முந்தைய முந்தைய பாடலில் குறிப்பிட்ட சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடை எட்டிலும், எட்டு ‘ஹகார’ மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம்’ என்னும் பீஜங்களை எழுதுக.
விளக்க உரை
பீஜங்களை எழுதும் / வரையும் முறை குறித்து
துக்கடா –சைவ சித்தாந்தம் வினா விடை
மறைஞான சம்பந்தர் வாழ்ந்த தலங்கள் எவை? மருதூர், சிதம்பரம்
முந்தைய பாடலில் கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீஜங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேல் பகுதியிலும், `ஹ்ரீம்` என்னும் பீஜத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி நேர்த்தியான அழகிய வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளியில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அந்த இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயிரெழுத்துப் பதினாறனையும் (சமஸ்கிர எழுத்துக்கள் முன்வைத்து ) அகாரம் முதலாக முறையாக எழுதுக.
விளக்க உரை
முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி?” குதம்பைச் சித்தரின் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மறைஞான சம்பந்தர் அவதரித்த தலம் எது? திருப்பெண்ணாகடம்
வழிபடுவோர்க்கு எல்லாப்பயனையும் தருவதாக இருக்கும், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை குரு உபதேச முறைப்படி துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து, இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச்செய்து, பிறவி நீக்கத்தைச் விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.
விளக்க உரை
இயந்திர ராசன்` – ஆண்பாலாகக்கூறியது வடமொழி மதம் என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது. முந்தைய பாடலில் சக்தியோடு சிவம் கலந்தே நிற்கும் என்றே வருகிறது. என்வே ராஜாதி ராஜன் என்பது போல் இயந்திரங்களுக்கு ராஜன் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இது என் தனிப்பட்டக் கருத்து(கற்றந்தோர் சபை விளக்கம் அளிப்பின் தெளிந்து மகிழ்வு அடைவேன்)
அங்க நியாசமே என்று கூறினாலும் கரநியாசமும் கூறுதல் கருத்தாம்.(நியாசம் – முத்திரை பதித்தல் – மந்திராட்சரங்களால் தேவதைகளை அந்த அந்த உறுப்புக்களில் வைக்கும் கிரியை ) `அவைகளை இதற்கேற்பச் செய்க` என்றது, `இச் சக்கரத்தில் அடைக்கப்படும் பீசங்களாலே செய்க` என்ற பொருளில்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அருணந்திசிவம் அவதரித்து வாழ்ந்தத் தலம் எது? திருத்துறையூர்
பராசத்தி வடிவமாய் உள்ளது ஒன்றே; அதுவே சிவத்திற்கும் வடிவம் ஆகும். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் வாய்க்கப்பெறும். பராசத்தி ஒன்றாக இருப்பினும் சிவன் அங்கியாய் நிற்கிறார். சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்பதால் எட்டாய்ப் பிரிந்து குணங்கள் உண்டாகின்றது. சத்தியானவள் பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் ஆகிய வடிவங்களாக பிரிந்து நிற்கையில் ஈசன் அந்தந்த வடிவங்களின் அங்கமாய் நிற்கிறார்.
விளக்க உரை
ஸ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியினது இயல்பு தெளிவிக்கும் பாடல்
அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று யோக முறைப்படி கூறிவாரும் உண்டு.
(தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை – சைவ முறைப்படி கூறுவாரும் உண்டு)
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – செப்புதல்
பொருள்
சொல்
விடை
செம்பு
சிமிழ்
நீர்வைக்கும்குடுவை
சிறுமியர்விளையாட்டுப்பாத்திரம்
இடுப்பு
வாக்கியபயன்பாடு
நீ செப்புற எதுவுமே காதுல ஏறல.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள் வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயந் தானே.
திருமந்திரம் – 10ம் திருமுறை – திருமூலர்
கருத்துஉரை
யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; முடிவான உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே(`க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்,ஸ, க, ல, ஹரீம்` ) மந்திரங்களில் முதன்மையாயது. இம்மந்திரத்திற்கு உரிய தேவியின் பெருமையை ஆராந்தால் இவளையன்றித் தெய்வம் வேறில்லை என்பதை அறியலாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஸ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின் கடலாகவும் விளங்கும். ஸ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் சரீர வடிவாகிய சிதாகாசமாம்.
விளக்க உரை
மேலே கூறப்பட்ட மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றின் சிறப்பினையும் விளக்கும் பாடல்.
`ஸ்ரீ வித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள முடியாத மெலியோர்க்குக்காக அமைந்தது இந்த புவனாபதிச் சக்கரம். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.
விளக்க உரை
காரத்தை(ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்`) முதலில் உடைமை பற்றி – `காதி வித்தை`. ஹகாரத்தையே தமிழ் முறையால், ‘அகாரம்’ . ஹகாராதி ( `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்`). ஸகாரதி (`ஸ, க, ல, ஹரீம்` ) – “சகாராதி’ . இப்பதினைந்தெழுத்தின் தொகுதியே `பஞ்ச தசாட்சரி`. `லலிதா திரிசதி தோத்திரம்` முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15 X 20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை முடிவில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம் ஆகியவை குறித்து விளக்கமான நூல்கள் உள்ளன. இது சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதம்.
இப் ‘பஞ்ச தசாட்சரி மந்திரம்’ காயத்திரியின் மற்றொரு வடிவம்`;காயத்திரியினும் இது மிக மேலானது; காயத்ரி போன்று வெளிப்படையாக கூறாமல் மிக மறை பொருளாகச் சில சங்கேத குறியீட்டுச் சொற்களால் கூறுகின்றது. இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது
`வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதி – `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்`
காமிய முத்தி – இவற்றையும் தரும். இதனால், இது சத்தி வழிபாடாகிய ஸ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்பு.
காணாதத கண்டது மாதிரி ஏன் இப்படி எல்லாத்தையும் திங்கற? வவுறு வலி வரும். சொல்றத கேளு.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அவன்கழல் செலுமே.
சிவஞான போதம் – மெய்கண்டார்
கருத்துஉரை
காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல, காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை தானேயாகக் காட்சி பெற்று காணும்படி காட்டின காரணத்தால் சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.
விளக்க உரை
ஒரு பொருளை காண வேண்டும் என விருப்பம் தோன்றும் போது, அதன் வழி நின்று கண் அப்பொருளைக் காண்கிறது. அவ்வாறு காணும் நேரத்தில் உயிரும் உடனிருந்து அப்பொருளைக் காண்கிறது. இவ்வாறு உயிரானது கண்ணுக்கு காட்டும் உபகாரத்தைச் செய்து, அதை காணச் செய்யும் உபகாரத்தையும் செய்கிறது. அதுபோல இறைவன் உயிரோடு இணைந்து காட்டவும் செய்து பின் காணவும் செய்கிறான். அவ்வாறு காணும் பொழுது ஆன்மாவானது இறை மீது அயரா அன்பு கொண்டு அரன் கழல் அடையும்.
இவ்வுடல் பெற்று உயிர் அடையும் பேறுகள் இருவகைப்படும். ஒன்று அருளுடன் கூடிய அருள் பேறு, மற்றொன்று சிவப்பேறு.
அருள் பேறு – கண் விளக்கின் ஒளியைக் கொண்டு இருள் நீங்கப் பெற்று புறப் பொருள்களைக் காண்பது. ( புற தரிசனம் )
அயரா அன்பின் – இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டும் என்பது பற்றியும் சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும் என்பதை இது விளக்கும்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அகசந்தானாச்சாரியார் நால்வர் யார்? திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினி மற்றும் பரஞ்சோதி முனிவர்
உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.
சிவன்
உலகில் நல்ல செய்கையும், கெட்ட செய்கையும் மனிதர்கள் செய்கின்றனர். அவர்களிடத்து அந்தக் கர்மங்கள் இருவகைகளாகக் காணப்படுகின்றன. முன் செய்யப்பட்ட கர்மங்கள், தற்போது செய்யப்படும் கர்மங்கள் என அவைகள் இருவகைப்படும். காட்சிக்கு புலனாகாதது தெய்வம் என்றும், கருவிகளால் செய்யப்படுவது மானுஷம் என்றும் கூறப்படுகிறது. மானுஷம் செய்கை மட்டுமே, தெய்வத்தினாலே தான் பலன் நிறைவேறுகிறது. பயிர்த் தொழிலாகிய விவசாயம் செய்யும் போது உழுவது, விதைப்பது, நாற்று நடுவது, அறுப்பது முதலியவை முயற்சிகள். இவை இரண்டு விதங்களால் கை கூடாமல் இருக்கும், ஒன்று தெய்வத்தின் சங்கல்பம், மற்ரொன்று முயற்சியின் பிழை. நல்ல முயற்சியால் புகழ்ச்சியும், தீய முயற்சியால் இகழ்ச்சியும் உண்டாகும்.
உமை
ஆத்மாவானது கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருவது எப்படி என்பதை எனக்குச் சொல்லவேண்டும்?
சிவன்
இது ரகசியங்கள் எல்லாவற்றிலும் மேலானது. தேவ ரகசியத்தைக் காட்டிலும் ஆத்ம ரகசியம் பெரிதானது. தேவர்களும், அசுரர்களும் ஆத்மா போவதையும் வருவதையும் அறிய மாட்டார்கள். ஆத்மா நுட்பமானதாலும், எதிலும் பொருந்தி இராமல் இருப்பதாலும் அது மனிதர்களால் காண இயலாததாக இருக்கிறது. மாயைகளுக்குள் ஆத்மாவே பெரிய மாயை.
ஆத்ம மாயையால் தான் முட்டையிலிருந்து பிறக்கும் அண்டஜம், வேர்வையிலிருந்து பிறக்கும் ஸ்வேதஜம், வித்து முதலியவற்றை பிளந்துகொண்டு பிறக்கும் உத்பித்ஜம், கருப்பையிலிருந்து பிறக்கும் ஸராயுஜம் ஆகியவற்றில் அந்த ஆத்மா சேருகிறது. இதற்கு புணர்ச்சி, சுக்கிலம், சோணிதம் மற்றும் தெய்வம் ஆகியவை காரணங்கள்.
கர்மங்களுக்கு ஏற்ப அதன் அங்கங்கள் உருவாகின்றன.இவ்வாறு கர்ப்பம் வளர வளர அதன் கூடவே கர்மத்துடன் சேர்ந்த ஆத்மாவும் வளர்கிறது.
பயிர்த் தொழில் காரணம் முயற்சி என்றும், மழை பெய்விப்பது, முளைப்பது போன்றவை தெய்வம் காரணம் என்பது விளங்கும். ஐந்து பூதங்கள் நிலைகள், கிரங்களின் சஞ்சாரம்,மனிதர் புத்திக்கு எட்டப்படாத, கருவிகளால் செய்யப்படாத நல்லவை, தீயவைகள் அனைத்திற்கும் தெய்வம் காரணம் என்று அறி. இவ்வாறு ஆத்மா கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருகிறது.
முன்னொரு ஆதிகாலத்தில் மனிதர்கள் நல்வினைகளைச் செய்து இரண்டு உலகங்களை அறிந்து இருந்தனர். உலகம் இவ்வாறு இருந்தபோது எல்லோரும் தர்மத்தை விரும்பி இருந்தனர். இதனால் சுவர்கள் எளிதில் நிறைந்தது. இதனால் பிரம்ம தேவர் மனிதர்களை மயங்கச் செய்தார். அது முதல் மனிதர்கள் முன்வினையை அறியவில்லை. அதோடு காம, குரோதங்களையும் சேர்த்தபிறகு அவற்றால் கெடுக்கப்பட்ட மனிதர்கள் சுவர்க்கம் செல்லவில்லை. எனவே இவர்கள் முன்வினை எதுவும் இல்லை என மேலும் பாவங்களைச் செய்தனர். தன்னுடைய லாபத்திற்காக தர்ம காரியங்கள், பரலோகப் பயன் ஆகியவற்றை மறந்து அழிவு உண்டாக்கும் அஞ்ஞானம் கொண்டனர். இவ்வாறு அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மாயா உலகில் ஆத்மா பிரவேசிக்கிறது.
உமை
‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?
* – திருவாடுதுறை போன்ற ஆதின அனுட்டானங்களில் 12 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம்; மற்ற மடங்களில் 16 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம் – ஆதீன முறைப்படி.
காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ இல்லாமவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு ஆகிய உயிரின் நிலைகள்
காரண அவத்தை – 1. கேவல அவத்தை ,2. சகல அவத்தை , 3. சுத்த அவத்தை
கேவல அவத்தை: ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை
சகல அவத்தை: மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது
சுத்த அவத்தை: பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை
காரிய அவத்தை – உயிர் செயல்படும் நிலையைக் கூறுவது. மேற்கூறிய இம்மூன்று நிலைகளில் உயிரானது கூடி நிற்பது காரண அவத்தை. வகைகள் – 5
நனவு – இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
கனவு – இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
உறக்கம் – இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
பேருறக்கம் – இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
உயிர்ப்படக்கம் – இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை
வெகுளி என்னும் குற்றதால் உட்கருவியாகிய மனம் தளர்ந்து சுழல் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் சுழலுகின்றேன்; இந்தக் குற்றத்தினின்று நீக்குதற்கு நின் அருள் அல்லாது பற்றுக்கோடு இல்லை. அருள் துணை புரிவதற்கு இப்பொழுதாகிலும் நின் திருவுள்ளம் இரங்குமோ? இரங்காது எனில் இது என்ன நியாயம்? என்னளவில் உந்தன் அருள் இல்லையோ? என் வல்வினையின் காரணமாக கற்பிக்கப்பட்டு இந்நிலை ஏற்பட்டதோ? என்னென்று கூறுவேன்.
விளக்க உரை
மாயையினைப் பற்றி அறிவு சுழலுவதால் உண்மை அறியாமல் உடல் தளர்ந்தது;
“என் அளவில் நின்பால் தண்ணருள் இலையோ” – எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் அருள் பெருகிப் பாயும் நின் திருவுள்ளம், என்பால் அஃது இல்லாமல் போயிற்றோ எனும் பொருளில்.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
சந்தானம் என்பது எதைக் குறிக்கும்? குரு சிஷ்ய பரம்பரை
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.
அபிராமி அந்தாதி
கருத்துஉரை
உன்னால் கவரப்பட்ட பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும், அவ்வாறான ஈசனுடன் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் மனத்துள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என் உயிரைக் கவர காலன் கோபத்துடன் வரும் வேளை தோன்றி அருள வேண்டும்.
தேவனே! திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி பள்ளி எழுந்தருள்வாயாக.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
திருக்கயிலாய பரம்பரை யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம் உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
திருச்சேறைச் செந்நெறிச் செல்வ மூர்த்தியானவர், விரிந்த பல்வேறு விதமான ஒளியை உடைய சூலத்தையும், வெடி முழக்கம் போல் ஒலியினை ஏற்படுத்தும் உடுக்கையையும் கையில் ஏந்தி, தலையில் கங்கையினை தரித்தும் அழகிய தோற்றம் உடைய கால பைரவ மூர்த்தியாகி, யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச, ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார்.
அவனே தானே ஆகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.
திருநெறி 1 – 10ம் சூத்திரம் – சிவஞானபோதம்
கருத்துஉரை
மாயைக்கு உட்பட்டு எவ்வாறு ஆன்மாவானது அதனோடு கலந்து நிற்கிறதோ அதுபோலவே சுத்த நிலையில் ஆன்மா கலந்து நிற்கும் பொழுதுகளில் அவன் தானாகவே ஒன்றாகி அந்த நெறிபற்றி நிற்பான். அந்நிலையில் ஆன்மாவினை மலம் பற்றாது. பற்றினாலும் வலிமை குறைந்துவிடும்.
பந்தணைநல்லூர்ப் பெருமான் முற்றாத (இளம்) பிறை சூடிய சடையினர்; மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர்; மூவுலகாலும் துதிக்கப்படும் முதல்வர்.சான்றோர்களால் துதிக்கப்படும் திருவடிகளை உடையவர்; பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர்; மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதியினை தனது பாகமாக உடையவர்; வெண்மையான திருநீறு அணிபவர்; தம் இயல்பான பண்பினால் உலகங்கள் ஆக நிற்பவராகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர்; குளிர்ந்த கண் கொண்டவராகி அரக்கர்களின் பகைவர் மதில்களை எரித்தவர் அப்பெருமானார்
விளக்க உரை
புறப்பற்றுதல் மூவரானார் – அயன் , மால் , உருத்திரன் ` – காரணக் கடவுளர். இவர்கள் ஒரோவோர் அதிகாரத்தை தங்களிடத்தில் வைத்து அதன் வாயிலாக, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களை நடத்துதலால் மூவரானார்.
முதல்வரானார் – முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி ‘முதல்வரானார்.
ஊழி ஆனார் – ஊழி பற்றி உலகம் ஒடுங்குங்காலம் உலகமானார்.
முற்றா மதிச்சடையார், திங்கள் கங்கையாள் காதலார் – ஒரே பாடலில் இருமுறை திங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. தனது தவற்றினை ஒப்புக்கொண்டதால் கங்கையைக்கு நிகராக திங்களைக் காதலிக்கிறார் என்றும், அதனால் திங்களையும் தனது சடையில் சூடி உள்ளார் என்பதும் விளங்கும்.
6ம் திருமுறை – திரு அருட்பா – சிவ தரிசனம் – வள்ளலார்
கருத்துஉரை
எல்லாம் அறிந்தவனே. நல்ல நிதியினை உடையவனே, எனது நாயகனே அனைவராலும் வணங்கத் தக்கவனாக விளங்கும் நடராஜ பதியே! எப்பொழுதும் பெரும் இன்பம் உடைய தேவர்கள் உன்னை தலைமேல் தாங்கி நீ மண்ணாளவும், வானத்தையும் ஆள மனதால் நினைத்தேனோ.; அப்படிப்பட்ட உன்னை மனித்தில் நினைத்தேனோ, உன் பெருமை பேசாமல், தேன் போன்று பலவகையிலும் வேறு வார்த்தை உரைப்பவர்களும் மகிழ்ந்து இருக்க விரும்பினேனோ; இன்சுவைகளை விரும்பினேனோ; தீமைகள் ஏதாகிலும் செய்தேனோ; உடையவனே நான் எந்த பாவமும் அறியவில்லை; நீ ஏன் இருமையில் இருக்கின்றாய், இது அழகோ! எனது ஒருமையினை நீ அறியாயோ!
விளக்க உரை
பலவகையிலும் தேன் மொழி உரைப்பவர்கள் – இறை சொற்கள் அன்றி பிற சொற்கள் பேசுவோர்
நன்னிதி – குறைவு வரா செல்வம்
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் – நீ எப்பொழுதும் அருளுபவன், இப்பொழுது அருள் செய்யவில்லை எனும் பொருளில்.
என்ஒருமை அறியாயோ – என் மனம் எப்பொழுதும் உன் சிந்தனையைப் பற்றி இருக்கும். இது நீ அறியாயோ?
துக்கடா
சைவசித்தாந்தம்வினாவிடை
முதன் முதலில் சித்தாந்தம் எனும் சொல்லை கையாண்டவர் திருமூலர்
கயிலாயத்தில் உறைபவனே! பெண் குரங்கானது தனது குட்டிப் பற்றி நினைவுறாது அங்கும் இங்கும் தாவும், குட்டி தாய்க்குரங்கைப் பற்றிக் கொள்ளும். அதுபோல் இந்த ஆத்மாவானது பரமாத்மாவாகிய உன்னைப் பற்றிக் கொண்டால் வினைகள் அறுபடும். நாயேன் இந்த உண்மையை அறிந்து புறத் தேடல்களை கொள்ளும் சிந்தனையை என்ன செய்வேன்? ஆகவே பெருமானே எனது தீவினைகளை அகற்றி, பூசை செய்வதை ஒத்து தாய்ப் பூனை தனது தனது குட்டியை எங்கு சென்றாலும் கவ்விக் கொண்டு செல்லுமோ அவ்வாறு இந்த நாயேனை நீ ஆட்கொண்டு அருள வேண்டும்.
விளக்க உரை
புறப்பற்றுதல் விடுத்து அவனே வந்து ஆட்கொள்ளும் அகப்பற்றினை வேண்டுதல் குறித்தது.