ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – முண்டம்
பொருள்
- நெற்றி
- தலை, கை, கால் போன்றவற்றைத் தவிர்த்து இருக்கும் உடல் மட்டும்
- அறிவற்றவன் (வசைச்சொல்லாக)
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்
முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்
கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்
கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்
பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்
பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்
அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
இறைவரே, அடியார்களாகிய நாங்கள் `பெரியாரொடு நட்பு கொள்ளுதல் இன்பம் தருவது` என்று கருதியிருந்தாலும், நீர் கபால மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து அதில் இருந்து பெறப்பட்ட பெரிய விஷத்தினை எளிதாக உண்டீர், இந்த அண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லமை இல்லாதவர்களாக இருக்கிறோம். ஆதலினால், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.