பாடல்
தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும், போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும் திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.
விளக்க உரை
- தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
- முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
- பூழி – விபூதி
- இனன் – சூரியன்
- இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று