பாடல்
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!
அழுகணிச் சித்தர்
பதவுரை
என் கண்ணம்மா, மனம் மகிழ்ந்து (உள்முகமாக) நோக்குவதால் அந்தரம் எனப்படும் உள்வெளியாகிய புருவத்தை வில்லாக்கி, பஞ்சாட்சரமான ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி, உச்சாடனம் செய்யும் வேகத்தினை தேராக்கி, மனமாகிய மானை காவனத்தில் வேட்டையாட, சந்திர சூரிய நாடிகள் வந்து விளையாடியதால் தானே நிகழ்ந்தது.
விளக்க உரை
- அந்தரம் – திறந்தவெளி, ஆகாசம், வெளி, உள்வெளி, இருள், ஆகாசம், நடு, இடம், இடுப்பு, நடுவுநிலை, தேவலோகம், பேதம், விபரீதம், தேவாலயம், தீமை, கூட்டம், முடிவு
- அந்தரம் என்பதற்கு ஆகாசம், வெளி போன்றவை இருப்பினும் சித்தர்கள் பெரும்பாலும் இருப்பை தன்னுள்ளே விளக்குவதால் உள்முகமாக நோக்குதல் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
- மனமகிழ்ந்து – ஆத்மார்த்தமாக உணர்தல்
சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.