அமுதமொழி – விளம்பி – வைகாசி – 5 (2018)

பாடல்

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், அன்பரன்றிப் பிறர் எவரும் அறிதற்கரியவனாக இருப்பவனும், வேத முடிவான கடவுளாக இருந்து நடனம் புரியும் குற்றமற்றவனும், உலகெங்கும் பரந்து விளங்கும் பரமானந்த சொரூபமாய் விளங்கும் நாதமாகி  எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும்,  எண் குணங்கள் எனப்படும் தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவற்றை உடையவனும் ஆன முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைகின்றோம்.

விளக்க உரை

  • சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,  நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி ஆகியவை வேறு பெயர்கள்
  • இப்பாடலில் வரும் ஆழ் நுட்ப கருத்துக்க அனைத்தும் ஈசனை குறிப்பதாகவே இருக்கும். ஆகவே சிவ தத்துவம் வேறு காணாபத்தியம் வேறு அல்ல என்பது விளங்கும்.
  • மூலாத மூர்த்தி கணபதி என்பதும், துரியாதீதம் முடிவில் வரும் நாதாந்தம் என்பது ப்ரணவப் பொருள் என்பது கண்டு அனைத்திற்கும் ஆதி மூர்த்தி கணபதி என்று அறிக. மேல் விபரம் வேண்டுவோர் குரு மூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *