அமுதமொழி – குரோதி – தை – 26 (2025)


பாடல்

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே

பத்தாம் திருமுறை ‍ – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – மயக்கம் உடையவர் எவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பல்வேறு வழியில் பொருள் ஈட்டி அதனால் செல்வ செறுக்கு கொண்டு ஆழ்ந்த கீழ் நிலையில் இருபவர்களும், அறியாமையானது இருள் போல் மறைக்கும் காலத்தில் மின்னல் போல் தான் பெற்ற சிறு அறிவை பெற்றவர்களும், மருட்சி உடைய அழகிய பெண்ணைக் கண்டு அவர்களின் மோகத்தில் மயங்கி இருப்பவர்களும் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இருப்பார்கள். இவர்களின் மயக்கம் கொண்ட சிந்தனையை மாற்ற இயலாது.

 விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #பிறன்மனை_நயவாமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 03 (2024)


விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்

பதவுரை

விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடலில் பொருந்துமாறு மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி செய்து, நெஞ்சத்தின் இயல்பு காரணமாக மாறும்படியாக இருக்கும் உலகியலை நோக்காது  பயிற்சிவயத்தால் இடையறாது (குருவால் உபதேசம் செய்யப்பட்ட) சிவ நாமத்தை எண்ணிக் கொண்டிருப்பச் செய்து சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும்.

விளக்கஉரை

  • கனன் மூல – மூல அனல், குண்டலினி, வீணாத் தண்டம்
  • மூல அனல் தன்மைகள், சிறப்புகள், பூஜை முறைகள், வசிய முறைகள், போன்றவற்றை குருமுகமாக அறிக.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம்  #சித்த(ர்)த்_துளிப்பு, #பத்தாம்_திருமுறை – #திருமந்திரம் #திருமூலர்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குருவருள்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – கார்த்திகை – 1 (2023)


வார்த்தை :  முப்பாழ்

பொருள்

  • வெட்டவெளி அல்லது ஆகாயம்
  • மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ்

பாடல்

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேய முப் பாழ் எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும் முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே

எட்டாம் தந்திரம், திருமூலர்

பதவுரை

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

  1. மாயைப் பாழ் – மாயை நீங்குதல் – மாயப்பாழைக் கடந்தபின் (கர்ம, ஞான இந்திரியங்கள், பூதங்கள், அவற்றின் தன்மைகள், மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ், புருஷன் பிரகிருதி என்று உலகில் காணப்படுபவைகளின் ஒடுக்கம் ) கிடைப்பது  வாத சித்தி – சாதாரண தேகத்தை ஒளி தேகமாக மாற்றுவது.
  2. போதப்பாழ் / சீவப்பாழ்/ ஒளிப்பாழ் (சிவன், சக்தி, இச்சா-நியதி, கிரியா-கலா, ஞான-வித்யா, ஆனந்த-ராகம் மற்றும் சித்-காலம் சக்திகள்) – ஆன்ம அறிவு நீங்குதல் – (போதப்பாழ் – இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய அறிவு) கடக்கும்போது ஒருவர் அறுபத்து நான்கு சித்திகளையும் பெறுதல்.
  3. உபசாந்தப் பாழ் – வியோமாப்பாழ்(காரிய காரணங்களைக் கடந்தது நிற்றல்) – உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்பது – பிராணண் /உயிர்ச்சக்தி பற்றிய அறிவு.

சிவ தத்துவத்தை விளக்கும் 96 வகைத் தத்துவங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் என்பதை மும்மலம் என்பதால் முப்பாழ் என்பதில் இருந்து விலக்கி பொருள் விளக்கப்பட்டுள்ளது.(சில இடங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் ஆகிய  மூன்றும் முப்பாழ் என்றே விளக்கப்பட்டுள்ளது)

(இந்த சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 19 (2023)


பாடல்

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமெய்யறிவு அற்றவர்களின் மனப்பாங்கினை உரைக்கும்  பாடல்.

பதவுரை

`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.

விளக்க உரை

  • ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #பத்தாம்_திருமுறை  #திருமந்திரம் #திருமூலர் #திருமுறை  #எட்டாம்_தந்திரம் #புறங்கூறாமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 2 (2022)


பாடல்

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனின் அடியவர்கள் தாம் பெற்ற அனுபவத்தினை அனைவருக்கும் சென்று வழங்குவார்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனும் ஐந்து கோசங்களால் ஆனது இந்த உடல். தமிழ் உச்சரிப்பே மந்திரம் ஒலிப்பதை ஒத்ததாக இருக்கும். இவ்வாறு தமிழ் வேதாகமங்களில் கூறப்பட்ட ஞானத்தினை (பஞ்சாட்சரம், தூல பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் ) பெற்று தமிழ் மொழியை அறிந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உலகம் முழுவதும் செல்லுவர். அத்தகைய நல்லோர் சிற்றறிவை நீக்கி பேரறிவை தரும் மலர்ந்த மனமும், எம்முடைய ஆதியாக இருப்பவனைப் பற்றிய திருவடியுணர்வும் மேலே உரைத்த தமிழ் மண்டலம் ஐந்தும் செம்மையுறுதலின் பொருட்டே அவ்வாறு செய்கின்றனர்.

விளக்க உரை

சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்று சில இடங்களிலும், ஐந்து கண்டங்கள் என்று சில இடங்களிலும், பொருள் உரைக்கப்பட்டுள்ளது. தன்னை அறிந்தவர்களே மற்றவர்களை தலைப்படுத்த முடியும் என்பதால் இவைகள் விலக்கப்படுகின்றன.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 25 (2022)


பாடல்

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உலகத்தாரால் அறிவு கொண்டவை என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியாக இருக்கின்றன; அவற்றின் மெய் அறிவுக்கு காரணமாக உள்ள பேரறிவு கொண்ட இறைவனும் அனாதியாக இருக்கின்றான்; அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள பாசங்களும் அனாதியாக இருக்கின்றன; ஆயினும் உயிர்களிடத்து அன்புகொண்டு அனாதியாகிய இருக்கும் சிவனது ஞான சத்தி உயிரினிடத்தின்  ஒன்றும் போது  உயிரின் பிறவித்தொடர்ச்சி அறும்.

விளக்கஉரை

  • அனாதி –  ஆதியும், அந்தமும் இல்லாதது.
  • ஞானம் நிகழப் பிறப்பறும் என்பது பொருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 30 (2021)


பாடல்

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவன் சாராதவர்களுக்கு  அரியவன் என்பதும்,  சார்ந்தார்க்கு எளியன் என்பதையும் உணர்த்தி, அவனைச் சார்ந்து பயன் அடைக என்று கூறப்பட்ட பாடல்

பதவுரை

தேவர்களாலும், மூவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை இடைவெளி இன்றி உள்ளத்தால் பற்றுங்கள்; அவ்வாறு பற்றினால் பற்றிய அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்படுவான்.  அதன் பின்பு எக்காலத்திலும் நீங்கள் அவனை அகத்திலும், புறத்திலும் வழிபட்டால், உங்களது தன்மை சிவத்தன்மை ஆகிவிடும்.

விளக்க உரை

  • கண் – காலம் பற்றிய இடைவெளி என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ‘கண்ணற உள்ளே’ என்பதை முன்வைத்து ஆக்கினையில் நின்று தவம் செய்வதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்
  • காலை – காலம் `
  • இயற்றுதல், பண்ணுதல் – அகம், புறம் பற்றியது
  • பராபரன் – சிவனது தன்மையைக் குறித்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 11 (2021)


பாடல்

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை யீந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திருவடியினை அடையாது  உயிர்கள் ஏனைய பயன்களை  அடையாது என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் ஆருயிரானது சிவமாகிச் சிவனின் உண்மை பேரறிவின் நிலையினில் நிற்கும். அந்தநிலையில்  மலம்  மாயை கன்மம் மாயேயம் என்னும் ஆகிய இயல்புகளும் நீங்கி நிலைத் தன்னமையினை அடையப் பெறும். சிவன் திருவடிக்கு அடிமையாம் அடையாளப் பொறியினை நல்கி, தானே குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்ட உள்ளத்திலே நிலைபெறச் செய்து, நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் எனும் சொரூப நிலையில்  சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்டான் என்பது உண்மையே.

விளக்க உரை

  • ஏனைய முத்திரை – முதன்மையான சின்முத்திரை
  • ஐம்மலங்கள் – திரோதாயி ஒழிந்தவை
  • சொரூபம் – இயற்கை.
  • முத்திரை – பொறி.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 3 (2021)


பாடல்

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சற்குரு அருளால் முடிவாகிய வீடுபேறு மட்டுமின்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் கிட்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

சற்குருவானவர் தன்னுடைய அடியார்களின் வினை நீங்குமாறு செய்யவும், ஒன்பது கோள்களினால் ஏற்படும் தீமைகள் நீங்கவும், யம தூதர்களது கூட்டம் விலகி ஓடவும், பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்து அருளினான்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 13 (2020)


பாடல்

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவனைச் சார்ந்தவர்களுக்கு எளியன் ஆவான் என்பதை உணர்த்தி ‘அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது பற்றி கூறப்பட்டப்  பாடல்.

பதவுரை

தேவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை, அன்னையுடம் தன்னுடலில் பாகத்தில் கொண்ட சிவசக்தி ரூபமாக அகக்கண் கொண்டு கருத்தில் நிறுத்தி உள்ளத்தால் பற்றினால் அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் நிலையில் கால இடைவெளியின்றி வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எக்காலத்திலும்  நீங்கள் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டாலும், உங்களது தன்மை சிவத் தன்மையாய் ஆகிவிடும்.

விளக்கஉரை

  • விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற – விண்ணவராலும் அறிவரியான் அன்னைக் கண்ணற – எனப் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது – (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனை என்று சில இடங்களில் விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன. சிவசக்தி ரூபம் முன்வைத்து உம்மையால் அறிய இயலாதவன் என்பது பொருந்தாமையால், இவ்விளக்கம் தவிர்க்கப்படுகிறது.
  • கண் – காலம் பற்றிய இடைவெளி.
  • காலை – காலம்
  • இயற்றுதல், பண்ணுதல்  – அகம், புறம் நோக்கி உரைக்கப்பட்டது
  • பராபரன் – ஈசனின் தன்மை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 20 (2020)


பாடல்

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும் (கழுத்துக்குக் கீழ்). புறக்குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது போல் இந்த உடலில் புலன்கள் எனும் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீசுவது போல் சிவபெருமான் அம் மீன்களைச் செம்மைப்படுத்தச் செம்பரவனாகத் தோன்றி வலையை வீசி அருளினன்; குளத்தில் இருக்கும் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டு அவற்றின் துள்ளல் அடங்கியது போல் சிவன் தன்னுடிய ஒப்பற்றதாகிய கருணையினால் தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்; ஆதலால் நாமும் நம்முடைய ஐம்புலப்புலன் இன்பம் எனும் நுகர்ச்சி துன்பத்தினின்று நீங்கிச் சிவஇன்ப நினைவில் ஆழ்ந்தோம்.

விளக்க உரை

  • தூங்குதல் – ஆழ்தல்
  • அழுந்தல் – ஐம்புலன் அடக்குமுறைமை
  • பரவன்: பரதவன்
  • ஏதம் – துன்பம்
  • ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் – ஆகவே மனித உயிர்க்கு இடம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 9 (2020)


பாடல்

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமண்டல பரத்தின் பெருமையும், அஃது ஈசனின் இருப்பிடன் எனவும், அங்கு உறையும் ஈசன் உயிர்கட்கு அருள் புரியும் தன்மையையும் கூறும் பாடல்.

பதவுரை

உச்சிக்குமேல்பன்னிரண்டுஅங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாதசாந்தத்தில் நிற்பதனால் ஏனைய கடவுளர்கள் எல்லோருக்கும் மேலான கடவுளாகவும்,  தனது மேம்பட்ட சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குபவனாக இருப்பவனாகவும், நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாகவும் இருக்கும் நந்திப்பெருமான் எனும் பரம்பொருள் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்து ஆட்கொண்டு அருளிய பின் குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

விளக்க உரை

  • மாபரம் ஆயது – ஏனைய தெய்வங்கள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நிலைபெற்று விளங்குபவர்கள்; ஈசன் `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்குபவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 23 (2020)


பாடல்

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும்  பாடல்.

பதவுரை

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல்  உரியவனாய் விளங்குவான்.

விளக்க உரை

  • அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
  • அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
  • பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 7 (2020)


பாடல்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே

பத்தாம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்

கருத்து –   இறையின் இயல்புகளை உணர்த்தும் பாடல்.

பதவுரை

போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.

விளக்க உரை

  • இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
  • போற்றுதல் – துதித்தல்
  • புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
  • நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
  • கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
  • என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 22 (2020)


பாடல்

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.

பதவுரை

கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும்  போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.

விளக்க உரை

  • நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து  உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
  • அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி –  வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
  • புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
  • வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
  • பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
  • பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
  • ஆகின்ற – வளர்கின்ற
  • பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’  – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
  • ஐவர் – ஐம்பொறிகள்
  • கூரை – குடில்; தூல உடம்பு.
  • விருத்தி – பிழைப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 21 (2020)


பாடல்

காயம் பலகை கவறைந்து கண் மூன்றா
யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம்
மேய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப் பறியேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.

பதவுரை

காயம் எனப்படுவதாகிய உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கையில் சூது ஆட்டம் போன்றதான ஆட்டத்தில் உடம்பு பலகையாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் சூதாட்ட கருவியாகவும், வலம் இடம் புருவ மத்தி ஆகிய மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோரு எழுத்துக்களும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆன்மாவுடன் பிரிவு இல்லாமல் நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து சூதாட நிற்கின்ற மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவனின் மறைப்பாற்றலின் பண்பை அறியேன்.

விளக்க உரை

  • கவறு – சூதுபொருவது – பொருது
  • வியப்பைத் தரும் சூது – மாயக்கவறு
  • கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
  • மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 2 (2020)


பாடல்

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை என்பது பற்றிக் கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

மெய்யை வழி பற்றி, அதன் தன்மையை உணர்ந்து, அவ்வாறு உணர்ந்த வழியிலே விளங்கி நிற்கக் கூடியவராகிய சிவன் எண்ணுபவர்களுக்கு உள் ஒளியாகி நிற்பவளும்,  மணம் வீசக்கூடியதும் மிக நீண்டதுமான கூந்தலை உடைய மங்கை ஆகிய  சத்தியுடன் எல்லா இடத்தும், தானுமாய், பேதம் இல்லாமல் இயைந்தே நிற்பான்.  அவ்வாறு நிற்கும் பொழுதில் தம்மை தொழுது எண்ணுகின்றவர்களுக்கே திரிபுரை நற்கதி அளித்து வழங்குவாள்.

விளக்க உரை

  • உணர்ந்து – `உணர்ந்தவழி` என்பதன் திரிபு
  • நிற்றல் – விளங்கி நிற்றல்
  • உடனே – உடனாகியே எனும் பொருளில்
  • கணித்து –  மெலிந்து என்பது பற்றி தொழுது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 27 (2020)


பாடல்

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நன்கு அமையப் பெற்ற உடலால் எழுகின்ற காமமும், அதன் காரணமாக பொருந்தி ஒலிக்கக் கூடியதான பேச்சுக்களும், மேலே செல்லும் போது ஆகாயம் வரை நீட்டிக்கச் செய்வதான மூச்சும், மூச்சினை தொடர்ந்து எழுகின்றன ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் இவை எல்லாம் எங்கு சென்றன என்று எண்ணும்படியாக உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்து ஒழியும்.

விளக்கஉரை

  • பயிலுதல் – தேர்ச்சியடைதல், சொல்லுதல், பழகுதல், சேவித்தல், நடமாடுதல், தங்குதல், கற்றல், நிகழ்தல், நெருங்குதல், பொருந்துதல், ஒழுகுதல், ஒலித்தல், அழைத்தல்
  • விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும் – பிராணன் என்பதை முன்வைத்து அதன் முழுமையை உணர்த்துவதான தச தீட்சையினால் கிடைக்கப்பெறும் தச நாதங்கள் வாய்க்கப் பெறும் என்றும் பொருள் கொள்ளலாம்.
  • முதல் தந்திரத்தில் `யாக்கை நிலையாமை` பற்றி கூறப்பட்டாலும், அதனை வலியுறுத்தி இங்கு ‘உடல் விடல்‘ எனும் தலைப்பில் வருவதாலும் காமம் முன்வைத்து எழுதப்பெற்று இருப்பதாலும் காமத்தின் இயல்புகளை எடுத்துரைத்து அதன் நிலையாமையை கூறி உடல் நிலையாமை கூறப்படுகிறது எனவும் கொள்ளலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 14 (2019)


பாடல்

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து – ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் முப்பத்தி ஆறு தத்துவங்களை விலக்குதலே அதனை தெரியப்படுத்தும் எனும் கடுஞ் சுத்த சைவ நிலையை விளக்கும் பாடல்.

பதவுரை

ஆன்மவானது ஸ்தூல சூட்சம பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிந்த நிலை உடைய பெரிய மாயை ஆகியவற்றால் சூழப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான  ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கும் பொழுது ஆன்மா தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும் என்பதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.

விளக்க உரை

  • ஐம்பூதங்கள்  (நிலம் ,நீர், தீ, காற்று, ஆகாயம்); கன்மேந்திரியங்கள் (பேச்சு,கை, கால்,எருவாய், கருவாய்); ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி); தன்மாத்திரைகள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்); அந்தக்கரணங்கள் 4 (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்); வித்தியாதத்துவம் எனப்படும் அசுத்த மாயா தத்துவங்கள் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை-ஒருபகுதி) ; சிவதத்துவம் எனப்படும்  சுத்த மாயா தத்துவங்கள் (நாதம்-சிவம், விந்து-சக்தி, சதாக்கியம்-சதாசிவம், ஈஸ்வரம், சுத்தவித்தை)
  • ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும் –  ஆன்ம தத்துவம் இருபத்துநான்கு, உடம்பு நுகர்வதற்குரிய வித்தியா தத்துவம் ஏழு –  முப்பத்தொரு தத்துவங்கள்
  • மடல் – விரிவு
  • கேவல பாசம் – ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 27 (2019)


பாடல்

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஈசன், பிற ஆன்மாக்களுக்கு அருளிய முறையில் தனக்கு அருளிய திறன் உரைத்தப் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு நல்வினை, தீவினை ஆகிய இருமைகள் நீங்கிய காலத்தில் அவ்வாறு நீங்கப் பெற்ற உயிர்களுக்கு வினையில்லாத நன்மை பொருந்தியவனாய் உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவனும்,  அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவனும், யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்வருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பனும் ஆனவனான சிவன் அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்து அருளினான்.

விளக்க உரை

  • முன்னின்று அருளுதல் – பிரளயாகலர், சகலர் ஆகியோருக்கு அருளும் முறை (ஆகமங்கள் வரையரையின் படி) – இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்தல். (ஆகமங்கள் வரையறுத்து கூறியது போல் பரிபாக முதிர்ச்சி முன்வைத்து மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலருக்கும், மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் ஆகிய பிரளயாகலருக்கும், பாசப்பற்று நீங்காத மும்மலமுடைய ஆன்மாக்கள்ஆகிய சகலருக்கும் அருளிய திறம் போல் தனக்கும் அருளினான் என்று உரைத்தவாறு.
  • உலகு – உயிர்தொகுதி
  • நடுவுயிர் – உள்ளுயிர்

சமூக ஊடகங்கள்