வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பாரபரச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலைவிய ளாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
அம்மையானவள், அருளால் தோற்றுவித்துள்ள உலகமும் மற்றும் உண்பொருள்களும் அந்த உண் பொருள்களுடன் இணைந்த அழிவில்லாத பலவுயிர்களும், எண் திசைகளுடன் கூடி மேல் மற்றும் கீழ் இணைந்த பத்துத்திசையிலும், நிறைந்து நின்று இயக்கும் தன்மையால் பத்து முகம் உடையவளாகவும், சிவசக்தி வடிவமாகவும், சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி முதலிய நால்வகை வாக்குகளும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாகவும் நிற்பாள்.
விளக்கஉரை
திரிபுரை வழிபாட்டு முறைகளும், அவற்றின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளது
கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச் செம் பவளத் திருமேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
பூங்கொம்பு கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.
விளக்கஉரை
திரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்
சிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.
வானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.
`மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும் பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும், ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும் பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்தில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.
விளக்கஉரை
சிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும், அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம் புராசத்தி புண்ணிய மாகிய போகமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரை ஆனவள், எங்கும் வியாபித்து, மாபெரும் சக்தி ஆனவள்; எல்லா வகையிலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள்; அதோடுமட்டுமல்லாமல் அதில் எல்லாவற்றிலும் பொருந்தி அதன் மெய் உணர்வு வடிவகமாக இருப்பவள்; திரிவுபடும் ஊழி எனப்படும் மிக நீண்ட காலத்தில் உயிர்களிடத்தில் உடனிருந்து நின்று அதன் புண்ணியப் பலன்களை அருள்பவள்.
எங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக!
விளக்கஉரை
குறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.
உயிர்களுக்கு உடல் ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).
திரிபுரையை அக அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை ஆனந்த வடிவமாக இருப்பவள் என்றும், (அருவமும், உருவமும் ஆகி) அருவுருவம் கொண்ட வடிவினள் என்றும், உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் அனைத்தும் அவள் விருப்பத்தின் படி நிகழ்கிறது என்றும், அறிவு உருவாகிய பரமனாகிய சிவபெருமானும் அன்னையிடம் எழுந்தருளி இருப்பவர் என்றும் கூறப்பெறும்.
விளக்கஉரை
அன்னையின் மேலும் சில பெருமைகளைக் கூறும் பாடல்
*நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையில் நிற்பவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
மூன்றாமடி மற்றும் நான்காமடிகளில் வரும் ‘அறிவார்’ என்பதை, ‘அறிவு ஆர்’ எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` எனக்கொண்டு, `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் சில இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன் வழி பற்றி ‘ஆர்ந்த அறிவு கொண்டவனும் அவள் வழி தொழில் நடத்துகிறான் எனவும் விளக்கம் பெறும். ஆன்றோர் அறிந்து உய்க.
அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரையை அறியாதவர்கள் தேவர்கள் ஆகமாட்டார்கள்; அவள் இன்றி செய்யும் மிகப் பெரியதும் சிறப்புடையதுமான தவம் என்பது எதுவும் இல்லை; அவள் இல்லாமல் (சைவத்தினை முன்வைத்து) ஐந்தொழில்களையும் சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்கள் எதுவும் இல்லை. அவள் அருள் இல்லாமல் கைகூடும் திருவடிப் பேறு என்பதும் இல்லை.
விளக்கஉரை
திரிபுரையின் பெருமையை கூறும் பாடல்.
ஐவர் – பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும்,உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் ஆற்றுவதாகக் கூறப்படும் கருத்துக்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
எப்பொழுதும் அழியாதவளாகிய திரிபுரை, கால எல்லையைக் கடந்த பழமை உடையவள்; மாயை வடிவம் கொண்டு உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற உருத்திராட்ச மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.
விளக்கஉரை
திரிபுரையின் தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்
குண்டலம் அணிந்த காதுகளை உடையவள்; கொலை செய்கின்ற வில் போன்ற புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறையை மாலையாக அணிந்து ‘சண்டிகை’ என்னும் பெயர் உடையவள்; இவள் நான்கு திசை கொண்ட உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருளுதல் பொருட்டு தாங்கி நின்றாள்.
விளக்கஉரை
தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்றுகிறாள் எனும் பாடல்
திரிபுரையின் தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திருவடிகளில் பாதகிண்கிணி ஆகிய சிலம்பும், இடையில் சிவந்த பட்டுடையும், மார்பில் கச்சையும், நான்கு கரங்களிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம் ஆகியவைகளும், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடியும், காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் கொண்ட அடையாளங்களுடன் திரிபுரை இருப்பாள்.
விளக்கஉரை
நூபுரம் – சிலம்பு, பாதகிண்கிணி
‘இராஜேஸ்வரி கோலம்’ வர்ணிக்கும் பாடல். திரிபுரையின் தியான உருவம் பற்றி கூறப்பட்டப் பாடல்.
கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேதும் அறிந்தி லாதஎன் சிந்தை வைத்த சிகாமணி ஞால மேகரி யாக நான்உனை நச்சி நச்சிட வந்திடும் கால மேஉனை ஓதநீ வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
அழகிய பன்றி உருவத்தை திருமேனி ஆக உடையவனே! திருப்பெருந்துறைக் மழை மேகமே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் சிந்தையினில் வைக்கப் பட்டிருக்கிற தலைசிறந்தவனே! உலகத்திற்கு சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன்னுடைய பெருங்கருணை இருந்தவாறு என்னே?
விளக்கஉரை
கொண்டல் – கொள்ளுகை, மேகம், மழை, மேஷராசி, கொண்டற்கல், மகளிர் விளையாட்டுவகை
சீலம் – அழகு, குணம், வரலாறு, சீந்தில், சுபாவம், நல்லறிவு, அறம், நல்லொழுக்கம், யானையைப் பயிற்றும் நிலை, தண்டனை
கோல மேனி வராகமே – இது பன்றிக்குட்டிகளுக்கு இறைவன் தாய்ப்பன்றியாய்ச் சென்று பால்கொடுத்த திருவிளையாடல் பற்றிய புராணம்
கரி – சான்று.
நச்சுதல் – விரும்புதல்.
நச்சிட வந்திடும் காலமே – என்றும் இடையறாது அன்பு செய்து உன்பால் யான் வருவதற்குரிய காலம்.
பற்றுக் கொண்டு விரும்பி நினைக்கப்படும் உடலிலே வாய், கண், உடல், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து வகைகளே! உங்களுடைய மயக்கம் பொருந்திய மண்ணில் ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய பொன் போன்ற உருவத்தைத் தந்தவனும், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வான் அளவு உயர்ந்தவனாகவும், இந்த உலகம் எல்லாவற்றிலும் அழகான சிவக்கொழுந்தாய் ஆனவனும், என் சிந்தையுள்ளே புகுந்து அதில் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் சிறுமை படுத்துவதற்காக செருக்கிக்கொண்டு என்பக்கம் வாராதீர்கள்.
விளக்கஉரை
உன் உருவில் – ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பு
தோன்றுவதும் பின் அழிகின்றதுமான வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல் உலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும், அந்த உலகங்களைப் பற்றி நின்று ‘புருடன், உருத்திரன், சிவன்’ என உயிர்கள் அடையும் வேறுபாடுகளையும், தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான அமைப்பு அனாதியே அமைந்த முதல்வன் சிவபெருமானே செய்வதே ஆகும்.
விளக்கஉரை
‘தான் புருடனாய் நிற்றல்’ முதலிய நிலைமைகளும் சிவனால் ஆவன்` என்பதை கூறும் பாடல்
‘புருடன்` – உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும் தருணத்தில் (புருடலோகம்)
`உருத்திரன்’ – ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்கும் தருணத்தில் (உருத்திர லோகம்)
‘சிவன்’ – வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் தருணத்தில்(சிவலோகம்) [( வகைகள் – அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர்)
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ ஓம் எனும் பிரணவ எழுத்தால் ஒன்றாகி, சிவ சக்தி ஐக்கிய வடிவம் படி இரண்டாகி, வளர்ந்து பஞ்சாட்சரங்களாகி, எட்டெழுத்தாகிய சிவத்தை அறியாமல் *, ஆகாயமாகி, வானில் தோன்றும் சூரியனாகி, காடு ஆகி, உலகமாகவும் அதில் காணப்படும் பொருளாகவும் ஆகி , வகை ஆகிய ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் எனவும் ஆகி, போற்றுதலுக்கு உரிய மறை நான்காகி, பரந்து ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகி, பதினெண் புராணங்களாகி, காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் (ஆக்னேயம்), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம் எனும் ஆகமங்கள் இருபத்தி எட்டாகி, தியானப் பொருளான திருமாலாகவும், ப்ரம்மாவாகவும் உலகை படைத்து, காத்திடவும் அழித்தல் பொருட்டு தன் தலைவனுடன் உமையாகி நித்தமும் நிலைபெற்று தங்கும் இமவான் மகளாய் இருக்கிறாய்.
விளக்கஉரை
* எட்டினோடிரண்டும் அறியேனையே – எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும் விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )
என் கண்ணம்மா, மனம் மகிழ்ந்து (உள்முகமாக) நோக்குவதால் அந்தரம் எனப்படும் உள்வெளியாகிய புருவத்தை வில்லாக்கி, பஞ்சாட்சரமான ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி, உச்சாடனம் செய்யும் வேகத்தினை தேராக்கி, மனமாகிய மானை காவனத்தில் வேட்டையாட, சந்திர சூரிய நாடிகள் வந்து விளையாடியதால் தானே நிகழ்ந்தது.
அந்தரம் என்பதற்கு ஆகாசம், வெளி போன்றவை இருப்பினும் சித்தர்கள் பெரும்பாலும் இருப்பை தன்னுள்ளே விளக்குவதால் உள்முகமாக நோக்குதல் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
மனமகிழ்ந்து – ஆத்மார்த்தமாக உணர்தல்
சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும், போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும் திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.
விளக்கஉரை
தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
பூழி – விபூதி
இனன் – சூரியன்
இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
குழக்கன்று எனும் மிக இளையகன்று போன்று கட்டுத்தறி விட்டு அன்பர்களுக்கு அருள் செய்ய வந்தவனே, காழிப் பதி உறையும் ஆபதுத்தாரணனே, மௌனம் கொண்டவனே, தனக்கென அடையாளம் ஆகிய பேதம் விலக்கியவனே *, சைவ ஆகமத்தில் கூறப்படும் எண் குணங்களாகிய தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவற்றை கடந்தும் நிற்பவனே, உனது அன்பைப் பற்றி வாழும் நெறி, அந்த நெறியில் இருந்து விலகாத பொறிகள், பொறிகளால் பெறப்படும் தவம், தவத்தில் இருந்து கிடைக்கப் பெறும் ஞானம், அதன் பயனான மெய் அறிவு, அதைக் ஈயும் உடல், அதனால் பெறப்படும் புகழ் ஆகியவற்றை கொடுத்தருள்.
விளக்கஉரை
வாய்புரம் காய்ந்தவனே – மௌனம் கொள்ளுதல்
* அவரவர் வழிபாடு செய்யும் விதமாக அந்த ரூபத்தில் அருள்பவன்
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் அமலன் இடமாம் இண்டை கொண்டு அன்பு இடையறாத தொண்டர் பரவும் சோற்றுத்துறையே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு செய்வதும், உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமானதும், ஈசனிடத்தில் அன்பு கொண்டு இடையில் விலகுதல் இல்லாத அடியார்கள், தாமரை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருத்தலம் ‘திருச்சோற்றுத்துறை’ என்னும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
இண்டை – தாமரை, மாலை வகை, இண்டு கொடி, முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி; உலகம் சார்ந்த பொருட்கள்
அண்ட முதல்வன் – ‘அண்டம்’ என்ற பொதுமையால் எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், அதன் பொருட்டே அகிலாண்டகோடி.
நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன் நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவபெருமான் இயல்பாகவே மலங்கள் அற்றவனாகிய தூயமேனியன்; இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆனதால் அழுக்கு இல்லாதவன்; என்றும் பிறப்பு இல்லாதவன்; திருவருளால் என் உள்ளத்தே வந்து வெளிப்பட்டு ‘இவன் என் அடியான்’ என்று அறிவித்து அருளினன்; .அனைவராலும் புகழத்தக்க பொன்போன்ற திருமேனியையுடைய உயர்ந்தவனாகவும் வானவனாகவும் ஆன அவன் அடியானென்று என்று கொண்டது மட்டுமல்லாமல் ‘என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக’ என்று மல பாகம் நீக்கியும் அருளினன்.