சித்த(ர்)த் துளிப்பு – 2-Jan-2021


பாடல்

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு – ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் – ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே

அருளிய சித்தர் : புண்ணாக்குச் சித்தர்

பதவுரை

நிறைவினை அடையச் செய்வதாகிய முக்தியினை பெறுவதற்கும், முக்தியினை அளிக்க நினைத்த குருவிற்கும், இறையினையும் கனவு போன்ற இந்த வாழ்வினில் இருந்து விலகி, மெய்யறிவு பெற்று அதில் நிறைந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு குரு இடத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த உலக வாழ்வினை நித்தியம் என்று எண்ணாமல் அநித்தியம் என்று கொண்டு அதுபற்றி அறிந்து வாழ்வினை கொள்ளும் போது கோபம் கொண்டு உயிரினை பறிக்க வரும் எமனும் தன்னுடைய தண்டத்தினை விட்டுச் செல்வான்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 1-Jan-2021


பாடல்

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! வாழ்தலுக்காக பொருள் தேடி நிற்கும் வேடர்கள் இடத்தில் போய் அவர்களிடத்தில் பொருள் வேண்டுதலுக்காக கையேந்தி, அவர்களைப் புகழ்ந்து அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறேன். அவர்களிடத்தில் பொய்யாக புன்னகைக்காமல், அவர்களைப் பொய்யாக சேராமல், பொய்யான அந்த வேடம் புனைவர்கள் இடத்தில் செல்லாமல்  எனக்கு பொருள் தருவாயாக

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 31-Dec-2020


பாடல்

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! பட்டணம் எனப்படும் இந்த உடலினை ஆளக்கூடியவர்கள் பஞ்ச இந்திரியங்களாகிய பஞ்சவர்கள் எனப்படும் அரசர்கள்; இவர்கள் உடலினை விட்டு நீங்காமல் இருக்கும் வரையில் பெருமை கொண்டு ஆற்றலும் வல்லமையும் கொண்டு பேசி இருப்பார்கள்; அவ்வாறு பெருமை பேசும் போது ஆளுமை செய்யக்கூடிய பஞ்சவர்கள் வேற்றுமை கொண்டு உடலினை விட்டு பிரியும் போது பட்டணம் என்று சொல்லக்கூடிய இந்த உடலானது போய்விடும்; படைமன்னர் எனப்படும் பஞ்சவர்களும் மாண்டு விடுவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Dec-2020


பாடல்

போற்றுஞ் சடங்கைநண் ணாதே – உன்னைப்
     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே – பிறர்
    தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

தாங்கள் தங்களுக்கு என்று விரும்பிச் செய்யும் சடங்குகளை குறைவாக மதிப்பிட்டு எள்ளி நகையாடாதே; உன்னை பலரும் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சியில் மகிழ்ந்து விடாதே; நிறைவான வாழ்வு வாழும் முன் வாழ்வை வாழ்ந்துவிட்டோம் என எண்ணாதே; மற்றவர்கள் தாழ்ந்த நிலையை அடையும் படி செய்யக்கூடிய செயலைச் செய்து நீ தாழ்ச்சியினை அடையாதே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 27-Dec-2020


பாடல்

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
   சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பாய்
   சஞ்சலம் ஏதுக்கடி ?
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
   வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
   வாதாட்டம் ஏதுக்கடி ?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

நகை அணிந்த காதுகளை உடைய பெண்ணே! பிறரை ஏமாற்றுவதான வஞ்சித்தலை விலக்கி தான் யார் எனக் கண்டவர்களுக்கு துன்பம் தரத்தக்கதான குழப்பங்கள் எப்படி வரும்? வினைகளை அறுத்து பிறவி அறுத்தலை செய்யக்கூடியதற்கு ஆதாரமாக இருக்கும் தலை முதல் திருவடிவரை கண்டவர்களுக்கு மற்றவர்களிடம் தர்க்கம் செய்தல் எதற்காக?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 11 (2020)


பாடல்

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி

நல்வழி – ஔவையார்

கருத்துவினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! தொந்த வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை. நீ வினை வலிமையை மனதினால் ஆராய்ந்து அதை வெல்ல நினைத்து அதுபற்றி கணித்துக் கவலைப்படலாம் அன்றி நற்செயல்கள்  புரிந்து அதன் காரணமாக விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்தாது.

விளக்கஉரை

  • விண்ணுறுவார் – விண்ணுலகம் செல்பவர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 26-Dec-2020


பாடல்

ஆதிபெருஞ் சோதிதனை அனுதினமும் நாடி
   ஐயர்பதந் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியெனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
   சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

அருளை பெறுவதற்காக குற்றமற்றவனாக இருக்கும் அவனது திருவடிகளை தேடிக்கொண்டு, காலத்தால் குறிப்பிட்டுக் கூற இயலாததாக இருப்பதும், அளவிட முடியதாகவும் இருக்கும் பெரியதான சோதியினை நித்தமும் விரும்பி அதை நாடி,  சோதி வடிவமாகவே இருக்கும் மனோன்மணியாள் அருளைப் பெற்று சுகத்தினை தருபவருமான பாதத்தினை மனத்தினாலே உற்று நோக்கு.

சுகர் –  சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவரும், வியாச முனிவரின் புதல்வரான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார். எழுதிய சித்தர் பற்றி எக்குறிப்பும் காணப்படாமையால் சுகர் குருவாக இருந்திருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Dec-2020


பாடல்

ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே
அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்

பதவுரை

உயிர்களிடத்தில் உறையும் ஆன்மாவானது பரம்பொருளான பரமான்மாவோடு அமர்ந்து திருக்கூத்து நிகழ்த்தும் விதத்தினை என்னுடைய சொற்கள் கொண்டு வாயினால் சொல்ல இயலுமோ? அண்டத்திலும் பிண்டத்திலும் இருந்தும், அதற்கு மூலமாகவும் இருக்கும் ஐந்தெழுத்தினைக் கண்டும் அதன் தன்மைகளை உணர்ந்தும் அதனால் வஞ்சங்களை விலக்கி மகிழ்வுற்று இருந்தேன்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 23-Dec-2020


பாடல்

வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

மறை ஆகிய வேதத்தில் உரைக்கப்பட்டவாறு அதன் வழியில் நிற்பாயாக; தர்மம் சார்ந்து அதன் வழியில் இருக்கும் நல்லவர்கள் செல்லும் வழியினை அவர்களிடத்தில் சொல்லக் கேட்டு அதன் வழியில் செல்வாயாக; வாக்கு, மனம்,காயம் ஆகிய்வற்றால் பிறருக்கு துன்பம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறாமல் அதுபற்றி நலம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறுவாயாக; பொல்லாததும் பேய்த் தன்மை உடையதுமான கோபத்தை வைராக்கியம் கொண்டு அதனை கொல்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 22-Dec-2020


பாடல்

முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே

அருளிய சித்தர் : இராமதேவர்

பதவுரை

அனைத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியவளும், பரஞ்சோதி,மனோன்மணி என்றும் அழைக்கப்படுபவளும், திசை என்பதே இல்லாமல் இருக்கும் தீ போன்றவளாகி வாலை முக்கோண வடிவிலே இருக்கக்கூடியதான மூலாதாரமும், நாற்கோண வடிவில் இருக்கும் சுவாதிட்டானம் அனைத்தையும் விரும்பிக் காப்பவள்; இதை நீ அறிவதன் பொருட்டு விபரமாக உரைத்துவிட்டேன்; இவ்வாறு உரைத்ததை பல்வேறு கோணங்களில் தனியே இருந்து அவளைப் பார்த்தவன் சித்தனாவான்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Dec-2020


பாடல்

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! நாகரிகமற்றவன், அயலான், காட்டான்  எனும் பொருளில் இயங்கிக் கொண்டிருக்கும் காற்றானது மூலாதாரத்தில் இருந்து இயங்கி யோக மார்க்கமாக ஆஞ்ஞை கடந்து சகஸ்ராரம் வரையில் கடைத்தெருவின் வழியே செல்வது போன்று  அனைத்து ஆதாரங்களையும் கடந்து செல்கின்றது. ஊர்சபைக்காரார் எனும் உடலோடு இருப்பவர்களும், அண்டத்தில் இருப்பவர்களாகிய எமனால் ஏவப்பட்டவர்களும் நமது யோக சித்தி நிறைவேறாமல் இருப்பதன் பொருட்டு இந்த முறைகள் குறித்து புன்னகை புரிந்து எள்ளி நகையாடுவார்கள்; அவ்வாறு நம்மை கட்டுப்படுத்துவர்களாகிய அந்த நாட்டார்கள் நம்மை  கண்டு எள்ளி நகையாடினாலும் காற்றினை மேலேற்றி உன்னுடைய திருநடனத்தினைக் காண்பேனோ!

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Dec-2020


பாடல்

முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

அனைத்திலும் அவனே வியாபித்து இருப்பதால் அனைத்திலும்  அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன்; எதையும் பற்றி நில்லாமலும் அநாதியாகவும் இருக்கக்கூடிய பரம்பொருளாகி நம்மை பற்றி நிற்கும் வல்லமை உடையவனாகிய அவனை அடைவது பற்றி கற்ற பின்னும் அவனுடைய திருவடிகளைக் காணாமல் இருக்கலாமோ? அவனையே முழுமையாக நினைந்து அவனுடைய திருவடிகளை அடைந்த குருவிற்கு அன்பும் பக்தியும் கொண்டு அவரிடத்தில் கேட்டால் குரு அதுபற்றி உணர்த்துவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Dec-2020


பாடல்

நல்ல வழிதனை நாடுஎந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடுஅந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

உடலில் வாழ்வியல் முறைக்கு தர்மத்தில் விதிக்கப்பட்டவாறு நல்லவழிகளை நாடி இருப்பாயாக; எக்காலத்திலும் பரமனை விருப்பத்துடன் நாடி இருப்பாயாக; நல்ல செயல்களை நிகழ்த்தவல்ல மெய்ஞானம் பெற்ற வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பாயாக; கேட்பனவற்றை எல்லாம் அருள வல்லவனாக வள்ளலை அருளியதன் பொருட்டு நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடுவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 18-Dec-2020


பாடல்

மூலா தாரமுண்டு கிளியே
   முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு
   வல்லபை சத்தியுண்டு கிளியே

அருளிய சித்தர் : ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர்

பதவுரை

உடலில் இருக்கும் ஆதார சக்ரங்களில் ஒன்றானது மூலாதாரம்; அதில் முக்கோண வட்டம் உடையதாக இருக்கும்; தூய வடிவமாக இருக்கக்கூடிய கணேசனுக்கு அது ஆதார இடமாகும்; அங்கு வல்லபை எனும் சக்தியுடன் அவர் அங்கு இருக்கிறார்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 17-Dec-2020


பாடல்

அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

பசித்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தவர்கள் காலம் கடந்து வாழ்வதை அறியாமல், அன்னதானம் செய்வதற்கு பொன், பொருள் ஈந்தவர்கள் பொருள் ஈதல்பற்றி கர்வம் கொண்டு அதிகாரம் செய்யலாம்; ஐம்புலக் கள்வர்களை விலக்காமல் அவைகளைக் கடந்து நின்ற பரம்பொருளை அறியாதவர்கள் இறைவன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதை அறியாமல் அன்னதானம் செய்வதை குறித்து எதிர்மறை கருத்துக்கள் பேசி, குற்றம் என்று கூறி துன்பம் தரத்தக்க பாழும் நரகக் குழியில் வீழ்ந்து துயறுருவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 16-Dec-2020


பாடல்

பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
   வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி
துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
   இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி

அருளிய சித்தர் : சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர்

பதவுரை

மனோண்மணித் தாயே! உடலுக்கு கேட்டினை ஏற்படுத்துவதான கொலையினையும், உயிர்க் கொலையினை குறிப்பிடுவதுமான புலால் உண்ணும் விருப்பத்தினையும் விட்டு வலிமை உடையாதன உன்னுடைய பதத்தினைக் காண மயக்கம் கொண்டு திரிகின்றேனடி; வினைபற்றி ஏற்படுவதான துன்பம் நீங்குமாறு அதனை போக்கி, சுகானந்தத்தினை தருவதான உன்னுடைய திருத்தாள் பற்றி பேரின்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கின்றேன்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 15-Dec-2020


பாடல்

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
   சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
   உற்பன மானது மஞ்செழுத்தாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

ஐந்தெழுத்தால் இந்த உலகம் படைக்கப்படது; அந்த ஐந்தெழுத்தில் இருந்தே சீவன்கள் படைக்கப்பட்டது; ஐந்தெழுத்து கொண்டே இந்த நாள் எனப்படுவதும் உகம் முடிவுக்கு வரும்; ஐந்தெழுத்து கொண்டே நாளின் தோற்றம் உறுதி செய்யப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 12-Dec-2020


பாடல்

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
   தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
   நற்கதி சேர்ந்திடும் கோனாரே

அருளிய சித்தர் : இடைக்காடர்

பதவுரை

வாள் போன்று ஒளிவிடக்கூடியதான் சூரியன் பட்ட உடன் பனித்துளியின் தோற்றம் கெடும் அதுபோல பார்வதி தேவியினை இடப்பாகத்தில் கொண்டவனை நெஞ்சினில் வைத்து போற்றும் போது கொடிய வினைகள் தூள்பட அழிந்து நற்கதி சேர்ந்திடும்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 05-Dec-2020


பாடல்

நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்

தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல்

உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்

என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே

 

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

இறைவனாகிய கச்சி ஏகம்பரனே! நல்ல கயிற்றினால் கட்டிய பொம்மை அந்த கயிற்றியில் இருந்து விடுபட்டால் அது தன்னால் ஆட இயலுமோ? அதுபோலவோ உன்னால் நான் இங்கு இயக்கப்படுகிறேன் என்பது தாண்டி உன்னைப் பிரிந்தால் என்னால் இங்கு ஏதாவது செய்யப்படுவதற்கு ஏதாவது உண்டோ?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 03-Dec-2020


பாடல்

ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே
     உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே பசுவே
     நேர்மை யறிவாயே

அருளிய சித்தர் : இடைக்காடர்

பதவுரை

பசு எனப்படும் மனமே, எக்காலத்திலும் நிலையானதும், அழியாதும் ஆன ஒன்றைப் பிடித்தவர்களுக்கே பதி பற்றிய உண்மை வசப்படும். (சுவாசமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதால் சுவாசம் கைவரப் பெற்றவர்களுக்கே உண்மை கைவல்யமாகும் என்றும் பொருள் உரைப்பர்)*. ஞானமானது கைவரப் பெற்ற நிலைதனில் இதன் உண்மைப் பொருளினை அறிவாயாக.

* ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்