அமுதமொழி – விகாரி – வைகாசி – 7 (2019)


பாடல்

மன்னுவார் சடையாரை முன்
   தொழுது மட்டிட்ட
என்னும் நற் பதிகத்தினில்
   போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு
   எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து
   உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்

பன்னிரண்டாம் திருமுறை –  பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துசாம்பலில் இருந்த அங்கம்பூம்பாவை உயித்தெழ செய்யப் பாடிய பாடல்

பதவுரை

பதிகம் தொடங்கும் முன் கங்கையும் பிறையும் நிலைபொருந்தியதும், நீண்டதும் நிலைபெற்றதும் ஆன நீண்ட சடையினையுடைய சிவபெருமானைத் தொழுது “மட்டிட்ட” என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தினிலே மரணத்தைப் போக்குவதான “போதியோ” என்று கூறும்  அமுதம் போன்ற அந்த மெய்த்திருவாக்கு உரைத்திட்ட போது அந்தக் குடத்தினுள்ளே அந்த எலும்பின் உள்ளே பொருந்தி வந்து உருவமாய்க் கூடியது.

விளக்க உரை

  • “வருக!” என உரைப்பாராகிய பிள்ளையாரது கருத்தினை ஆணையின் வைத்துச் செயற்படுத்தியது அப்பதிகத்தினுள் போதியோ? என்ற மூவெழுத்தோர் சொல்லாகிய சிவஞான விளைவாம் சிவ சிற்சத்தியேயாம் என்று காட்டி, அதன் செயலை விளக்கியது இத்திருப்பாட்டு. “சடையாரைமுன்றொழுது” என்றதும் இக்குறிப்புத் தருவதாம்.
  • இந்தப் பதிகம் முழுவதும் கபாலீசர் திருநாமமும் போற்றுமாறு அமைந்து இருக்கும்
  • திருஞானசம்பந்தர் திருவுருவம் முழுதும் சிவஞான மயமே ஆகி  சிவ நிறைவுள்ளதாதலின் அவரது வாக்கு இறைவர் திருவாக்கேயாயிற்று
  • மெய்த் திருவாக்கு –  என்றும் அழிவில்லாத நித்தப் பொருள் ஆகிய சிவம்
  • வாக்கு – சிவ சிற்சத்தி
  • பிரணவ சொரூபமாய் நின்ற மூன்றெழுத்து மகாமந்திரமாய் நின்றது பதிகத்துள் “போதியோ” என்ற சொல்
  • அதுவே வருக என்ற ஆணையாகிய சிவ சிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமை அறிக
  • உருவமாய்த் தொக்கது – படிப்படியாக வளர்ச்சி முறையில் கூடிற்று

இன்று குரு பூசை – வைகாசி மூலம்

திருஞானசம்பந்தர்  
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *