பாடல்
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டு அன்பு இடையறாத
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு செய்வதும், உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமானதும், ஈசனிடத்தில் அன்பு கொண்டு இடையில் விலகுதல் இல்லாத அடியார்கள், தாமரை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருத்தலம் ‘திருச்சோற்றுத்துறை’ என்னும் திருத்தலம் ஆகும்.
விளக்க உரை
- இண்டை – தாமரை, மாலை வகை, இண்டு கொடி, முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி; உலகம் சார்ந்த பொருட்கள்
- அண்ட முதல்வன் – ‘அண்டம்’ என்ற பொதுமையால் எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், அதன் பொருட்டே அகிலாண்டகோடி.