நேர்மையான (தவமுனிவருக்கும்) மான் ஈன்ற புதல்வியாகிய வள்ளியம்மையாரை வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், பெருமானும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து ”பேசாத மவுன நிலையில் சொற்களை விலக்கி சும்மா இருப்பாயாக!”, என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்து போனது!
விளக்கஉரை
பொதுவாக வள்ளி, முருகன், தெய்வானை என்பது சக்தியின் வடிவம்.(முறையே இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி).
ஞான நிலை வாய்க்கப் பெற்ற முருகன் இச்சைகளை விலக்க ஆணையிட்ட உடன் ஞானம் கிடைத்துவிட்டது என்கிறார்.
பிறவான் இறவான் – பிறப்பிலி; பிறப்பு இறப்பு அற்றவன்
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
கருத்துஉரை
கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக
விளக்கஉரை
*இன்று குமரகுருபரர் குருபூசை*. இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர்.
இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் பெற்றார்.
இவர் எழுதிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
திரிமலத்தார் ஒன்றதனிற் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆயும் உளர்.
திருநெறி 8 – உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மூன்று மலம் உடையவர்கள் திரிமலத்தார். ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலத்தினையுமுடைய ஆன்மாக்கள் சகலரென்றும், ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் பிரளயாகலர் என்றும், ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் ஆகிய மூன்று விதமான ஆன்மாக்களாக இருக்கும்.
தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில் கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே வாராது அகல், அந்தகா, வந்த போது உயிர் வாங்குவனே.
கந்தர் அலங்காரம்
கருத்துஉரை
நட்சத்திரக் கூட்டத்தில் பகுதி ஆகிய ஆறு தாய்கள் பேரும் தந்த முலைப் பாலை உண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப் பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின் திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் எனது சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது நீங்கிப் போவாயாக, மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!
விளக்கஉரை
ஆறு ஆதாரக்களையும் தாண்டி யோக அப்யாசத்தால் துரியாதீத அப்யாசம் செய்யும் போது மரணமில்லா பிறவி வாய்க்கும்.
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
மக்களைப் பெற்று குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலே அடிப்படை என வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல. இதை அறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மூன்று கோட்டைகள் உடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே !
அடியவர்கட்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற (அமரத்தன்மை) திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போன்றவனே, உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? என்னுடைய இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேள்ஆமை – நீள்ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.
தேவாரம் – 11ம் திருமுறை – காரைக்காலம்மையார்
கருத்துஉரை
தொலைவில் இருந்து நோக்குகையில் அவன் திருமேனி சிவப்பாகத் தோன்றியும், அணுகிய போது கண்டம் வேறு நிறமாக (கருமையாக) இருப்பதைப் போலவே, பெருங் கருணை உடையவனைப் போல வலிய வந்து ஆண்டு கொண்டவன் என் அல்லலைத் தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க, நான் பலமுறை முறையிட்டுக் கேளாமல் இருக்கிறான். (இன்னும் முறையிடல் வேண்டும் போலும் என்பது போல்.)
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ் சாதா ரணமாஞ் சதாசிவந் தானே.
திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
சதாசிவம் தானே ஆதாரமாக நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.
விளக்கஉரை
சிவபேதம் ஒன்பது. இவை நவந்தரு பேதம் எனப்படும்.
விந்து – பரவிந்து, நாதம் – பரநாதம் என தனித்தனியே இரண்டாகும். சிவாமங்களின் வேறுபாட்டுக்கு ஏற்ப சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை சக்தி, சிவம் என்றும், விந்து நாதங்களை சக்தி, சிவம் என்றும் கூறுவர்.
சதாசிவத்துக்கு மேல் உள்ள நான்கும் அருவம், கீழ் உள்ள நான்கும் உருவம். சதாசிவம் மட்டும் அருவம், உருவம் மற்றும் அருவுருவம். எனவே சதாசிவ மூர்த்தமே அனைத்து லிங்கமும் ஆகும். ஆகவே சதாசிவ மூர்த்தத்தை வழிபட சிவபேதம் அனைத்தையும் வழிபட்டது ஆகும்.
சிவன், தான் நேரே அருளுதல், குருமூர்த்தமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் அருளுவார். இவ்வாறான ஆதி குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அந்த உணர்வினால், பக்குவப்படுத்தி, பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் எல்லா நலங்களையும் அருளுவார்.
ஒருவனோ டொருத்தி ஒன்றென் றுரைத்திடும் உலக மெல்லாம் வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.
திருநெறி 2 – சிவஞான சித்தியார் – பிரமாணவியல்
கருத்துஉரை
சற்காரிய முறையில் தோன்றி நின்று அவன் அவள் அது என்னும் படி பகுப்புடையதாகிய பிரபஞ்சம், தோன்றுதற்குரியதும் அழிதலுடைமையும் கொண்டு அது தன்னைத் தோற்றுவிப்பானின் வினை முதலை கொண்டு நிற்கும்; ஆகலால், இவ்வுலகம் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற சங்கார காரணனே அஃது ஒடுங்கிய பின்னும் அநாதி சித்துருவாய் நிலைபெற்று நின்று அவ்வுலகத்தை முன் போல தோற்றுவிக்கும்; இவ்வாறு பிரஞ்ச தோற்றத்திற்கு முன் உள்ளவனும், பிரபஞ்ச ஒடுக்கத்திற்கும் பின்னும் உள்ள அந்த சங்கார காரணனே உலகிற்கு முதற் கடவுள்.
கரைகளெல்லாம் நிறையுமாறு அங்கு இருக்கும் குளங்களில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து அங்குள்ள நீர் குவளை மலரின் மணத்தை வீசுகின்றது. அவ்வாறு குவளை மலர் மணம் வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.
இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.
10ம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இருட்டரையில் மூலையில் இருந்த கிழவி, குருடாக இருக்கும் கிழவனை கூடலுக்கு (அழைத்து விளக்கி) அவனது குருட்டினை நீக்கி அவனுக்கான குணங்களைக் காட்டி அவனை மணம் புரிந்து அவனுடன் கலந்திருந்தாள்.
விளக்கஉரை
‘இருட்டறை மூலை யிருந்த குமரி’ என்று பல இடங்களில் பாடல் திருத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கிழவி’ என்பதே மூலத்தில் இருப்பதால் அவ்வாறே இங்கு எடுத்தாளப்பட்டிருக்கிறது.
பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா. ஜீவ ஆத்மா. இறை உணர்த்த ஆன்மா தன்னை அறியும் என்பது ஒரு விளக்கம். பிரகிருதி புருஷனுடன் இணைந்து இந்திரியங்கள் உண்டாகி, முக்குணங்கள் உண்டாகி குணங்கள் கடந்து ஜீவன் முக்தி ஏற்படும்.
குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்கிக் கொண்டு இருக்கிறது. அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் உலகில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். உயிர்கள் உய்வதின் பொருட்டு (கிழவி — சத்தியின் உச்ச நிலை; அநாதியான அருட்சக்தி) என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி நமது அறியாமையை நீக்கி அருளுவாள்.
இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு பொழுதும் ஒழிகின்றிலீர். நீங்கள் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அந்த பாம்பினை ஒரு பொழுதும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம் பட்டவர்த் தனம்எரு தன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெருந் தேவி சாந்தமும் திருநீ றருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
9ம் திருமுறை – திருவிசைபா – கருவூர்த் தேவர் – திருச்சாட்டியக்குடி
கருத்துஉரை
சாட்டியக்குடி, அடியாருடைய அன்பின் மிக்க எழுச்சியை உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிலில் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.
விளக்க உரை
பரிகலம் – உண்கலம்.
கபாலம் – பிரமனது தலைஓடு.
பட்டவர்த்தனம் – அரச விருது; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு.
அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாதா, அதை விளக்க வேண்டும்.
சிவன்
அரசர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் எமனால் தண்டிக்கப்படுவதில்லை. தவறாக தண்டிக்கப்பட்டாலும், சரியான தண்டனை செய்யப்படா விட்டாலும் அவர்களை எமன் தண்டித்தே விடுவான். அவர்களின் செய்கைகள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். கருமம் செய்த மனிதன் எவரும் எமனிடம் இருந்து தப்ப முடியாது. எமனாலும் அரசனாலும் தண்டிக்கப்பட்டவன் தண்டிக்கப்படாவிட்டாலும் அவன் வினை முழுவதையும் அனுபவிப்பான். செய் கர்மத்தின் வினைப்பயன்களை அறுத்தவர்கள் எந்த உலகிலும் இல்லை.
உமை
பூமியில் மனிதர்கள் நித்திய பாவத்தை செய்து அதை தொலைப்பதற்காக பிராயசித்தமும் செய்கின்றனர். அஸ்வமேத யாகம் போன்ற யாகங்களை செய்தும் மற்றும் இன்ன பிற உபாயங்களாலும் பிராயச்சித்தம் செய்கின்றனர். இதை எனக்கு விளக்குங்கள்.
சிவன்
நல்லவர்களும் கெட்டவர்களும் வேண்டும் என்றே நினைத்தும், தவறுதலாகவும் இரு வகையான பாவங்களைச் செய்கின்றனர். பலன் கருதியும், வைராக்கியங்களுடனும் செய்யப்படும் கர்மங்கள் எந்த வகையிலும் அழிவதே இல்லை. தெரிந்து செய்த கர்மம் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்வதாலும் நூற்றுக்கணக்கான பிராயச்சித்தங்களாலும் அழிவதில்லை, தவறுதலாகவும் தற்செயலாகவும் செய்யப்பட்ட பாவங்கள் அஸ்வமேத யாகம் மற்றும் பிராயச் சித்தங்களால் அழியும். உலக நன்மைக்காகவும் பிராயச்சித்தம் முதலியவை விதிக்கப்படுகின்றன. இதை நீ அறிந்து கொள்.
உமை
இவ்வுலகில் மனிதர்களும் மற்ற பிராணிகளும் காரணத்தோடும் காரணம் இன்றியும் மரணிக்கின்றனர். இது எந்த கர்மத்தின் பலன்?
சிவன்
பூர்வ ஜென்மத்தில் மனிதர்கள் எவ்விதம் கொன்றார்களோ அதன் பலனை இப்பிறவியில் அனுபவிக்கின்றனர், விஷம் கொடுத்தவர் விஷத்தாலும், ஆயுதத்தால் அடித்து கொன்றவர் ஆயுதங்களாலும் , வேறு எந்த வகையிலும் மற்றவர்களை கொல்லுகின்றனரோ அவ்வகையில் இப்பிறவியில் தம் உயிர் சேதத்தை அடைகின்றனர். இதில் சந்தேகமில்லை. உலகில் இதுதான் விதிபற்றிய சத்தியம் என்று அறிந்துகொள்வாயாக. தன்வினையை அனுபவிக்காமல் இருப்பதற்கு தேவர், அசுரம் மற்றும் மனிதர் எவரும் விதிவிலக்கல்ல. உலகமானது ஆதிகாலம் தொடங்கி கர்மத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. என்னால் சொல்லப்படா கர்மங்களை உன் புத்தியால் ஊகித்து அறிந்து கொள்வாயாக.
உமை
உங்களது கருணையினால் நன்மை தீமை கர்மங்கள் மாலைபோல் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், பசுவின் மடிதேடி கன்று செல்வதைப்போலவும், பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலவும் கர்மங்கள் பற்றிச் செல்கின்றன என அறிந்து கொண்டேன். இவ்வாறான புண்ணிய பாப கர்ம வினைப் பயன்களை அவர்கள் இந்த ஜென்மாவில் அனுபவிக்கின்றனரா அல்லது மறுமையிலா?
சிவன்
போன ஜென்மத்தின் பலன்களை இந்த பிறவியிலும் இந்த ஜென்மத்தின் பலன்களை அடுத்து வரும் பிறவியிலும் அனுபவிக்கின்றனர். இது மானிடர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மரணமின்மை என்பதாலும், தவத்தாலும் அந்த அந்த பிறவியிலேயே கர்மங்களின் பலன் ஒரே சரீரத்தில் அனுபவிக்கப்படும்.
உமை
மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்!
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை, புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ! எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ! `அளியேன்’ என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
திருவாசகம் – 8ம் திருமுறை – மாணிக்க வாசகர்
கருத்து உரை
தலைவனே இடப வாகனனே, திருவெண்ணீறு அணிவோனே, புறத்தில் தோலால் மூடப்பெற்று புளியம்பழத்தைப் போல என்னுடைய உடம்பு உள்ளே காயம் உடையதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் அதன்கண் பற்றுக்கொண்டு இருந்தேன் அவ்வாறு இருந்தும் எளிமையாய் வந்து என்னை ஆட்கொண்டு அருளினாய். எனது அருமையான அமுதமே எனது ஓலம் கண்டு இனி நீ ‘இவன் இரங்கத்தக்கவன்’ என்று சொல்லி அழைக்க நான் விரும்பினேன்.
விளக்கம்
‘எனது தகுதியின்மை தெரிந்தும் முன்பே வந்து ஆட்கொண்டது போலவே இனியும் என்னை உன்பால் அழைத்துக்கொள்ள வேண்டும்’
இதனால், சிறியோரையும் இரங்கி ஆட்கொள்பவன் இறைவன் என்பது பொருள்
துளைக்கை வேழத்து உரி உடல் போர்த்தவர்; வளைக்கை யாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.
தேவாரம் – 5 ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருவாரூர்ப் பெருமான், துதிக்கை உடைய யானையின் தோலை உரித்தப் ஆடையாக அணிந்து கொண்டவர். வளையணிந்த கைகளை உடைய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவர். அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்.
காஞ்சியில் உறையும் கச்சி ஏகம்பனே! மனித உடம்பாகிய இந்த துர்நாற்றமடிக்கும் உடலை, ஆபாசம் நிறைந்த தொழுவம் போன்ற உடலை, சதை பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் சோறு இடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே.
மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான், வார்சடையான்” என்னின், அல்லான்; ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி; அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன் அருளே கண் ஆகக் காணின் அல்லால், “இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
இறைவன் மைபூசிய கண்களை உடைய உமையுடன் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும். நீண்ட சடையினனும் ஆவான்” என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க விரும்புதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓர் ஊருக்கே மட்டும் உரியவன் அல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
விளக்க உரை
வார்சடை – நீண்டசடை. அல்லான் – அத்தன்மையன் அல்லன்; அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி