அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இம்பர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இம்பர்

பொருள்

  • இவ்வுலகம்
  • இவ்விடத்து
  • பின்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு
வம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி
இம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்
நம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே.

தாயுமானவர்

கருத்து உரை

செம்பொன் போன்று திகழ்கின்ற திருமேனியினையுடைய செழுமையான ஒளி வீசும் சுடரே! முற்றும் பொல்லா சிறுமை உடையவனாகிய எளியேன், நின் திருவடியினை வாழ்த்தும் நல்லறிவின்றி, இவ்வுலக வாழ்வின் மீது வேட்கையுற்று மனம்வைத்தேன். அடியேனை ஆண்டு அருளும் நம்பியே! நீ கருணை புரிந்து வா என்று அழையாவிட்டால் எளியேன் என்ன செய்ய இயலும்?

விளக்க உரை

மாயையினை அழிக்க இறைவிருப்பம் இன்றி நிகழாது எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மருள்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மருள்

பொருள்

  • மயக்கம்
  • பேயாட்டம்
  • பயம்
  • திரி புணர்ச்சி
  • வியப்பு
  • உன்மத்தம்
  • கள்
  • குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று
  • எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை.
  • பெருங்குரும்பை
  • பேய்
  • ஆவேசம்
  • புல்லுரு

வாக்கிய பயன்பாடு

பானை உள்ளேயும், வெளியிலயும் ஆகாசம் தான். அந்த கோட்ட கண்டுபுடிக்கிறத்துக்கு தான் எல்லா கஷ்டமும். அதான் மருள் புரிஞ்சா சரி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

வள்ளலார்

கருத்து உரை

அருள் உருவாகிய பெருமானே! யான் செய்கின்ற வேண்டுகோளை நீ உனது திருச்செவியில் ஏற்று எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்; கோபம் காமம் ஆகிய குற்றங்கள் அணுவளவும் என்னை வந்து பொருந்துதல் கூடாது; மருட்சி தரும் எல்லா உலகங்களிலும் அம்மருட்சி நீங்கித் தெளிவு பெற்று ஞான அடைந்திட அம்பலத்தில் எழுந்தருளும் வள்ளலாகிய உன்னை வாழ்த்தி வழிபடல் வேண்டும்; அறியாமையாகிய இருள் வந்து என்னைப் பொருந்துதல் கூடாது; அன்பால் என்னை அடுத்தவர்கள் சுகம் பெறுதல் வேண்டும்;  எல்லா உயிர்களும் இன்பமடைய வேண்டும்; மெய்ப்பொருளாகிய உனது திருவுருவில் என்னை உடையவனாகிய நீயும் நானும் கூடிக் கலந்து ஒன்றி உயர்தலை வேண்டுகிறேன்.

விளக்க உரை

  • திருஅவதார தினம் – அக்டோபர் 5, 1823
  • அருளா – சிவபெருமானுக்கு அருளே திருமேனியாதல் பற்றி
  • கோபம், காமம் ஆகிய குற்றங்கள் சிறிது உண்டாயினும் அவற்றால் விளையும் தீங்கு பெரிதாதலால், “அணுத் துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்” எனும் வரிகள்
  • மருள் – பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்வது மருள். அது பற்றி மருளாய உலகம் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும்” என்று புகல்கின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – புகல்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  புகல்தல்

பொருள்

  • கூறுதல்

வாக்கிய பயன்பாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பட்டினத்தார்

கருத்து உரை

மனமே! இப்பூவுலகில் செல்வத்தால் உருவாகும் தீமைகள் எத்தனை எத்தனை; பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த செல்வம் தான் எத்தனை எத்தனை;  இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வை நீங்கும் காலத்தில் கூடவே வராது. உடைந்ததான காதற்ற ஊசிகூட இறப்பிற்குப் பின் கூட வராது என்பதை உணர்ந்து,  திண்மையான தோள்களை உடையவரும், திருஅண்ணாமலையில் வீற்றிருப்பவருமான சிவபெருமானுடைய திருவடிகளே கதியென சரணம் அடைந்திடுவாய். எப்போதும் அவரையே துதி செய்திடுவாய்.  

துக்கடா- சைவ சித்தாந்தம் வினா விடை

ஞானாமிர்தத்தை அருளியவர் யார்?
வாகீசமுனிவர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நாத்திகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நாத்திகம்

பொருள்

  • கடவுள் இல்லை என்னும் கொள்கை
  • தெய்வ நிந்தனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

உலகியலையும் அது சார்ந்து வரும் வாழ்வும் மட்டுமே உண்மை என்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் எதுவும் இன்றித் தன்னை அடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.

அக அனுபவம் சார்ந்து.

தனது மூச்சுக் காற்றின் நடையும் அது சார்ந்த அனுபவங்கள் மட்டுமே உண்மை என்று பொருள் கொள்ளக்கூடாது. பஞ்ச இந்திரியங்கள் வழியாக படைகள் போல் வரும் தடைகள் எல்லாம் விலக்கி தன்னை அடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.(பொருள் தவறாக இருப்பின் மன்னித்து அருள வேண்டும்)

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருக்களிற்றுப்படியாரை அருளியவர் யார்?
திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பாவித்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பாவித்தல்

பொருள்

  • எண்ணுதல்
  • தியானித்தல்
  • பாவனைசெய்தல்
  • நுகர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சீவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

‘சேடம்’ எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்கு முன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட இப் புவனாபதி தேவியை, ஒடுக்கி கொள்ளுதற்குரிய மந்திரம், கிரியை ஆகிய பாவனைகளால் எல்லோராலும் எளிதில் அணுக இயலா மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வைத்து இருதயத்தில் ஒடுக்க வேண்டும். இது நீ நினைத்தவற்றை எல்லாம் உனக்குக் கொடுக்கும்.

விளக்க உரை

  • இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது
  • உத்வாபனம் – மீட்டுக் கொள்ளுதல்.
  • அங்க, கர நியாசங்களின் மந்திர உபாசனையாலும், எவருக்கும் எட்டாத “இயந்திர ராசன்’ எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனாலும், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கு இஃது உரியது அல்ல அறியப் படும்.
  • தருமை ஆதீன பதிப்புகளுக்கும், ஏனைய பதிப்புகளுக்கும் வேறுபாடு இருந்தாலும் நம்பகத்தன்மைக்காக தருமை ஆதின பதிவு வார்த்தைகளே எடுத்தாளப்படுகிறன.
மற்ற பதிப்புகள் தருமை ஆதீனப் பதிப்பு
சேவிப் சீவிப்
வாபனத்தால் வாகனத்தாற்
கியாவர்க்கு கியாவர்க்கும்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருவுந்தியாரை அருளியவர் யார்?
திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சேடம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேடம்

பொருள்

  • மிச்சப்பொருள்
  • கழிந்தமீதி
  • எச்சில்
  • இறைவனுக்குப் படைக்கும் பொருள்
  • அடிமை
  • சிலேட்டுமம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால “நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சீவியே**.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். பால் அன்னத்தை மந்திரத்தோடு ஜெபித்து, நிவேதிக்க வேண்டும். வழிபாடுயாவும் முடிந்தபின்பு  நான்கு திசைகளிலும் ‘நாரதாயை சுவாகா’ என்று நிவேதிக்க வேண்டும்.பின் நிர்மால்யத்தை அகற்றி நிவேதனத்தை உண்க.

விளக்க உரை

  • பூஜைக்குரிய நியமங்கள் குறித்தது இப்பாடல்.
  • சீவி – உட்கொண்டு ஜீவித்தல்
  • ** சேவியே – என்று சில பதிப்புகளில் காணப்படுகிறது. தருமை ஆதீன பதிப்புகளில் மேற் கூறியவாறு இருப்பதாலும், நம்பகத்தன்மைக்காகவும் ‘சீவியே’ என்பது எடுத்தாளப் படுகிறது.
  • “பால் போனகம்” –  சாக்த மார்கத்தில் வாம மார்க்க வழிபாடு போன்றவை இருந்தாலும் அவ்வாறான நிவேதனங்கள்  விலக்க வேண்டும்.
  • பாகம் – சமைக்கப்பட்ட பொருள்.
  • “சேடம்” – நிர்மாலியம். அதனைக் உட்கொள்ளுதலைச் சேவித்தலாகக் கூறியது மரபு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார்க்கு முற்பட்ட சித்தாந்த சாத்திரங்கள் எவை?
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துய்ய

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  துய்ய

பொருள்

  • தூய்மையுள்ள
  • கலப்பற்ற
  • உறுதியான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

மேலே குறிப்பிட்டவாறு பூஜை செய்யும் போது சிவந்த நிறம் கொண்டவளாய், செம்பட்டு உடை அணிந்தவளாய், கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும் உடையவளாய், திருமேனியில் அணிகலன்களையும்  இரத்தின ஆபரணங்களையும், தூய்மையான கிரீடம் அணிந்தவளாய் புவனாபதி அம்மை தன் வடிவில் தோன்றுவாள்.

விளக்க உரை

  • புவனாபதி தியானத்திற்கு உரிய அம்மையின் வடிவு கூறப்பட்டது
  • ரத்தின மாம்மேனி – இரத்தினம் போன்ற தோற்றம் உடைய திருமேனி

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் சித்தி பெற்ற இடம் எது?
சிதம்பரதிற்கு அருகில் கொற்றவன்குடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆவாகனம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஆவாகனம்

பொருள்

  • விக்ரகத்தில் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

புவனாபதி அம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தில் காமாதி குற்றங்கள் நீங்கித் தூய்மையுடையதாக செய்து, வெளியில்  நிறை குடம், திருவுருவ மற்றும் இச்சக்கரம் என்பவைகளில், அந்த அந்த மறைமொழிகளால், (மந்திரங்களால்) ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டவம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனீயம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பாணீயம், ஜெப சமர்ப்பணம், ஆராத்திரிகை செய்து முடித்து, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நிற்பாயாக.

விளக்க உரை

  • புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை குறித்தது இப்பாடல்.
  • அகத்தினில் ஆவாகனம் – நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் – வரைவழைத்தல்
  • பிராணப் பிரதிட்டை – உயிர் கொடுத்து நிலைப்பித்தல்.
    சோடச பட்டியல் – புறத்தில் குடை, ஸ்தாபனம், பாத்யம் கொடுத்தல், ஆசனமளித்தல், அர்க்கியம், அபிஷேகம் வஸ்திரம், சந்தனம், புஷ்பாஞ்சலி, தூயதீபம், நைவேத்தியம், பலி போடுதல், ஹோமம், ஸ்ரீபலி, கேயம் வாத்தியம், நர்த்தனம், உத்வாஸனம்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் பிறந்து வாழ்ந்த தலம் எது?
சிதம்பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பூவை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பூவை

பொருள்

  • பெண்
  • காயாம்பூ
  • நாகணவாய்ப் புள்/பறவை – மைனா
  • குயில்
  • மடியும் வீரர் கூட்டம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

கயிலாயத்தில் முன்னர் உரைத்த சக்கரத்தின், வெளியே  பொருந்தும் கோர்வையான இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்`  எனும் பீஜங்களை  எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்கார வடிவில் சக்கரம் போல் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடுக.

விளக்க உரை

  •  புவனாபதி சக்கரத்தை அமைக்கும் முறை குறித்து கூறப்பட்ட பாடல்.
  • சைவ அனுட்டாத்திகளுக்கு சொல்லப்படும் ‘ஓம் ஹிருதாய நம:’ என்பது தொடங்கி ‘ஓம் நேத்திரத்திராய நம’ வரையிலான மந்திரங்கள் போல், புவனாபதி சக்கரத்திற்குச் சொல்லப்பட்ட பீஜாட்சரங்கள், `ஷ்ரீம்’ தொடங்கி ‘ ‘ஆம்` வரையினில் ஆறு ஆகும். இவைகள் கர நியாச அங்க நியாசங்களும் இவற்றால் செய்யப்பட வேண்டும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞான சம்பந்தர் சித்தி பெற்றத் தலம் எது?
சிதம்பரம் அருகில் திருக்களாஞ்சேரி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மேவு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மேவு

பொருள்

  • மேன்மை
  • தடவு

வாக்கிய பயன்பாடு

மேவு தொழில்ன்னு உலகத்திலெ எதுவும் இல்ல. கெடக்கிற வேலயப் பாக்க கத்துக்கோ. அப்புடுதேன் சொல்லிப்புட்டேன்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

முந்தைய முந்தைய பாடலில் குறிப்பிட்ட சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடை எட்டிலும், எட்டு ‘ஹகார’ மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம்’ என்னும் பீஜங்களை எழுதுக.

விளக்க உரை

  • பீஜங்களை எழுதும் / வரையும் முறை குறித்து

துக்கடா சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞான சம்பந்தர் வாழ்ந்த தலங்கள் எவை?
மருதூர், சிதம்பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இடுதல்

பொருள்

  • வைத்தல்
  • போகடுதல்
  • பரிமாறுதல்
  • கொடுத்தல்
  • சொரிதல்

வாக்கிய பயன்பாடு

என்னாத்த இட்டாந்தோம், வாரிகிட்டு போக!

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

முந்தைய பாடலில் கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீஜங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேல் பகுதியிலும், `ஹ்ரீம்` என்னும் பீஜத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி நேர்த்தியான அழகிய வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளியில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அந்த இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயிரெழுத்துப் பதினாறனையும் (சமஸ்கிர எழுத்துக்கள் முன்வைத்து ) அகாரம் முதலாக முறையாக எழுதுக.

விளக்க உரை

  • முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி?” குதம்பைச் சித்தரின் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞான சம்பந்தர் அவதரித்த தலம் எது?
திருப்பெண்ணாகடம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இயந்திரராசன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இயந்திரராசன்

பொருள்

  • புவனாபதி சக்கரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

திருமுறை 10 – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

வழிபடுவோர்க்கு எல்லாப்பயனையும் தருவதாக இருக்கும், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை குரு உபதேச முறைப்படி துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து,  இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச்செய்து, பிறவி நீக்கத்தைச் விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.

விளக்க உரை

  • இயந்திர ராசன்` – ஆண்பாலாகக்கூறியது வடமொழி மதம் என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது. முந்தைய பாடலில் சக்தியோடு சிவம் கலந்தே நிற்கும் என்றே வருகிறது. என்வே ராஜாதி ராஜன் என்பது போல் இயந்திரங்களுக்கு ராஜன் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இது என் தனிப்பட்டக் கருத்து(கற்றந்தோர் சபை விளக்கம் அளிப்பின் தெளிந்து மகிழ்வு அடைவேன்)
  • அங்க நியாசமே என்று கூறினாலும் கரநியாசமும் கூறுதல் கருத்தாம்.(நியாசம் – முத்திரை பதித்தல் – மந்திராட்சரங்களால் தேவதைகளை அந்த அந்த உறுப்புக்களில் வைக்கும் கிரியை ) `அவைகளை இதற்கேற்பச் செய்க` என்றது, `இச் சக்கரத்தில் அடைக்கப்படும் பீசங்களாலே செய்க` என்ற பொருளில்

 துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருணந்திசிவம் அவதரித்து வாழ்ந்தத் தலம் எது?
திருத்துறையூர்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அற்று

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அற்று

பொருள்

  • அத்தன்மையது
  • அதுபோன்றது
  • ஓர்உவமஉருபு
  • ஒருசாரியை.

வாக்கிய பயன்பாடு

நாம் ஒண்ணும் நாதி அத்துப் போவல. எல்லாம் அவ பாத்துப்பா. ஏன் ஓய் கவலப்படுறீர்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

திருமுறை 10 – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய ‘பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்று ஒழியும். அவ்வழியே  பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம். இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.

விளக்க உரை

  • பராவித்தை யோக நிலையில் செய்யப்படக்கூடியது; அது பெரும்பயன் தரத்தக்கது என்பதை விளக்கும் பாடல்
  • நாதத்தால் வரும் ஞானமகிய ‘வைந்தவ ஞானம்’  மட்டுமின்றி  `விந்துவும் அற்றொழிந்தது` என்ற பொருளில் அவ்வரிகள்.
  • ஆறு ஆதாரம், சகத்திரதாரம், நிராதாரம் என்று எட்டுக்கு பொருள் கூறுவாரும் உளர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார் வாழ்ந்து சித்தி பெற்றத் தலம் எது?
திருவெண்ணை நல்லூர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஆகம்

பொருள்

  • உடல்
  • மார்பு
  • மனம்
  • சுரை

வாக்கிய பயன்பாடு

ஆகம் வுட்டு பேசினா எல்லா வியாதியும் போயிடும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

திருமுறை 10 – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பராசத்தி வடிவமாய் உள்ளது ஒன்றே; அதுவே சிவத்திற்கும் வடிவம் ஆகும். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் வாய்க்கப்பெறும். பராசத்தி ஒன்றாக இருப்பினும் சிவன் அங்கியாய் நிற்கிறார். சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்பதால் எட்டாய்ப் பிரிந்து குணங்கள் உண்டாகின்றது. சத்தியானவள்  பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் ஆகிய வடிவங்களாக பிரிந்து நிற்கையில் ஈசன் அந்தந்த வடிவங்களின் அங்கமாய் நிற்கிறார்.

விளக்க உரை

  • ஸ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியினது இயல்பு தெளிவிக்கும் பாடல்
  • அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று யோக முறைப்படி கூறிவாரும் உண்டு.
  • (தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை – சைவ முறைப்படி கூறுவாரும் உண்டு)

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார் அவதரித்த ஊர் ஏது?

திருப்பெண்ணாகடம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செப்புதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  செப்புதல்

பொருள்

  • சொல்
  • விடை
  • செம்பு
  • சிமிழ்
  • நீர்வைக்கும்குடுவை
  • சிறுமியர்விளையாட்டுப்பாத்திரம்
  • இடுப்பு

வாக்கிய பயன்பாடு

நீ செப்புற எதுவுமே காதுல ஏறல.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

திருமந்திரம் – 10ம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்;  முடிவான உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே(`க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்,ஸ, க, ல, ஹரீம்` ) மந்திரங்களில் முதன்மையாயது. இம்மந்திரத்திற்கு உரிய தேவியின் பெருமையை ஆராந்தால் இவளையன்றித் தெய்வம் வேறில்லை என்பதை அறியலாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஸ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின் கடலாகவும் விளங்கும். ஸ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் சரீர வடிவாகிய சிதாகாசமாம்.

விளக்க உரை

  • மேலே கூறப்பட்ட மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றின் சிறப்பினையும் விளக்கும் பாடல்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை 

புற சந்தானத்தின் வேறு பெயர் என்ன?
பூதப்பரம்பரை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ககாராதி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ககாராதி

பொருள்

  • ‘க’ எனும் எழுத்தை முதன்மையாக் கொண்ட ஸ்ரீவித்தை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திரம் – 10 திருமுறை – திருமூலர்

கருத்து உரை

`ஸ்ரீ வித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள முடியாத மெலியோர்க்குக்காக  அமைந்தது இந்த புவனாபதிச் சக்கரம்.  ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.

விளக்க உரை

  • காரத்தை(ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்`) முதலில் உடைமை பற்றி – `காதி வித்தை`. ஹகாரத்தையே தமிழ் முறையால், ‘அகாரம்’ . ஹகாராதி      ( `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்`). ஸகாரதி (`ஸ, க, ல, ஹரீம்` ) –  “சகாராதி’ . இப்பதினைந்தெழுத்தின் தொகுதியே `பஞ்ச தசாட்சரி`. `லலிதா திரிசதி தோத்திரம்` முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15 X 20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
  • இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை முடிவில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம் ஆகியவை குறித்து விளக்கமான நூல்கள் உள்ளன. இது சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதம்.
  • இப் ‘பஞ்ச தசாட்சரி மந்திரம்’ காயத்திரியின் மற்றொரு வடிவம்`;காயத்திரியினும் இது மிக மேலானது; காயத்ரி போன்று வெளிப்படையாக கூறாமல் மிக மறை பொருளாகச் சில சங்கேத குறியீட்டுச் சொற்களால் கூறுகின்றது. இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது
  • `வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதி – `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்`
  • காமிய முத்தி – இவற்றையும் தரும். இதனால், இது சத்தி வழிபாடாகிய ஸ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்பு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அக சந்தானத்தின் வேறு பெயர் என்ன?
தேவப்பரம்பரை

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – காணுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  காணுதல்

பொருள்

  • அறிதல்
  • காண்டல்
  • சந்தித்தல்
  • செய்தல்
  • வணங்குதல்

வாக்கிய பயன்பாடு

காணாதத கண்டது மாதிரி ஏன் இப்படி எல்லாத்தையும் திங்கற? வவுறு வலி வரும். சொல்றத கேளு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அவன்கழல் செலுமே.

சிவஞான போதம் – மெய்கண்டார்

கருத்து உரை 

காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல,  காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை தானேயாகக் காட்சி பெற்று காணும்படி காட்டின காரணத்தால் சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.

விளக்க உரை

  • ஒரு பொருளை காண வேண்டும் என விருப்பம் தோன்றும் போது, அதன் வழி நின்று கண் அப்பொருளைக் காண்கிறது. அவ்வாறு காணும் நேரத்தில் உயிரும் உடனிருந்து அப்பொருளைக் காண்கிறது. இவ்வாறு உயிரானது கண்ணுக்கு காட்டும் உபகாரத்தைச் செய்து, அதை காணச் செய்யும் உபகாரத்தையும் செய்கிறது. அதுபோல இறைவன் உயிரோடு இணைந்து காட்டவும் செய்து பின் காணவும் செய்கிறான். அவ்வாறு காணும் பொழுது ஆன்மாவானது இறை மீது அயரா அன்பு கொண்டு அரன் கழல் அடையும்.
  • இவ்வுடல் பெற்று உயிர் அடையும் பேறுகள் இருவகைப்படும். ஒன்று அருளுடன் கூடிய அருள் பேறு, மற்றொன்று சிவப்பேறு.
  • அருள் பேறு – கண் விளக்கின் ஒளியைக் கொண்டு இருள் நீங்கப் பெற்று புறப் பொருள்களைக் காண்பது. ( புற தரிசனம் )
  • சிவப்பேறு – கண்ணானது விளக்கின் ஒளியைக் கொண்டு ஒளிக்கு காரணமாகிய விளக்கையே காணுதல் (அக தரிசனம்)
  • அயரா அன்பின் – இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டும் என்பது பற்றியும் சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும்  என்பதை இது விளக்கும்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அகசந்தானாச்சாரியார் நால்வர் யார்?
திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினி மற்றும் பரஞ்சோதி முனிவர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுரும்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சுரும்பு

பொருள்

  • வண்டு – ஆண்வண்டு
  • மலை

வாக்கிய பயன்பாடு

பாதயெல்லாம் செடி, கொடி வளர்ந்து காடா கெடக்கு; சாக்கிரதையா போ; சுரும்பு ஏதாவது கடிச்சிட, கிடிச்சிட போவுது.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

கருத்து உரை

மரம் தாவுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு கடினமான வகையில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடைய மலைப் பக்கத்தில், வண்டுகளாலும் மொய்க்க இயலாத அதிக உயரத்தில் சுடர் விட்டு எரியும் தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்களால் ஆன குளிர்ச்சி பொருந்திய பெரியகண்ணியைத் தலையில் அணிந்த திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கயிலாயத்துக்கு வெளியே வளர்ந்த மரபு எது?
புறச்சந்தானம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவத்தை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவத்தை

பொருள்

  • நிலை பொருள்
  • வேதனை

வாக்கிய பயன்பாடு

தூக்கம் வரலேன்னாலே ரொம்ப அவஸ்த்த தான்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – சதாசிவ லிங்கம் – திருமூலர்

கருத்து உரை

சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கு தவிர ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டும். சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு என்று சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன*. இறைவனுக்குத் திருமேனிகள் அத்துவாக்கள் முன்வைத்து ஆறு` என்றும், அட்ட மூர்த்தங்கள் முன்வைத்து `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.

விளக்க உரை

  • * – திருவாடுதுறை போன்ற ஆதின அனுட்டானங்களில் 12 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம்; மற்ற மடங்களில் 16 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம் – ஆதீன முறைப்படி.
  • காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ இல்லாமவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு ஆகிய உயிரின் நிலைகள்
  • காரண அவத்தை – 1. கேவல அவத்தை ,2. சகல   அவத்தை , 3. சுத்த  அவத்தை
  1. கேவல அவத்தை: ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை
  2. சகல அவத்தை: மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது
  3. சுத்த அவத்தை: பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை
  • காரிய அவத்தை – உயிர் செயல்படும் நிலையைக் கூறுவது. மேற்கூறிய இம்மூன்று நிலைகளில் உயிரானது கூடி நிற்பது காரண அவத்தை. வகைகள் – 5
  1. நனவு – இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
  2. கனவு – இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
  3. உறக்கம் – இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
  4. பேருறக்கம் – இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
  5. உயிர்ப்படக்கம் – இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
  • கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை
  • சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை
  • சுத்த நிலையில் செயல்படும் பொழுது மலோலவத்தை

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கைலாயத்துக்குள் வளர்ந்த மரபு எது?
அகச்சந்தானம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சிட்டர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சிட்டர்

பொருள்

  • பெரியோர்
  • கல்விநிரம்பிய சான்றோர்.

வாக்கிய பயன்பாடு

காஞ்சிபுரம் சிட்டர்கள் நிறைந்த நகரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர்  பாலணு கான்செறு காலனே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

தில்லைச் சிற்றம்பலமானது, தேவர்கள் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது; ஞானிகள் ஆகிய பெரியோர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடி அருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அப்பெரியோர்களாகிய மெய்ஞ்ஞானியரை, வருத்தி அழிக்க வல்ல காலன் அணுக மாட்டான்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

இருவகைச் சந்தானங்கள் எவை?
அகச்சந்தானம், புறச்சந்தானம்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!