(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.
சங்கீதா: நீங்க ஏன் இப்ப இளையராஜாவோடு சேர்வதில்லை.
பாலா : இன்னைக்கு இருக்கிற எல்லா இசையிலும் ராஜா இருக்கிறார். அவரில் சாயல் அற்ற தனிப்பாடல் எதுவும் இல்லை. அதனால அவரை அவர் இசையை தனியா பார்க்கவில்லை.
தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில் உருவாகின்றன.
சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.
பாடல்
வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால் விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே; நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல் சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!
விளக்கம்
அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில் விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.
இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.
அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.
விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்
இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.
எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.
இசைஞானி : கதய சொல்லு.
பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.
இசைஞானி : படம் ஓடாதுடா.
பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இசைஞானி : அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.
இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.
இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.
காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.
இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா – பொது அம்சம் – இளையராஜா)
நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.
காலம் சிறிது கடக்கிறது
அவள் கேட்கிறாள். ‘ உங்களுக்கு பாட வருமா?’
‘கொஞ்சமா’ பதில் வருகிறது.
காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.
தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.
நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.
காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.
காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.
‘இரட்டுற மொழிதல்’ என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை. அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.
மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.
ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.
ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.
‘ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல’
‘ஆமாம் தம்பி’.
‘எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்’
‘இதுல 70ரூவா இருக்கு தம்பி’
‘நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்’
‘வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க’
‘ஆமாம்’
‘நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க’
குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.
‘ஏண்டா, இப்ப மினி பஸ், அப்புறம் 17G, அப்புறம் திரும்பவும் மினி பஸ். அப்புறம் நம்ப பொழப்பு எப்படி ஓடும்’. ஆட்டோ காரர்களின் மன வெளிப்பாடுகள்.
மனிதர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
‘எங்க போவணும்’
‘அரச மரத்தடி’
‘கல்லூரி சாலை ஒன்னு கொடுங்க’
‘அது எங்க இருக்கு’
‘ஏங்க, என்னங்க கண்டக்டர் நீங்க, நிறுத்தம் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியனும்’.
‘சார் நான் புதுசு சார்’
பஸ் சுட்டுகாட்டுக்கு அருகில் ஸ்டேஜிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
‘சார் டிக்கட் வாங்கறவங்கலெம் சீக்கிரம் வாங்குங்க’
பஸ் மைக்கேல் கார்டன் அருகில் வந்திருந்தது.
‘புள்ளயார் கோயில் நிக்குமா சார்’
‘ரெண்டு வீட்டுக்கு ஒரு வீடு நிக்கும்’
‘என்ன சார் செய்யறது, இது தான் பொழப்பு, ஆளாளுக்கு வீட்டுக்கு வீடு நிறுத்த சொல்றாங்க. ஆனா எங்களுக்கு 32 டிரிப்பு அடிக்கணும் சார். இன்னைக்கு இது தான் 18வது டிரிப்பு. அதிக பட்சம் 22 அல்லது 23 தான் முடியும். என்னா, கொஞ்சம் திட்டுவாங்க, வாங்கிக்க வேண்டியது தான்.
டிரிப் ஷீட்டில் 32 என்று எழுதி வட்டம் இடப் பட்டிருந்தது.
பயணம் சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனாலும் பயணம் மட்டும் தொடர்கிறது.
வினைகளின் வழியே பிறந்து பார், வேறு என்ன இருக்கிறது? புழுதி நிறைந்த தெருக்களில் விளையாடு, வேறு என்ன இருக்கிறது? உறவுகளோடு சொந்தம் கொண்டாடு, வேறு என்ன இருக்கிறது? கற்றல் தவிர்த்து அனைத்து விஷயங்களையும் செய், வேறு என்ன இருக்கிறது? பெரு மிருகங்களால் துரத்தப்படும் சிறு மிருகமாய் வேலை தேடு, வேறு என்ன இருக்கிறது? தனிமை விலக்க தவறா மணம் செய், வேறு என்ன இருக்கிறது? மனைவியின் வார்த்தைகளால் வலி கொள், வேறு என்ன இருக்கிறது? குளிரில், ஊன் முழுவதும் புண்ணாகி குரைத்துச் செல்லும் நாயினைப் பார், வேறு என்ன இருக்கிறது? தவறாது தமிழ் இலக்கியம் படித்து தவித்துப் போ, வேறு என்ன இருக்கிறது? மகிழ்வின் விளைவாய் மகிழும் குழந்தை கொள், வேறு என்ன இருக்கிறது? பெருங்குரலுடன் கரைந்து செல்லும் காகத்தினை உணர், வேறு என்ன இருக்கிறது? கனவுகளில் வாழ்வினை நடத்து வேறு என்ன இருக்கிறது? ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள், வேறு என்ன இருக்கிறது? மனிதர்களால் விலக்கப்படு, வேறு என்ன இருக்கிறது? தடம் மாறாது தனித்துச் செல்லும் பறவைக் கூட்டங்களை காண், வேறு என்ன இருக்கிறது? தனிமைகளுடன் தனித்திரு, வேறு என்ன இருக்கிறது? யாருமற்ற இரவில் தடயங்கள் அற்று மரணம் அறிந்து மரித்துப் போ. வேறு என்ன இருக்கிறது வாழ்வினை கொண்டாடுதல் தவிர?