
பாடல்
ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்
கருத்து – வைரவர் கோலம் கொண்ட ஈசன் கறி உணவாக சமைக்கப்பட்ட சிறுதொண்டரின் மைந்தனை உணவு உண்ண அழைத்த போது கூறியது.
பதவுரை
ஆறு திங்கள் கழிந்த பிறகு நாம் ஒருமுறை உண்போம்; உண்ணும் அளவு தெரியாமல் நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! நாம் உண்பதற்கு முன் நீவிர் உணவு உண்ணப் புகுந்தது ஏன்? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்று இருக்கிறீர். ஆதலால் அவனையும் இப்போது அழையும்! என்று கூறினார். அங்ஙனம் கூறிய முதலும் இறுதியும் இல்லாத இறைவருக்குச் சிறுத்தொண்டர், “அவன் இப்போது இங்கு உதவான்” என்று விடையளித்தனர்.
விளக்க உரை
- இல்லை என்று கூறாமல் தனது மனைவி ஆகிய சந்தனத்தாதியார் உடன் சீராளன் ஆகிய தனது பிள்ளையை பிள்ளைக்கறி ஆக்கி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.
சிறுதொண்டர் குரு பூசை – சித்திரை – பரணி (5-May-2019)
முக்தித் தலம் – திருசெங்காட்டான்குடி