ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – நாத்திகம்
பொருள்
- கடவுள் இல்லை என்னும் கொள்கை
- தெய்வ நிந்தனை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
உலகியலையும் அது சார்ந்து வரும் வாழ்வும் மட்டுமே உண்மை என்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் எதுவும் இன்றித் தன்னை அடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
அக அனுபவம் சார்ந்து.
தனது மூச்சுக் காற்றின் நடையும் அது சார்ந்த அனுபவங்கள் மட்டுமே உண்மை என்று பொருள் கொள்ளக்கூடாது. பஞ்ச இந்திரியங்கள் வழியாக படைகள் போல் வரும் தடைகள் எல்லாம் விலக்கி தன்னை அடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.(பொருள் தவறாக இருப்பின் மன்னித்து அருள வேண்டும்)
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
திருக்களிற்றுப்படியாரை அருளியவர் யார்?
திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார்