
பாடல்
பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்
திருநெறி 2 – சிவஞானசித்தியார் சுபக்கம் – அருணந்தி சிவாச்சாரியார்
கருத்து – வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்
பதவுரை
முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.
விளக்க உரை
- தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
- ஸம்+சித்தம் – நன்றாக முடிவுபெற்றது
- வைநயிகர் – விநயம் உடையவர்
- மார்க்கர் – சன்மார்கர், ஞானிகள்