ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மருள்
பொருள்
- மயக்கம்
- பேயாட்டம்
- பயம்
- திரி புணர்ச்சி
- வியப்பு
- உன்மத்தம்
- கள்
- குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று
- எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை.
- பெருங்குரும்பை
- பேய்
- ஆவேசம்
- புல்லுரு
வாக்கிய பயன்பாடு
பானை உள்ளேயும், வெளியிலயும் ஆகாசம் தான். அந்த கோட்ட கண்டுபுடிக்கிறத்துக்கு தான் எல்லா கஷ்டமும். அதான் மருள் புரிஞ்சா சரி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
வள்ளலார்
கருத்து உரை
அருள் உருவாகிய பெருமானே! யான் செய்கின்ற வேண்டுகோளை நீ உனது திருச்செவியில் ஏற்று எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்; கோபம் காமம் ஆகிய குற்றங்கள் அணுவளவும் என்னை வந்து பொருந்துதல் கூடாது; மருட்சி தரும் எல்லா உலகங்களிலும் அம்மருட்சி நீங்கித் தெளிவு பெற்று ஞான அடைந்திட அம்பலத்தில் எழுந்தருளும் வள்ளலாகிய உன்னை வாழ்த்தி வழிபடல் வேண்டும்; அறியாமையாகிய இருள் வந்து என்னைப் பொருந்துதல் கூடாது; அன்பால் என்னை அடுத்தவர்கள் சுகம் பெறுதல் வேண்டும்; எல்லா உயிர்களும் இன்பமடைய வேண்டும்; மெய்ப்பொருளாகிய உனது திருவுருவில் என்னை உடையவனாகிய நீயும் நானும் கூடிக் கலந்து ஒன்றி உயர்தலை வேண்டுகிறேன்.
விளக்க உரை
- திருஅவதார தினம் – அக்டோபர் 5, 1823
- அருளா – சிவபெருமானுக்கு அருளே திருமேனியாதல் பற்றி
- கோபம், காமம் ஆகிய குற்றங்கள் சிறிது உண்டாயினும் அவற்றால் விளையும் தீங்கு பெரிதாதலால், “அணுத் துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்” எனும் வரிகள்
- மருள் – பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்வது மருள். அது பற்றி மருளாய உலகம் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும்” என்று புகல்கின்றார்.