அமுதமொழி – விளம்பி – வைகாசி – 24 (2018)

பாடல்

காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவளாம் இந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்

கொங்கணச் சித்தர்

பதவுரை

வாலையானவள், காலனை தனது காலகளால் உதைத்தவள்; ஆலகால விஷத்தினை உண்டவள்; அழிதல் இல்லாத உலகத்தைப் படைப்பவள்; மானுடன் என்னும் வரைமுறையை நீக்குபவள்.

விளக்க உரை

  • இதில் கூறிப்படும் விஷயங்கள் ஈசனுக்கானதாகவும் இருக்கிறது. அஃதாவது சிவசக்தி ரூபமாக அனைத்தையும் வாலையாக இருந்து செய்விக்கிறாள் என்பது பொருள்.
  • மாளுதல் – சாதல்;  அழிதல்; கழிதல்; இயலுதல்.
  • கோடு – வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.
  • ‘இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் மாளாச் செகத்தைப் படைத்தவளாம்’ என்று பொருள் மாற்றி வாசிக்கலாம். அஃதாவது  மானிடப் பிறப்பே மற்ற மேம்பட்ட நிலைகளை அடையச் செய்கிறது எனப் பொருள் கொண்டு ‘மானுடன் கோட்டை இடித்தவளாம்’ என்று இருந்திருக்கலாம். யுகங்கள் தோறும் உலகம் அழிக்கப்பட்டும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. ஆனால் தவ முனிவர்கள், ரிஷிகள் மற்றும் சித்தர்கள் வாழும் லோகங்கள் எந்த வகையிலும் மாறுபாடு அடைவதில்லை. அந்த வகையில் இவர்கள் இருக்கும் உலகங்கள் படைத்தவள் என்பதற்காகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து பிழை பொறுத்தருள வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 22 (2018)

பாடல்

மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.

இரண்டாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

தோழி, கங்கை, சந்திரப் பிறை, ஊமத்தமலர்கள் ஆகியவை பொருந்திய சடையை உடையவரும், இயல்பிலேயே மலம் என்னும் குற்றம் இல்லாதவரும், தூண்டுதல் எவரும் இன்றி எரியும் தூங்காமணி விளக்கின் சுடர் போன்ற மேனியை உடையவரும் பிறருக்கு வருந்தம் தரும் ஒரு சொல்லும் சொல்லாமல் இனிமையான இனிமையான மொழி பேசுபவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவருமாகிய சிவபெருமான், அலை மோதி முழங்கும் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரில் எழுந்தருளி, என்னுள் வேட்கை மயக்கத்தை அளித்தார்; எனவே இனிமேல் யான் மயக்க நோயை பொறுக்க மாட்டேன்.

விளக்க உரை

  • இறைவனிடத்தில் உண்டான காதல் உறவு கை கடந்து பெருகி ஆற்றேனாகின்றேன்; தூது சென்று உதவுக எனக் குறிப்பாய் வேண்டிக் கொண்டதை குறிப்பிடும் பாடல்.
  • மந்தாகினி – கங்கை  ஆறு.
  • வான்மதி – வானத்தில் ஒளிரும் சந்திரன் – பிறைத் திங்கள்
  • மத்தம் – ஊமத்தை மலர்.
  • நுந்துதல் – தூண்டுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 21 (2018)

பாடல்

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே

கந்தர் அநுபூதி – அருணகிரிநாதர்

பதவுரை

எங்கும் விரிந்து எதையும் தாங்கும் உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் இடையறாது தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, தேவலோகத்தைத் தாங்குபவனே, கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு உரியவையாக கிடைக்கும் படி தகுதி உடைவனாகும்படி செய்து, எனக்கு உபதேசமும் செய்து அருளி உணர்த்திய பெருமையை என்னவென்று சொல்வது?

விளக்க உரை

  • விரி தாரண – தனக்கு அருள் செய்தது போல் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்
  • முருகன் எல்லாவற்றையும் அருளிக் காப்பாற்றுவதை குறித்த பொருள்.
  • தாரகம் – பிரணவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 20 (2018)

பாடல்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
     குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
     பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
     தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
     அப்ப னிடந்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – காரைக்கால் அம்மையார்

பதவுரை

மார்பகங்கள் தளர்ந்து சுருங்கி, நீர் வற்றியதால் நரம்புகள் மேலே தெரியும் படியாக எழுந்து, கண்கள் குழி விழுந்து,வெண்மையான பற்கள் விழுந்து, வயிற்றில் குழி விழுந்து, தலை மயிர் சிவப்பு நிறம் கொண்டு, இரண்டு கோரைப் பற்களும் நீண்டு, நீண்ட உயரமான கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி,  அலறி, எரித்தப்பின் எதுவும் மீதம் இல்லாத காரணத்தால் காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.

விளக்க உரை

  • திரங்குதல் = தளர்தல், உலர்தல், திரண்டு சுருங்குதல், சுருங்குதல்
  • பங்கி = ஆடவரின் மயிர், விலங்குகளின் மயிர் வகை, பாகம் பெற்றுக்கொள்வோன், சாதிலிங்கம்
  • அனல் ஆடுதல் – சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல்
  • இவ்வாறு ஆடுபவன் ஆயினும் அவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு எனும் கருத்து.
  • முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன். இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன் என்று சிவன் உமையிடம் உரைத்தது ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. ( உமா மகேஸ்வர ஸ்ம்வாதம், மகாபாரதம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 19 (2018)

பாடல்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை,  வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை ஆகியவை கொண்டு நீரின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம் ஆகியவை கொண்டு  நெருப்பின் தத்துவமாகவும், ஒலி,தொடு உணர்வு கொண்டு ஆகியவை கொண்டு காற்றின் தத்துவமாகவும், ஒலியினை அடிப்படையாக கொண்டு ஆகாயத்தின் தத்துவமாகவும் இருக்கும் போற்றுதலுக்கு உரிய அந்த கணபதியை அன்பினால் சரணம் அடைகின்றோம்.

விளக்க உரை

  • மண்ணில் ஐந்து வகையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது போன்று சில இடங்களில் விளக்கங்கள் நீள்கின்றன. மூலாதார மூர்த்தி என்பதாலும், மனித உடலில் அனைத்து தத்துவங்களும் உறைவதாலும், இப்பாடல்கள அனைத்தும் சூட்சமானது என்பதாலும் இது போன்ற விளக்கங்கள் விலக்கப்படுகின்றன.
  • எண்ணிக்கை முன்வைத்து எழுதப்படும் பாடல்களில் இறங்கு முகத்தில் இருக்கும் பாடல் இது. ஐங்குணமாகிய நிலம் ஸ்தூல ரூபம், ஒரு முகமாகிய ஆகாயம் சூட்சம ரூபமாக இருப்பதாகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். அஃதாவது ரூபத்தில் இருந்து அருபம் வரை அனைத்துமாக இருப்பவன் எனும் பொருளில் எழுதப்பட்டு இருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 18 (2018)

பாடல்

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.

விளக்க உரை

  • ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது  ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 16 (2018)

பாடல்

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஆண்கள் காதில் அணியும் ஆபரணமாகிய குண்டலம், கழுத்தணி ஆபரணமாகிய உருத்திராட்சமாலை, வாயினால் ஊதி நல்ல ஒலி உண்டாக்கும் திருச்சங்கு, மகா மேரு, கைகளில் திருவோடு, ஓதுதல் உடைய தவச் சாலை, கால்களில் அணியக்கூடிய பாதுகை, யோகம் தரதக்கதான இருக்கை, நெற்றியில் அணியப்படும் குற்றமற்ற யோக பட்டம் மற்றும் கைகளில் கொள்ளப்படும் யோக தண்டம் என்னும் பத்தும் தவம் உடையவர்களுக்கு உரித்தான வேடங்களாகும்.

விளக்க உரை

  • உயர்கட்டி – மகா மேரு – மாபெரும் துறவிகள் போன்றோர் அணிவது. (உ.ம் பெரும்பாலான ஆதினங்கள் குரு பரம்பரையாக இதை அணிவார்கள்)
  • தவ வேடங்கள் தொகுப்பு பற்றிய பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 15 (2018)

பாடல்

உரியேன் அல்லேன் உனக்கடிமை
     உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
     றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
     என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
      பொய்யோ எங்கள் பெருமானே

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

சங்கரனே! எம் பெருமானே! யான், உனக்கு அடிமையா இருப்பதற்கு கூட உரிய தகுதி உடைவன் அல்லேன்; கருணையில் ஒப்பற்றவனாகிய நீ, உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டியும், உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ? நாயேன் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இந்த இடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்.

விளக்க உரை

  • ‘பொழுது’ – மிகச் சிறியதான நொடிப்பொழுது. (கண் இமைப் பொழுது போன்றது)
  • ‘என்றென்று’ – வலியுறுத்தலில் பொருட்டு அடுக்குத் தொடர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 13 (2018)

பாடல்

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
     ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
     திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
     பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
     புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.

விளக்க உரை

  • ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் –  மேலாடை
  • ‘போகாத வேடத்தார்’ –  அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 12 (2018)

பாடல்

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.

விளக்க உரை

  • தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
  • #இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும்  இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 11 (2018)

பாடல்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், மா மாயை என பெரியதாக குறிப்பிடப்படும் சுத்த மாயை, மாயை என குறிப்பிடப்படும் அசுத்த மாயை, சுத்த மாயை மற்றும் விந்து ஆகியவற்றால் குறிப்பிடப்படும் சுத்த தத்துவங்களின் காரியங்களாகிய வயிந்தவம், வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை  முதலிய நால்வகை வாக்குகள் ஆகிய நாத வடிவங்கள் #, அசுத்த மாயையிலிருந்து தோன்றிய ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை எனப்படும் ‘மூலப் பிரகிருதி’ ஓராறு கோடி மந்திரங்களின் முடிவாகிய ஏழனுள், `ஹும், பட்` என்று இரண்டுமாகவும்  சில இடங்களில்  ஒன்றாக எண்ணப்படுவதும் ஆன சத்தியின் வேறுபாடுகள், சிவன் நினைத்தவிடத்து சிவன் அசையா பொருளாகவும், ‘ஆம்’ அசை நிலை கொண்டு அசையும் பொருள், பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்பாள்.

விளக்க உரை

  • சொல்லப்படும் பொருள்கள் அனைத்திலும் தானேயாயும், அல்லாதவாறும் சிவ சத்தி வடிவம் கொண்டு நிற்பாள் என்பது பற்றியது.
  • அசுத்த மாயையின் காரியங்கள் ‘மாயேயம்’ , பிரகிருதியின் காரியங்கள் ‘பிராகிருதம்’ ஆகியவற்றை இங்கு உணர்க
  • ஓவுதல் – நீங்குதல்
  • # ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி`, ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி, வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி, சத்தி, விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும் பல்வேறு வடிவங்கள்
  • ஆறுகோடியிற்றாமான மந்திரம் – ஆறு ஆதாரங்களுக்கு உரித்தான மந்திர எழுத்துக்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 10 (2018)

 

பாடல்

மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால்
மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றேன் முதலா
தவத்தாலே யொரு சட்டை யுரியும் பாரு
தன்மையுடன் யிரண்டாண்டில் ஒன்று போகும்
அவையடக்க மூன்றி லொன்று கழன்று போனால்
அப்பனே மூன்று சட்டை கழன்று போனால்
இவனுக்கு வயது சொல்ல முடியா தென்று
என் குருவும் எந்தனுக்கு உரைத்தார் தானே

அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

பதவுரை

எதுபற்றியும் உரைக்காமலும் மௌனமாக இருந்து, முன்னர் குறிப்பிட்ட முறைகளில் தச தீட்சை கொண்டு, உணவு கட்டுப்பாடும் கொண்டு வந்தால் நிகழுபவற்றை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். செய்யப்படும் அவ்வாறான தவத்தாலே ஒரு சட்டை உரிந்து விடும். அத்தன்மை பற்றி இரண்டாவது ஆண்டில் இன்னொரு சட்டை போய்விடும். மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டையும் கழன்று போகும் போது மூன்றாவது சட்டையும் கழன்று போகும். அவ்வாறு மூன்று சட்சையும் கழன்று விட்டால் இவன் வயது சொல்லமுடியாதவாறு இருப்பான் என்று என் குருநாதர் எனக்கு உரைத்தார்.

விளக்க உரை

  • கற்பம் – முன் பாடல்களில் தச தீட்சை முறை, உணவு முறைகள், விலக்கவேண்டியவை, அக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அதில் இருந்து விலகும் வழிமுறைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இப்பாடல்களை விளக்கவே பல்வேறு நியமங்களை அகத்தியர் விதித்துள்ளார். இதன் விபரங்களை தெரியாதவர்களுக்கு உரைத்தால், அவர் தலை வெடித்து சிதறும் என்றும், பல பிறவிகளில் வினைகள் தொடரும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே ஆன்றோர்கள் தகுந்த குரு கொண்டு பாடல்கள், விளக்கங்கள் பெறுக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 9 (2018)

பாடல்

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9 – வினாவெண்பா – உமாபதி சிவம்

பதவுரை

காரிய அவத்தை பற்றி, கனவிலே நின்று ‘இது கனவு’ என்று கனவைத் தரிசித்தல் அல்லது கனவினை கண்டு கொள்ளுதல் அரிதானது. நனவாகி, அவ்வாறு கிட்டும் அனுபவம் தன்னில் கருவிகள் இல்லாத காரணத்தால் நிஜத்தில் எவ்விதத்திலும் பலன் அளிக்காது. முனைவன் அருளில் ஒன்றி அவ்வாறான அருளிலே நின்று கண்டது என்னவெனில், அவ்வாறான சமயங்களில் காரிய அவத்தை பொருந்தாது, மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் காரண அவத்தைகளைத் தரிசித்தல் எப்படி?

விளக்க உரை

  • சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்
  • காரண அவத்தை
  1. கேவல அவத்தை : ஆதிகாலம் தொட்டு ஆணவ மலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவலஅவத்தை
  2. சகல அவத்தை : மாயை பற்றி உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தை.
  3. சுத்த அவத்தை : பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை
  • காரிய அவத்தை
  1. நனவு : சாக்கிரம் என்ற கூறப்படும் இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
  2. கனவு : சொப்பனம் என்று கூறப்படும் இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
  3. உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
  4. பேருறக்கம் : துரியம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
  5. உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
  • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 7 (2018)

பாடல்

அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வ …… ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
     லற்று நின்னை வல்ல …… படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
     முத்த னென்ன வுள்ள …… முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
     முட்ட னிங்ங னைவ …… தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
     தித்து மன்னு பிள்ளை …… முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
     சித்ர வண்ண வல்லி …… யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லு …… மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் நிலைபெற்ற தில்லையில் நடனமாடுபவரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, எல்லாச் சித்திகளும் இடமாய் விளங்கும் வேலாயுதம் கொண்ட திருக்கரத்தை உடையவனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூடிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் செம்மலே, வெள்ளை யானையை ஆகிய ஐராவதத்தை உடைய இந்திரனின் கன்னியாகிய தேவானை தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலை கொண்டையில்  கொண்ட பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே! தந்தை, தாய், வீடு, சேர்த்து வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி ஆகிய அத்தை,அவர்களோடு பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் குறைவான வருமானம் பெற்று, முடிவுறாத கல்வி கொண்டு, அல்லல் தரும் உறவினர்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, எனக்கு முக்தி தர வல்லவன் நீ ஒருவனே என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் கணவன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், அறியாமை நிறைந்த புலவனும் எளிமையான மூடனுமாகிய நான் இப்படி வருந்தி துன்புறுதல் நீங்காதோ?

விளக்க உரை

  • சில இடங்களில் திருவல்லம் எனும் தலத்திற்கு பதில் வல்லக்கோட்டைத் தலம் என்று உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)

பாடல்

ஆன வராக முகத்தி பதத்தினில்

ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ

டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை

ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே

 

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

 

பதவுரை

திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 5 (2018)

பாடல்

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், அன்பரன்றிப் பிறர் எவரும் அறிதற்கரியவனாக இருப்பவனும், வேத முடிவான கடவுளாக இருந்து நடனம் புரியும் குற்றமற்றவனும், உலகெங்கும் பரந்து விளங்கும் பரமானந்த சொரூபமாய் விளங்கும் நாதமாகி  எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும்,  எண் குணங்கள் எனப்படும் தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவற்றை உடையவனும் ஆன முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைகின்றோம்.

விளக்க உரை

  • சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,  நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி ஆகியவை வேறு பெயர்கள்
  • இப்பாடலில் வரும் ஆழ் நுட்ப கருத்துக்க அனைத்தும் ஈசனை குறிப்பதாகவே இருக்கும். ஆகவே சிவ தத்துவம் வேறு காணாபத்தியம் வேறு அல்ல என்பது விளங்கும்.
  • மூலாத மூர்த்தி கணபதி என்பதும், துரியாதீதம் முடிவில் வரும் நாதாந்தம் என்பது ப்ரணவப் பொருள் என்பது கண்டு அனைத்திற்கும் ஆதி மூர்த்தி கணபதி என்று அறிக. மேல் விபரம் வேண்டுவோர் குரு மூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 4 (2018)

பாடல்

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி

ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை – நம்பியாண்டார் நம்பிகள்

பதவுரை

திருஞானசம்பந்தரின் அடியவர்கள் சென்று வாழும் பதியானது, பூவுலகம் மேல் இருக்கும்  ஆறு நிலையான உலகங்களான, சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களையுடைய புவர் லோகம் எனும்  சுடர் உலகத்தில் வாழ்பவர்களும், இந்திராதி தேவர் வாழ் உலகமாகிய சுவர் லோகத்தில்  வாழ்பவர்களும், மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகமாகிய மக லோகத்தில் வாழ்பவர்களும், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும்  சன லோக உலகத்தில் வாழ்பவர்களும், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும்  தவ லோகத்தில் வாழ்பவர்களும், பிரம்ம தேவனுடைய உலகமாகிய சத்திய லோகம், திருமாலினுடைய வைகுந்தம் மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலே உள்ள சீகண்டருத்திரர் உலகம் எனும் சிவலோக சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் எனப்படுவோராகிய மலம் நீங்கிய தூயோர், முத்தர்கள், பல ஊழி காலமாக உச்சித் தலத்துக்கு மேலும் அவைகளுக்கு அப்பால் என்று சொல்லும் மெய்யுணர்ந்தோர் கூறுவார்கள்.

விளக்க உரை

  • 19-May-2018 : நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை ( வைகாசி பூராடம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 3 (2018)

பாடல்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெருமானை மறைத்தும் மறந்து போகச் செய்யும் படியாகிய செய்தும், உலக நாட்டத்தில் திளைக்கும் படி செய்யும் வலிய நெஞ்சினை உடையவர்களால் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் பரவி நிற்கும் பெருமானாய், காளை மேல் ஏறும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும், சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்

விளக்க உரை

  • கரவார் – சதா சிவசிந்தனையாளர்
  • வித்தகன் – ஞானசொரூபன்
  • இரவு – கேவலாவத்தை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 2 (2018)

பாடல்

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நெஞ்சமே! ஈசானம் முதல் சத்யோஜாதம் வரை ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும், யானையை அஞ்சுமாறு அதன் தோலை உரித்தவனும், தீயேந்தி ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் இருந்து அருள்புரிவனும் ஆகிய எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்த நினைப்பால் வாழ்வாய்.

விளக்க உரை

  • பஞ்சமந்திரம் -ஈசானஸ் ஸர்வ வித்யானாம், ஈச்வரஸ்ஸர்வ
    பூதானாம் – தமீச்வராணாம் பரமம் மகேச்வரம்

    முதலியவை, ஈச்வர பத அர்த்தத்தை விளக்கும் பஞ்ச மந்த்ரங்கள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்