ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பாவித்தல்
பொருள்
- எண்ணுதல்
- தியானித்தல்
- பாவனைசெய்தல்
- நுகர்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சீவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.
திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்
கருத்து உரை
‘சேடம்’ எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்கு முன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட இப் புவனாபதி தேவியை, ஒடுக்கி கொள்ளுதற்குரிய மந்திரம், கிரியை ஆகிய பாவனைகளால் எல்லோராலும் எளிதில் அணுக இயலா மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வைத்து இருதயத்தில் ஒடுக்க வேண்டும். இது நீ நினைத்தவற்றை எல்லாம் உனக்குக் கொடுக்கும்.
விளக்க உரை
- இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது
- உத்வாபனம் – மீட்டுக் கொள்ளுதல்.
- அங்க, கர நியாசங்களின் மந்திர உபாசனையாலும், எவருக்கும் எட்டாத “இயந்திர ராசன்’ எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனாலும், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கு இஃது உரியது அல்ல அறியப் படும்.
- தருமை ஆதீன பதிப்புகளுக்கும், ஏனைய பதிப்புகளுக்கும் வேறுபாடு இருந்தாலும் நம்பகத்தன்மைக்காக தருமை ஆதின பதிவு வார்த்தைகளே எடுத்தாளப்படுகிறன.
மற்ற பதிப்புகள் | தருமை ஆதீனப் பதிப்பு |
சேவிப் | சீவிப் |
வாபனத்தால் | வாகனத்தாற் |
கியாவர்க்கு | கியாவர்க்கும் |
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
திருவுந்தியாரை அருளியவர் யார்?
திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்