ்
- சுவாதிஸ்டானம் – வடமொழி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அடையாளம் உரைத்த மூலவட்டத்தின் மேல்
அச்சுதனுமிருக்குமந்த பிறை கீழாக
கலைமளோடணைய நிற்கும் கமலந்தன்னில்
கடிய நால் வட்டமடா சுவாதிட்டானம்
துடியாக பவிழ நிறவர்ணமாக
தொல்லுலகில் கம்பம் கால் வசங்கள் சுற்றி
கடிய அலகை திருபதினாறு வீதி
காணவே பஞ்சமியில் பிறை போலாமே.
வர்மலாட சூத்திரம் 300
கருத்து உரை
இவ்வாறு அடையாளமாக உரைத்திட்ட மூலாதாரத்தின் மேல் மகாவிஷ்ணு தலத்திற்கு கீழாக கலைமகளோடு இருக்கும் தாமரை தன்னில் நான்கு சதுரங்களை உடையது சுவாதிட்டானம். இது பவழ நிறம் இருக்கும். இவ்வாறாக வாசியின் வழியாக மூச்சின் முறையை மாற்றி ஆக்கினை வரை காணவே ஆதாரங்களை கடந்து இறை தரிசனம் பெறலாம்.
ஓவியம் : இணையம்
விளக்க உரை
- ‘ஸ்வ:’ என்கிற சொல்லானது பரமானலிங்கம் எனும் பொருள்படும். சுவாதிட்டானம்: ஆறு இதழ்த் தாமரை வடிவமுடையது. அதன் நடுவே நாற்சதுரவடிவம் போன்றும் உள்ளது. இதில் “ந” என்ற ஒலி இருக்கும். அட்சரத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள்
- இதன் பீஜமந்திரம் ‘வம்’.
- இது நீர் தத்துவத்தை குறிக்கிறது.
- குண்டலினியில் இருந்து வெளிப்படும் செஞ்சுடரைச் சுவாதிட்டானத்தில் மனம் காணும் ஆற்றலைப் பெறுமாயின் அதுவே பேரின்பம் அடைவதற்கான அறிகுறி
- மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர்ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
- திருபதினாறு வீதி – ஆக்கினை
- ‘உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச் சந்தித்து காணமல் தட்டழிந்தேன் பூரணமே!’ என பூரணமாலையில் பட்டினத்து அடிகள் குறிப்பிடுவதும் இச் சக்கரத்தையே!
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)