பாடல்
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
இறந்தவர்களது எலும்புகள் பலவற்றையும், எலும்புடன் கவசம் போன்ற மண்டையோடு பலவற்றையும் தாங்கி நிற்பவனும், பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவனுமான சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற அவன், தேவர் பலர்க்கும் மணிமுடி தரித்த மேலாலவர்களுக்கும் முதலானவனாய் இருந்தான். அது மட்டும் இன்றியும், அவன் அவற்றைத் தாங்காது ஒழிவனாயின், மாயா காரியப் பொருள்கள், சிவபெருமான் கைப்பற்றுதல் இன்றி உலகில் நிலைபெறாது அழிந்து ஒழியும்.
விளக்க உரை
- எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்துதல் – தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல்வன் என்பதைக் காட்டப் பெறும். ஏனைய மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும்.
- காரணமாயை என்றும் அழிவினை அடையாது, சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பது ஆகும்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
வேக வடிவம் என்பது என்ன?
கால சம்ஹாரர் போல் உயிர்களுக்கு கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி