அவனே தானே ஆகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.
திருநெறி 1 – 10ம் சூத்திரம் – சிவஞானபோதம்
கருத்துஉரை
மாயைக்கு உட்பட்டு எவ்வாறு ஆன்மாவானது அதனோடு கலந்து நிற்கிறதோ அதுபோலவே சுத்த நிலையில் ஆன்மா கலந்து நிற்கும் பொழுதுகளில் அவன் தானாகவே ஒன்றாகி அந்த நெறிபற்றி நிற்பான். அந்நிலையில் ஆன்மாவினை மலம் பற்றாது. பற்றினாலும் வலிமை குறைந்துவிடும்.
பந்தணைநல்லூர்ப் பெருமான் முற்றாத (இளம்) பிறை சூடிய சடையினர்; மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர்; மூவுலகாலும் துதிக்கப்படும் முதல்வர்.சான்றோர்களால் துதிக்கப்படும் திருவடிகளை உடையவர்; பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர்; மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதியினை தனது பாகமாக உடையவர்; வெண்மையான திருநீறு அணிபவர்; தம் இயல்பான பண்பினால் உலகங்கள் ஆக நிற்பவராகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர்; குளிர்ந்த கண் கொண்டவராகி அரக்கர்களின் பகைவர் மதில்களை எரித்தவர் அப்பெருமானார்
விளக்க உரை
புறப்பற்றுதல் மூவரானார் – அயன் , மால் , உருத்திரன் ` – காரணக் கடவுளர். இவர்கள் ஒரோவோர் அதிகாரத்தை தங்களிடத்தில் வைத்து அதன் வாயிலாக, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களை நடத்துதலால் மூவரானார்.
முதல்வரானார் – முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி ‘முதல்வரானார்.
ஊழி ஆனார் – ஊழி பற்றி உலகம் ஒடுங்குங்காலம் உலகமானார்.
முற்றா மதிச்சடையார், திங்கள் கங்கையாள் காதலார் – ஒரே பாடலில் இருமுறை திங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. தனது தவற்றினை ஒப்புக்கொண்டதால் கங்கையைக்கு நிகராக திங்களைக் காதலிக்கிறார் என்றும், அதனால் திங்களையும் தனது சடையில் சூடி உள்ளார் என்பதும் விளங்கும்.
6ம் திருமுறை – திரு அருட்பா – சிவ தரிசனம் – வள்ளலார்
கருத்துஉரை
எல்லாம் அறிந்தவனே. நல்ல நிதியினை உடையவனே, எனது நாயகனே அனைவராலும் வணங்கத் தக்கவனாக விளங்கும் நடராஜ பதியே! எப்பொழுதும் பெரும் இன்பம் உடைய தேவர்கள் உன்னை தலைமேல் தாங்கி நீ மண்ணாளவும், வானத்தையும் ஆள மனதால் நினைத்தேனோ.; அப்படிப்பட்ட உன்னை மனித்தில் நினைத்தேனோ, உன் பெருமை பேசாமல், தேன் போன்று பலவகையிலும் வேறு வார்த்தை உரைப்பவர்களும் மகிழ்ந்து இருக்க விரும்பினேனோ; இன்சுவைகளை விரும்பினேனோ; தீமைகள் ஏதாகிலும் செய்தேனோ; உடையவனே நான் எந்த பாவமும் அறியவில்லை; நீ ஏன் இருமையில் இருக்கின்றாய், இது அழகோ! எனது ஒருமையினை நீ அறியாயோ!
விளக்க உரை
பலவகையிலும் தேன் மொழி உரைப்பவர்கள் – இறை சொற்கள் அன்றி பிற சொற்கள் பேசுவோர்
நன்னிதி – குறைவு வரா செல்வம்
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் – நீ எப்பொழுதும் அருளுபவன், இப்பொழுது அருள் செய்யவில்லை எனும் பொருளில்.
என்ஒருமை அறியாயோ – என் மனம் எப்பொழுதும் உன் சிந்தனையைப் பற்றி இருக்கும். இது நீ அறியாயோ?
துக்கடா
சைவசித்தாந்தம்வினாவிடை
முதன் முதலில் சித்தாந்தம் எனும் சொல்லை கையாண்டவர் திருமூலர்
கயிலாயத்தில் உறைபவனே! பெண் குரங்கானது தனது குட்டிப் பற்றி நினைவுறாது அங்கும் இங்கும் தாவும், குட்டி தாய்க்குரங்கைப் பற்றிக் கொள்ளும். அதுபோல் இந்த ஆத்மாவானது பரமாத்மாவாகிய உன்னைப் பற்றிக் கொண்டால் வினைகள் அறுபடும். நாயேன் இந்த உண்மையை அறிந்து புறத் தேடல்களை கொள்ளும் சிந்தனையை என்ன செய்வேன்? ஆகவே பெருமானே எனது தீவினைகளை அகற்றி, பூசை செய்வதை ஒத்து தாய்ப் பூனை தனது தனது குட்டியை எங்கு சென்றாலும் கவ்விக் கொண்டு செல்லுமோ அவ்வாறு இந்த நாயேனை நீ ஆட்கொண்டு அருள வேண்டும்.
விளக்க உரை
புறப்பற்றுதல் விடுத்து அவனே வந்து ஆட்கொள்ளும் அகப்பற்றினை வேண்டுதல் குறித்தது.
சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், ப்ராமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும், ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும், கையிலே பாசமும் ,அங்குசமும், பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றவளும், தாமரையில் வீற்றிருப்பவளும்,. சிவபுரத்தை ஆட்சி செய்வவளும், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவளும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்பவளும், தாமரை முகம் கொண்டவளும், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவளும், கருணை கொண்டவளும், திருக்கயிலை மலையில் ஈசனின் கூட இருப்பவளும். நவரச குணங்கள் கொண்டவளும், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவளும். மேகம் போன்ற நிறம் உடையவளும், சிவந்த உதடுகள் உடையவளும் ஆன அழகான அபயாம்பிகைத்தாய் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.
விளக்க உரை
வழிபடும்தெய்வங்கள்அனைத்திலும்அன்னையே அந்த தெய்வவடிவாகஇருக்கிறாள்எனும்பொருளில்இப்பாடல்
எண்ண இயலாதா அளவு துளைகளுடன் கூடிய இருட்டறை ஒன்று உள்ளது. ஆயினும் அந்த அறையில் சிறிதும் ஒளிபுகாது இருட்டில் இருக்கிறது. இந்த இருள் எத்தகைய துன்பத்தை தரும் என்பது குறித்து சொல்லப்பட வேண்டியது இல்லை. ஆனாலும் இறைவன் திரு உள்ளம் பற்றுவான் ஆயின் பெரிய இன்பம் தரும் மாளிகை ஒத்ததாகிய இல்லம் கிடைத்துவிடும்.
விளக்க உரை
திருவருள் துணைகிடைத்தலின் அருமையை இப்பாடல் விளக்கும்
சொல்லப்படும் மந்திரங்களின் மேம்பட்ட நிலை, அம்மந்திரமாக ஆகுதல். தன்னிலை மறந்து அவ்வகைப்பட்ட ஐந்தெழுத்தில் ஒன்றும் போது அமுத தாரகைகள் அன்னாக்கில் தோன்றும். மேல் விபரங்களை குரு மூலமாக அறிக
தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
விளக்க உரை
தேய்ந்து விளங்கக்கூடிய பிறைச்சந்திரனை அணிந்தவனே அல்லது தேய்ந்து விளங்கும் வெளிறிய அறிவு உடையவனே – சிலேடை
உன் தலை மேல் இருப்பவள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். நீ அதைக் கவனிக்காமல் பார்வதியோடு இங்கு வீற்றிருக்கிறாய். உன் மனைவிக்கு பயந்ததாகவும் தெரியவில்லை. அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு இருக்கிறாளோ? வேறு எந்தப் பெண்ணும் இவ்வாறு பொறுமையுடன் இருக்கமாட்டாள். உன் கைகளில் இருக்கும் மழு, ஆயுதம் கண்டு பயந்து உடன்பட்டு இருக்கிறாளோ, இந்த ரகசியத்தை எனக்குச் சொல் என்று சிலேடையாகப் பாடுகிறார்.
ஏந்து மங்கை – ஏந்தப் பெற்ற மங்கை; இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, பாலாம்பிகா – (வாலாம்பிகை) என்றனர் வட மொழியில்
இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம் எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன் வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும் மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால் சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப் பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப் பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே,
சிவஞான சித்தியார்
கருத்துஉரை
விறகில் தீயினைப் போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் சுவை போலவும், எள்ளினுள் எண்ணெயைப் போலவும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். எனவே இறைவனை அகத்திலோ, புறத்திலோ வணங்கி வழிபட்டால் அவர்களுக்கு அருள்பாலிப்பான். ஆயினும் தங்களைப் பற்றியுள்ள மலம் முற்றிலும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சிவபெருமானை அவனுடைய செந்தாமரை மலர்போன்ற திருவடி ஞானத்தினால் தங்கள் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளுவித்து அகவழிபாடு இயற்றுவார்கள். அத்தகைய அடியார்கட்கு இறைவன் மாயை பற்றி விளக்கி, தானே தோன்றி அவர்களது மலப்பற்றினை அறவே துடைத்து அருளுவான். நெருப்பில் இட்ட இரும்பானது நெருப்பின் தன்மையை பெறுவது போல இறைவனும் உயிரைத் தன் வண்ணம் ஆக்குவான். தனது பேரானந்தப் பெரும் செல்வம் முழுவதையும் உயிருக்கு அருளுவான்.
விளக்க உரை
அகவழிபாட்டின் சிறப்பு எடுத்து உரைத்தல் குறித்தது இப்பாடல்
பக்குவப் பட்ட உயிரின் வகையினைக் காலம் முன்வைத்து காட்டுவதற்காக 4 உவமைகள் கூறப்பட்டுள்ளன.
தீயானது தன்னில் இடப்பட்டவைகளின் மாசுகளை நீக்கி, தன் வண்ணமாக செய்து விடும். அது போல அகவழிபாடு கொண்ட ஆன்மாவை அதன் மலம் நீக்கி, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எண் குணத்தான் தன் வண்ணமாக செய்து பர முக்தியைத் தருவான்.
சிவபெருமானே, பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஏத்தும் திருவொற்றியூரில் உள்ள சிவக்கரும்பே, சிவகதியை நல்கும் கருணைக் கடலே, வஞ்சம் புரியும் வினைகளுக்கு ஒரு கொள்கலம் போன்ற மனமுடைய யான் எல்லா வகையிலும் கொடியவனாவேன்; எளிமைக்கேற்ற புகலிடமென்று நினைந்து நின் திருக்கோயிலை அடைந்து நின் சன்னிதிக்கு முன்பு நிற்கின்றேன்; பொறுக்குமளவிற்கு அடங்காத பாவியெனக் கருதி இகழ்ந்து என்னை விலக்கினால் யான் என்ன செய்வேன்?
விளக்க உரை
மிக்க பெரும் பாவியென்று இகழ்ந்து ஒதுக்காது அருள் செய்தல் வேண்டுமென்று முறையிட்டவாறு
வஞ்சகவினை – ஈஸ்வர அனுபவமே பெரிது என்று எண்ணி உயிர்கள் பிறக்கும் போது கொண்ட நினைவு மறந்து மாயைக்கு உட்பட்டு வினைகளை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறத்தல் கண்டு இவ் வார்த்தை. வினைகள் நிரம்பப் பெற்றதால் உடல் கொள்கலன்
கதி தரும் கருணையங் கடலே – மாயைக்கு உட்பட்ட உயிர்கள் அனைத்தையும் அவற்றின் குறையைக் காணாமல் பக்குவப்படுத்தி அருள்கூர்ந்து சிவகதி தருதலால் பொருட்டு
அனைத்திலும் கொடியேன் – மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் கொடியவன் எனும் பொருள் பற்றி
‘பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஓதும்’ என்பதையும் ‘எஞ்சலில் அடங்காப் பாவி’ என்பதையும் ஒப்பு நோக்கி தெய்வங்களுக்கும், வினை கொண்ட உயிர்களுக்கும் ஒன்றாகவே அருள்கிறான் எனும் பொருள் பற்றி.
கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும் சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும் அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்துதோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சோலைகளால் சூழப்பட்டு இருக்கும் பூவணத்தில் உறையும் எம் புனிதனார் அடியார்களுக்கு மனக்கண் முன்னர், கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் , பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மேம்பட்ட மறைகளை ஓதும் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் அகிய நால்வரருக்கு வேத நெறிகளைச் சொற்களால் விளக்காமல் மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும், உடலைச் சுற்றி பாம்புகளை அணிந்த காட்சியும் கையினில் மான் ஏந்திய காட்சியும் , அறத்தின் உண்மையை உணராத காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் வெறுக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.
விளக்க உரை
ஐவகை – ஐந்து நிறம் . படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்கள் இந்த ஆற்றல்கள் ஒருங்கி நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்கும். இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் . – ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்‘ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் யாண்டும் சிந்திக்கத் தக்கது.
புறத்தில் உள்ள பஞ்சகோசமாகவும், அதனுள் உறையும் உயிராகவும், அவ்வாறு இல்லாத பொருள்களிலும் உறைபவனாக இருத்தலினால் எல்லா இடங்களிலும் அவனை வழிபடுக எனும் பொருளில். அஃதாவது சகலமும் ஈஸ்வரப் பொருள் பற்றியது.
பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.
கந்த புராணம் – ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்துஉரை
தாமரை மலரின் மீது ஆசனத்தைக் கொண்டவனாகிய தேவர் உலகம் சார்ந்தவராகிய பிரம்மா, ஈசனை மதித்திடால் கர்வம் கொண்ட பொழுதினில் ஒரு தலையை கிள்ளி அதனால் பெறப்படும் இரத்தினை கைகளில் கொண்டும் அவர்தம் கர்வத்தை அழித்தும் (அத்துணை கோபம் உடையவராக இருப்பினும்) உயிர்கள் மீதுபரிவும் உடையவராகிய வடுகனைப் போற்றுவோம்.
பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னந் தனியனே.
தாயுமானவர்
கருத்துஉரை
பொன்னும், அந்த பொருளால் வாழ துணையாக நிற்கும் மாதரும், அவர்களோடு கூடிவாழும்வாழ்க்கைக்குநிலைக்களமாகியஇப்பூமியும்நிலையானபொருள்கள்என்றுசிறிதும்எண்ணமாட்டேன்; எளியவன்ஆயினும்என்னைக்கருதிஎன்னைநாடிவந்துஎனக்குஅருள்செய்தஇன்னுயிர்த்தலைவனாகியஉன்னையேஇடையறாதுஉள்ளன்போடுஎண்ணுவன்; உன்னைவிட்டுநீங்காதஉன்திருவருளாகியதூயநிலையாயுள்ளபெருவெளிஒளியினைதனியேஇருந்துபெரிதும்சிந்திப்பேன்.
என்னை நாடிய – அருளார்களை இறை பற்றுதல் ஞானத்தின் உச்சநிலை. ‘தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்’ எனும் மாணிக்க வாசகரின் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கவை.
தன்னந் தனியனே – மாயைக்கும் கர்மாக்களும் உட்பட்ட மனிதர்கள் வாழ்வு வினை வழியது. வினையை கடந்து போகையில் எவரும் துணை வரார் எனும் பொருளில்.
இறைவன் ‘என்னை நாடிய’ என்ற பின்னும் ‘உன்னை நாடுவன்’ என்பது ஏன்? – ஈசன் அருள் புரிய எண்ணினாலும், வைராக்கியம் கொண்டு கர்மவினைகளை விலக்கி மாயையை விலக்க வேண்டும்.
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
(தோலில் ஏற்படும்) சுருக்கம்
குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
கொம்பு, தந்தம், எயிறு
மரக்கொம்பு
வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
கொம்புக் குறியீடு (கெ,கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல் மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
சிவவாக்கியர்
கருத்துஉரை
வேங்கையை பிடிக்க ஆங்காங்கே ஆட்டினை கட்டி வைத்து பிடிப்பது போல் எனக்கு செல்வத்தைக் காட்டி எனது மதியினை மயக்குதல் ஆகுமோ? வளைந்த தந்தம் உடைய யானையை கொன்று உரித்து அதனை தோலாக போர்த்திக் கொண்ட வையகத்தின் அரசனே, வீடு பேறாகிய முக்தி எனில் என்னவென்று காட்டி என்னை எனக்கு வெளிப்படுத்துவாயாக.
விளக்க உரை
‘மாடுகாட்டி என்னைநீ மனைப்படுத்தலாகுமோ‘ என்று சில இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மூலத்தில் அவ்வாறு இல்லாததால் ‘ மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ’ என்பதே சரியான பாடல் வரியாகும்.
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்; ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின் வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே
சிவவாக்கியர்
கருத்துஉரை
செம்மையான தேங்காய் உள்ளே இளநீர் சேரும் காரணம் போல், ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டான். அந்த ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டப் பின் இந்த உலகத்து மனிதர்களிடம் நான் வாய் திறந்து பேசுவது இல்லை.
விளக்க உரை
மரத்தில் காய் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நீரானது மேலே சென்று இயல்பாக முயற்சிகள் இல்லாமல் அடைந்து விடும். அதுபோல் இயல்பாக என்னுள் ஐயன் அமர்ந்து கொண்டான்.
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே – ஆகையால் மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.
மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் உரைத்த பாடல்களை மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் கேட்டு இப்பாடல்களை எழுதி இருக்கலாம். (இது என் தனிக் கருத்து)
ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே இரவுபகல் உணரவோர் சிந்தைத் திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.
சிவஞானசித்தியார் – பரபக்கம் பாடல்
கருத்துஉரை
ஒற்றைக் கொம்பினை உடையவன்; இரு காதுகளை உடையவன்; கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதயானையின் மதநீர் கொண்டவன்; நான்காவதான தொங்கும் வாயினை உடையவன்; ஐந்து கைகளை உடையவன்; வளைந்த ஓடும் ஆறு(கங்கை) பிறை நிலவு, கொன்றை மாலை சூடிகொண்டிருக்கும், நீண்ட தாழ் சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவனாகிய யானை முகத்தினை உடையவரின் பாதங்களை இரவு பகல் பாராது பேரன்போடு வணங்கி உணர்வோரின் சிந்தைத் தரும் குற்றத்தை நீக்கும் பிரம்மனும், திருமாலும் கொடுக்கும் செல்வம் எல்லாம் ஒரு பொருளாக நின்று உணர்த்தி தருபவன்.
இனி வரும் பிறவிகளை நீக்கும் பெரியோனும், தென் திசை அரசனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப்பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினைகள் இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.
விளக்க உரை
சஞ்சீதம் எனும் இறந்த கால கர்மாக்கள், பிரார்ப்தம் எனும் நிகழ் கால கர்மாக்கள் ஆகியவற்றை அழித்துவிட்டான். அவ்வாறு அழித்து என் முன் நின்றான் என்பதில் இருந்து ஆகாமியம் எனும் எதிர்கால கர்மாக்கள் அழிந்து விட்டன என்பது மறை பொருள். (நல்வினை, தீவினை என்று தவறான பொருள் கொண்டு இடர்படுவாரும் உண்டு).