ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – அற்று
பொருள்
- அத்தன்மையது
- அதுபோன்றது
- ஓர்உவமஉருபு
- ஒருசாரியை.
வாக்கிய பயன்பாடு
நாம் ஒண்ணும் நாதி அத்துப் போவல. எல்லாம் அவ பாத்துப்பா. ஏன் ஓய் கவலப்படுறீர்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
திருமுறை 10 – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
சத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய ‘பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்று ஒழியும். அவ்வழியே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம். இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.
விளக்க உரை
- பராவித்தை யோக நிலையில் செய்யப்படக்கூடியது; அது பெரும்பயன் தரத்தக்கது என்பதை விளக்கும் பாடல்
- நாதத்தால் வரும் ஞானமகிய ‘வைந்தவ ஞானம்’ மட்டுமின்றி `விந்துவும் அற்றொழிந்தது` என்ற பொருளில் அவ்வரிகள்.
- ஆறு ஆதாரம், சகத்திரதாரம், நிராதாரம் என்று எட்டுக்கு பொருள் கூறுவாரும் உளர்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மெய்கண்டார் வாழ்ந்து சித்தி பெற்றத் தலம் எது?
திருவெண்ணை நல்லூர்