வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 15

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாதா, அதை விளக்க வேண்டும்.

சிவன்

அரசர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் எமனால் தண்டிக்கப்படுவதில்லை. தவறாக தண்டிக்கப்பட்டாலும், சரியான தண்டனை செய்யப்படா விட்டாலும் அவர்களை எமன்  தண்டித்தே விடுவான். அவர்களின் செய்கைகள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். கருமம் செய்த மனிதன் எவரும் எமனிடம் இருந்து தப்ப முடியாது. எமனாலும் அரசனாலும் தண்டிக்கப்பட்டவன் தண்டிக்கப்படாவிட்டாலும் அவன் வினை முழுவதையும் அனுபவிப்பான். செய் கர்மத்தின் வினைப்பயன்களை அறுத்தவர்கள் எந்த உலகிலும் இல்லை.

உமை

பூமியில் மனிதர்கள் நித்திய பாவத்தை செய்து அதை தொலைப்பதற்காக பிராயசித்தமும் செய்கின்றனர். அஸ்வமேத யாகம் போன்ற யாகங்களை செய்தும் மற்றும் இன்ன பிற உபாயங்களாலும் பிராயச்சித்தம் செய்கின்றனர். இதை எனக்கு விளக்குங்கள்.

சிவன்

நல்லவர்களும் கெட்டவர்களும் வேண்டும் என்றே நினைத்தும், தவறுதலாகவும் இரு வகையான பாவங்களைச் செய்கின்றனர். பலன் கருதியும், வைராக்கியங்களுடனும் செய்யப்படும் கர்மங்கள் எந்த வகையிலும் அழிவதே இல்லை. தெரிந்து செய்த கர்மம் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்வதாலும் நூற்றுக்கணக்கான பிராயச்சித்தங்களாலும் அழிவதில்லை, தவறுதலாகவும் தற்செயலாகவும் செய்யப்பட்ட பாவங்கள் அஸ்வமேத யாகம் மற்றும் பிராயச் சித்தங்களால் அழியும். உலக நன்மைக்காகவும் பிராயச்சித்தம் முதலியவை விதிக்கப்படுகின்றன. இதை நீ அறிந்து கொள்.

உமை

இவ்வுலகில் மனிதர்களும் மற்ற பிராணிகளும் காரணத்தோடும் காரணம் இன்றியும் மரணிக்கின்றனர். இது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் மனிதர்கள் எவ்விதம் கொன்றார்களோ அதன் பலனை இப்பிறவியில் அனுபவிக்கின்றனர், விஷம் கொடுத்தவர் விஷத்தாலும், ஆயுதத்தால் அடித்து கொன்றவர் ஆயுதங்களாலும் , வேறு எந்த வகையிலும் மற்றவர்களை கொல்லுகின்றனரோ அவ்வகையில் இப்பிறவியில் தம் உயிர் சேதத்தை அடைகின்றனர். இதில் சந்தேகமில்லை. உலகில் இதுதான் விதிபற்றிய சத்தியம் என்று அறிந்துகொள்வாயாக. தன்வினையை அனுபவிக்காமல் இருப்பதற்கு தேவர், அசுரம் மற்றும் மனிதர் எவரும் விதிவிலக்கல்ல. உலகமானது ஆதிகாலம் தொடங்கி கர்மத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. என்னால் சொல்லப்படா கர்மங்களை உன் புத்தியால் ஊகித்து அறிந்து கொள்வாயாக.

உமை

உங்களது கருணையினால் நன்மை தீமை கர்மங்கள் மாலைபோல் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், பசுவின் மடிதேடி கன்று செல்வதைப்போலவும், பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலவும் கர்மங்கள் பற்றிச் செல்கின்றன என அறிந்து கொண்டேன். இவ்வாறான புண்ணிய பாப கர்ம வினைப் பயன்களை அவர்கள் இந்த ஜென்மாவில் அனுபவிக்கின்றனரா அல்லது மறுமையிலா?

சிவன்

போன ஜென்மத்தின் பலன்களை இந்த பிறவியிலும் இந்த ஜென்மத்தின் பலன்களை அடுத்து வரும் பிறவியிலும் அனுபவிக்கின்றனர். இது மானிடர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மரணமின்மை என்பதாலும், தவத்தாலும் அந்த அந்த பிறவியிலேயே கர்மங்களின் பலன் ஒரே சரீரத்தில் அனுபவிக்கப்படும்.

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்!

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *