பாடல்
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ …… ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல …… படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள …… முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ …… தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை …… முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி …… யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு …… மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல …… பெருமாளே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் நிலைபெற்ற தில்லையில் நடனமாடுபவரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, எல்லாச் சித்திகளும் இடமாய் விளங்கும் வேலாயுதம் கொண்ட திருக்கரத்தை உடையவனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூடிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் செம்மலே, வெள்ளை யானையை ஆகிய ஐராவதத்தை உடைய இந்திரனின் கன்னியாகிய தேவானை தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலை கொண்டையில் கொண்ட பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே! தந்தை, தாய், வீடு, சேர்த்து வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி ஆகிய அத்தை,அவர்களோடு பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் குறைவான வருமானம் பெற்று, முடிவுறாத கல்வி கொண்டு, அல்லல் தரும் உறவினர்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, எனக்கு முக்தி தர வல்லவன் நீ ஒருவனே என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் கணவன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், அறியாமை நிறைந்த புலவனும் எளிமையான மூடனுமாகிய நான் இப்படி வருந்தி துன்புறுதல் நீங்காதோ?
விளக்க உரை
- சில இடங்களில் திருவல்லம் எனும் தலத்திற்கு பதில் வல்லக்கோட்டைத் தலம் என்று உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உணர்க.