பாடல்
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.
விளக்க உரை
- ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் – மேலாடை
- ‘போகாத வேடத்தார்’ – அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது