திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர் நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில் சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.
விளக்கஉரை
சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.
ஐம்புல நுகர்ச்சியின் காரணமாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்கள், கருத்தில் முற்றுப் பெற்று நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், பிறரால் போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடும் நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் மற்றும் அவற்றால் வரும் பயன்களுடன் நுகர்ச்சி, உண்ணும் உணவு, உணரும் உணர்வு, உறங்கும் உறக்கம், கருதப்படும் அளவான பொன் முதலிய செல்வங்கள் ஆகியவை திருவருள் அம்மையாகிய சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.
விளக்கஉரை
சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் பற்றி கூறப்பட்டப் பாடல்
தானாகக்காணும் கனகம் – பொன் பெற்றபிறகு அனைத்தும் உண்டாகும் என்பது பற்றி.
காரிகை – சாம்பவி
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சிவனுக்குத் தத்புருட மந்திரம் எந்த உறுப்பாகும்? முகம்
நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம் தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே
பத்தாம் திருமுறை- திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.
விளக்கஉரை
நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயல்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
விளக்கஉரை
கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது.
இறந்தவர்களது எலும்புகள் பலவற்றையும், எலும்புடன் கவசம் போன்ற மண்டையோடு பலவற்றையும் தாங்கி நிற்பவனும், பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவனுமான சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற அவன், தேவர் பலர்க்கும் மணிமுடி தரித்த மேலாலவர்களுக்கும் முதலானவனாய் இருந்தான். அது மட்டும் இன்றியும், அவன் அவற்றைத் தாங்காது ஒழிவனாயின், மாயா காரியப் பொருள்கள், சிவபெருமான் கைப்பற்றுதல் இன்றி உலகில் நிலைபெறாது அழிந்து ஒழியும்.
விளக்கஉரை
எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்துதல் – தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல்வன் என்பதைக் காட்டப் பெறும். ஏனைய மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும்.
காரணமாயை என்றும் அழிவினை அடையாது, சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பது ஆகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
வேக வடிவம் என்பது என்ன? கால சம்ஹாரர் போல் உயிர்களுக்கு கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி
அம்மையானவள், அனைத்து உயிர்களாக நிற்கின்றவளும், எல்லாப் பொருள்களிலும் அதன் தன்மையில் தானே ஆகி நிற்பவளும், தம் இயல்பு தன்மையினால் எங்கும் நிறைந்திருந்து ஈன்றவளாகவும் நிற்பாள். ஆகையால் பக்குவம் உடையவன் அவளை வணங்கி அவ்வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆன பயன்களை எய்துவான்.
ஈசனை வணங்கிடும் அடியாரது உள்ளம் எந்தவகையிலேனும் வருந்துமாயின், அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக தேசமும், அது சார்ந்த நாடும் அதன் சிறப்புக்களும் அழிந்திடும்; விண்ணுலக வேந்தனாகிய இந்திரன் ஆட்சி பீடம் மற்றும் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்து ஒழியும். இஃது நமது நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.
விளக்கஉரை
மாகேசுர நிந்தையால் விளையும் கேடு பற்றியும் சிவனடியாரது மனம் வருந்தாமல் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் என்பது பற்றியும் விளக்கும் பாடல்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை? சகளநிட்களத் திருமேனி, வியத்தாவியத்த லிங்கம்
அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய், கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.
அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.
எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.
தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும், அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.
விளக்க உரை மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல். சித்து – அதிசயச் செயல்கள் வழி – சிவத்தொடு நின்றே செய்தல்
சிவபெருமான், வினைகள் பற்றிவரும் உருவத்தை உடையவன் அல்லன்; பிறப்பில்லாதவன்; இயல்பாகவே மலமில்லாதவன்; தேடிச் சென்றடைக்கூடிய அளவிற்கு செல்வம் இல்லாதவன் அல்லன்; குற்றம் அற்றவன்; தேவர்களுக்கும் தேவனாக உள்ளவன்; தனக்கு யாரும் ஒப்பில்லாதவன்; பூதப் படைகளை உடைமையாகக் கொண்டு ஆள்பவன்; தான் எல்லாப் பொருட்கும் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல் தான் எந்த ஒன்றையும் சார்ந்திருக்கும் தன்மை இல்லாதவன்; இத் தன்மைகளை உடைய ஒப்பில்லாத பண்புகளை வாய்ந்த அவன் வலியவந்து அடியேன் உள்ளம் புகுந்தான்.
நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள் தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
யோகியர்களே, நீங்கள் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு வேறு மருந்து ஒன்றும் தேவை இல்லை. (குரு முகமாக அறிக). மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள அறிவிற்கு ஆதாரமான உச்சியில் அதனை அப்பினாலும் மேலே குறிப்பிட்டவாறு சிவநீராக மாறும். இதனாலே நரையும் மாறும்.
விளக்கஉரை
நூறுதல் – பொடித்தல் என்பதால் ‘நூறு மிளகு“ எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாது.
அமுரி தாரணைக்குத் துணையாக இருக்கும் சிலவற்ரைப் பற்றி கூறுதல்
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுற மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
நிழல் தரும் பந்தல் போன்றதாகிய இவ்வுடம்பு தன் நிலைகெட்டு விட்டது. உயிர்நிலை கட்டுப்பாடு இல்லாமல், ஒன்பது வாசலால் ஒருங்கே அடைத்து விடப்பட்டது. அனைவரும் துன்பம் அடையும் படியான துக்க காலம் வர அன்புடையவர்கள் மேலும் மேலும் அழுது அந்த இடம் நீங்கினர்.
விளக்க உரை
‘இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பது குறித்தப் பாடல்
‘துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு எனப் பொருள் கொண்டு விரைந்து துன்பம் கொடுப்பவனாகிய காலன் சேர்ந்து’ எனப் பொருளிளும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆன்றோர் பொருள் உணர்ந்து அறிக.
`மனைவி முதலான உறவுகள் உண்மையில் அன்புடையர்களாக இருப்பினும் , அவர்களால் நிலையாமை விலக்க இயலாது’ என்பது பற்றியது.
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
பொறாமை உடையவர்களாக ஆகி, அறத்தின் வழியில் இருந்து விலகி, தீக்குணம் உடையவர்களாக பிறர் பொருளைக் கொள்ளாதீர்கள். நற்பண்பு உடையவர்களாக உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.
விளக்க உரை
இவ்வாறான நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பு.
`உணர்வு நிலையாமையை உணர்ந்து நிலைபெறுவதற்கு உரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது பற்றி கூறப்படும் பாடல்.
‘அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே’ எனும் அபிராமி அந்தாதி யாண்டும் சிந்திக்கத் தக்கது.
யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற மூடர்களோடு ஒன்றாக பொருந்தி இருந்தேன். அவரை அடைந்த பின், என்னைக் அந்தக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அறியாமையை நீக்கிச் சிவத்தை உணருமாறு ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீண்டும் அந்தக் கூட்டத்திற்கு செல்லாதவாறு இருக்கும் உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.
விளக்கஉரை
குருவருளில் உறைத்து நிற்பதாலே கருணை உண்டாகும் என்பது பற்றிய பாடல்
உலகாயத மதத்தினை முன்வைத்து அதன் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார்; மண்ணவர், விண்ணவர், முத்தேவர் முதலிய யாவர்களாலும் தொழப்படுவானாகிய சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியவும் மாட்டார். தம்மிடம் வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்க மாட்டார்; பொருள் அற்று இறந்தவர்களுக்கு ஈயின் தலையளவு ஆன சிறுபொருளைக்கூட கொடுக்கவும் மாட்டார்கள். வழிப்போக்கர் தங்கி சிரமப் பரிகாரம் செய்து செய்ய சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர்விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்ய மாட்டார்கள்; நீர் எடுத்து வந்து எல்லார்க்கும் நல்ல பல பயன் தரும் சோலைகளை வளர்க்க மாட்டார்கள். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர்களே! நரகத்தில் நிலையான வாசம் விரும்பியுள்ளீர்களோ?
விளக்கஉரை
நல்நெஞ்சினீர் – வஞ்சப் புகழ்ச்சி.
நல்லறம் புரியாது நாளை வீணாளாக்கிச் சாவை நெருங்கினீரே என்பது பற்றியது
ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக (நமசிவாய) முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும் (நமவாசிய). அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும்(வாசிய). அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும் (வாசி).
விளக்கஉரை
இவ்வாறு அறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பு.
பிற யோகிகள் யோகத்தை மந்திரம் இல்லாமலும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன் என்பது குறிப்பு.
இச் சிவயோக நெறியால் பாசமும், அத்துடன் நிற்கும் பசுத்துவமும் நீங்கிச் சிவத் தன்மையைப் பெறுவன்
என்ற திருவுந்தியார் பாடலை ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
பசுக்கள், அரிசி கழுவிய நீராகிய கழுநீரை உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லாது; அக் கழுநீரையே விரும்பி ஏற்றுக் கொண்டு உடல் மெலியும். அத்தன்மையான அப்பசுக்கள் தம் இயல்பில் இருந்து மாறுவது இல்லை. வளமையுடைய பருகும் பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பதை அறியாதவர்கள் கள்ளின் சுவையை நினைத்துக் கள்ளுண்ணும் மக்கள் தம் இயல்பில் இருந்து நீங்கியவர்கள் ஆவார்.
விளக்கஉரை
‘கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா’ எனும் வரிகளால் கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும்.
உடலாகிய திருமேனியில் எலும்பு, தோல் முதலியவைகளை விரும்பிப்பூண்ட ஆதி வயிரவர் மேற்கூறியவற்றுடன் சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். அதோடு தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.
விளக்க உரை
வயிரவரது உருவ அமைப்பும், கையில் உள்ள படைக்கலம் முதலியவைகளும் கூறப்பட்டன.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
இறைவன் வேறாய் நின்று உதவுவது என்ன உபகாரம்? காட்டும் உபகாரம்
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்; பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய் தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே;
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
உயிர்களுக்கு நன்மைகளை எல்லாம் செய்ய வல்லவனும், அனைத்து உயிர்களையும் ஒன்றாக நோக்கும் நடுவு நிலையாளனும், இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் இழிவு உண்டாகும் பொய்மையாக இன்றி, உண்மையாக விரும்புங்கள்; அவ்வாறு விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, ‘இவ்வுயிர் யாது’ எனச் சிறப்பாக நோக்கி, உம்முடைய குற்றங்களை நீக்கி, இயற்கையாகச் செய்து அத் தொடக்க நிலையில் இருந்து பின்னும் தொடர்ந்தே நிற்பான்.
விளக்க உரை
மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது என்பது பற்றி கூறப்படும் பாடல்.
தொன்னிலை – அனாதி நிலை; உண்மையியல்பு (பொய்யாது நாடுதல் இல்லாமல் வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை – பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை – பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை)
இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.
நேர்தரு மந்திர நாயகி யானவள் யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை கார்தரு வண்ணம் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
வழிபடுவார்க்கு நேரில் வந்து அருள் புரிகின்றவளும், அழகிய தேவி ஆனவளும் ஆகிய அந்த நவாக்கரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் எனில், மழை தரும் மேகம் போன்ற நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அவ்வண்ணம் நீ நட; அப்பொழுது நீ மனதால் நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும்.
விளக்க உரை
இச்சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்.
திரிகை என்பது கடைக்குறைந்து ‘தரு’ என நின்றது
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
இறைவன் உயிருக்கு வேறாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன? பேதம்