ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சேடம்
பொருள்
- மிச்சப்பொருள்
- கழிந்தமீதி
- எச்சில்
- இறைவனுக்குப் படைக்கும் பொருள்
- அடிமை
- சிலேட்டுமம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால “நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சீவியே**.
திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்
கருத்து உரை
புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். பால் அன்னத்தை மந்திரத்தோடு ஜெபித்து, நிவேதிக்க வேண்டும். வழிபாடுயாவும் முடிந்தபின்பு நான்கு திசைகளிலும் ‘நாரதாயை சுவாகா’ என்று நிவேதிக்க வேண்டும்.பின் நிர்மால்யத்தை அகற்றி நிவேதனத்தை உண்க.
விளக்க உரை
- பூஜைக்குரிய நியமங்கள் குறித்தது இப்பாடல்.
- சீவி – உட்கொண்டு ஜீவித்தல்
- ** சேவியே – என்று சில பதிப்புகளில் காணப்படுகிறது. தருமை ஆதீன பதிப்புகளில் மேற் கூறியவாறு இருப்பதாலும், நம்பகத்தன்மைக்காகவும் ‘சீவியே’ என்பது எடுத்தாளப் படுகிறது.
- “பால் போனகம்” – சாக்த மார்கத்தில் வாம மார்க்க வழிபாடு போன்றவை இருந்தாலும் அவ்வாறான நிவேதனங்கள் விலக்க வேண்டும்.
- பாகம் – சமைக்கப்பட்ட பொருள்.
- “சேடம்” – நிர்மாலியம். அதனைக் உட்கொள்ளுதலைச் சேவித்தலாகக் கூறியது மரபு.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மெய்கண்டார்க்கு முற்பட்ட சித்தாந்த சாத்திரங்கள் எவை?
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம்