பாடல்
மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால்
மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றேன் முதலா
தவத்தாலே யொரு சட்டை யுரியும் பாரு
தன்மையுடன் யிரண்டாண்டில் ஒன்று போகும்
அவையடக்க மூன்றி லொன்று கழன்று போனால்
அப்பனே மூன்று சட்டை கழன்று போனால்
இவனுக்கு வயது சொல்ல முடியா தென்று
என் குருவும் எந்தனுக்கு உரைத்தார் தானே
அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
பதவுரை
எதுபற்றியும் உரைக்காமலும் மௌனமாக இருந்து, முன்னர் குறிப்பிட்ட முறைகளில் தச தீட்சை கொண்டு, உணவு கட்டுப்பாடும் கொண்டு வந்தால் நிகழுபவற்றை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். செய்யப்படும் அவ்வாறான தவத்தாலே ஒரு சட்டை உரிந்து விடும். அத்தன்மை பற்றி இரண்டாவது ஆண்டில் இன்னொரு சட்டை போய்விடும். மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டையும் கழன்று போகும் போது மூன்றாவது சட்டையும் கழன்று போகும். அவ்வாறு மூன்று சட்சையும் கழன்று விட்டால் இவன் வயது சொல்லமுடியாதவாறு இருப்பான் என்று என் குருநாதர் எனக்கு உரைத்தார்.
விளக்க உரை
- கற்பம் – முன் பாடல்களில் தச தீட்சை முறை, உணவு முறைகள், விலக்கவேண்டியவை, அக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அதில் இருந்து விலகும் வழிமுறைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- இப்பாடல்களை விளக்கவே பல்வேறு நியமங்களை அகத்தியர் விதித்துள்ளார். இதன் விபரங்களை தெரியாதவர்களுக்கு உரைத்தால், அவர் தலை வெடித்து சிதறும் என்றும், பல பிறவிகளில் வினைகள் தொடரும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே ஆன்றோர்கள் தகுந்த குரு கொண்டு பாடல்கள், விளக்கங்கள் பெறுக.