
பாடல்
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்
கருத்து – மங்கையர்கரசியாரின் பெருமைகளை போற்றி புகழும் பாடல்.
பதவுரை
மங்கையர்கள் எல்லாருக்கும் ஒப்பில்லாத பேரரசி ஆக விளங்குபவரும், எங்கள் தெய்வம் ஆனவரும், சோழ வம்சத்தின் குலக்கொழுந்தாக விளங்குபவரும்,கைகளில் வளையல்களை அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், தென்னாடு ஆகிய பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய உடையவரும், எங்களுக்கு தலைவனாகவும், தேவனாகவும் இருக்கும் சீகாழித் தலைவரின் அருளால் பெரியதான தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கியவரும், பொங்கி வருவது போன்று மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத் தகுந்தாகும்.
விளக்க உரை
- மானி எனும் இயற்பெயருடன் சோழ மன்னனுக்கு மகளாகப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். திருஞானசம்பந்தரை பாண்டி நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றியவர்.
- வளவர் – சோழர்
மங்கையர்கரசியார் குரு பூசை – சித்திரை – ரோகிணி (7-May-2019)
முக்தித் தலம் – திருஆலவாய் எனும் மதுரை