அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  என்பு

பொருள்

  • எலும்பு
  • உடம்பு, உடல்
  • புல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
   புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
   ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
   மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
   இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்

கருத்து உரை

துளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே! புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).

விளக்க உரை

  • புலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்
  • புன் புலால் உடம்பு –  புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திருந்தடி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  திருந்தடி

பொருள்

  • மாறுதல் அற்ற  செம்மையான திருவடிகள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

ஈசன் இருக்குமிடமாகிய அண்ணாமலையைத் தேடிச்சென்று, அப்பெருமான் மாறுதலின்றிச் செம்மைப் பொருளாக உள்ள திருவடிகளை ஏத்துவீராக; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மையும் அவர் நாடிவந்து நம்மை ஆட்கொள்வர்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.

விளக்க உரை

  • நம்மையும் – நம்மைப் போன்ற வினைப்பற்றி இழிவு உடையவர்களையும்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வால்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வால்

பொருள்

  • இளமை
  • தூய்மை
  • வெண்மை
  • நன்மை
  • பெருமை
  • மிகுதி
  • குறும்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.

தேவாரம் –  நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பசுவினடத்திலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் ஜோதியாக நின்றவனே! நீரை ஏந்திய மேகங்கள் அசைகின்ற உச்சியை உடைய அளவு வளர்ந்த பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணாமலையில் உள்ளவனே! வெண்மை நிற  காளைவாகனனே! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – துடி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  துடி

பொருள்

  • மிகச்சிறிய மூலக்கூறு
  • இரு கரங்கள் கொண்டு வாசிக்க  உடுக்கைப்போன்று சற்றே நீண்ட இருபுறமும் தோலால் ஆன வாத்தியம்
  • சலிப்பு
  • காலநுட்பம்
  • வேகம்
  • சுறுசுறுப்பு
  • அறிவுநுட்பம்
  • மேன்மை
  • வலி
  • அகில்மரம்
  • தூதுளை
  • சங்கஞ்செடி
  • ஏலச்செடி
  • மயிர்ச்சாந்து
  • உடுக்கை
  • துடிக்கூத்து
  • துடிகொட்டுபவன்
  • சிறுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்

கருத்து உரை

டமருகம் எனப்படும் உடுக்கையில் இருந்து தோன்றும் ஒலியால் படைத்தல் தொழிலையும், திருக்கரத்தினால் காட்டும் அபயத்தினால் காத்தல் தொழிலையும், மற்றொரு திருக்கரத்தில் நெருப்பினை ஏந்தி இருப்பதால் அழித்தல் தொழிலையும், வெளிப்பட இயலாத வாறு முயலகன் மேல் ஒரு காலை ஊன்றி இருப்பதால் மறைத்தல் தொழிலையும், மற்றொரு திருத்தாளை உயர்த்தி இருப்பதால் அருளல் தொழிலையும் செய்து குறிப்பிடப்படும் கூத்தப் பெருமான் இவ்வாறான திருக்கூத்துச் செய்வனென்று சுய விசாரணை செய்து அறிவாயாக.

விளக்க உரை

  • சிவன் தானே முன் நின்று பஞ்சத் தொழில்களையும் செய்வான் என்பதை விளக்கும் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிட்டூரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நிட்டூரம்

பொருள்

  • கொடுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
   குப்பா யத்திற் …… செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
   கொட்டா விக்குப் …… புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
   அஆ உஉ…… எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
   மப்பே துத்துக் …… கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
   நிற்பாய் கச்சிக் …… குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
   நெட்டோ தத்திற் …… பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
   முட்டா திட்டத் …… தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
   முத்தா முத்திப் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலில் ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராமல் என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தமானவனே, இயல்பாய் பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே! வரிசையாக அமைந்திருந்த பற்கள் வேரற்று விழுந்து போக, பாழ்பட்டு இத் துன்பத்திற்கு காரணமான சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, உடலின் கண் இருக்கும் மயிரெல்லாம் கொக்கின் நிறம் போன்று வெளுத்து, உடல் கூன் அடைந்து, நடக்க இயலாமல் ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலையானது குனிதலை அடைந்து மற்றும் இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்று  பின்னர் இறந்தார் ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி,  அ ஆ உ உ என்னும் ஒலிகளுடன் உறவினர்கள் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ?

விளக்க உரை

  • ‘ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி’ எனும் பட்டினத்தாரின் பாடலும், ‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி இங்கு சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – முனிதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  முனிதல்

பொருள்

  • வெறுத்தல்
  • கோபங்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முன்னம்அடி யேன்அறி யாமையினால்
முனிந்துஎன்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக்கு ஆளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர்தம் கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

தேவாரம் –  நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

அன்னம் போன்ற நடையுடையவர்கள் பயிலும் திருவதிகை நகரில் கெடிலக் கரையில் வீரட்டானத்தில் உறைகின்ற தாயானவனே!  அடியேனாகிய யான் முன்னர் அறியாமையால் இருந்தேன். அதன் பொருட்டு கோபம் கொண்டு எனக்குச் சூலை நோய் தந்து வருந்தி இருக்குமாறு செய்தபின் அடியேன் ஆகிய யான் உன்னால் ஆளப்பட்டவன் ஆனேன். அறியாமையில் இருந்து விலகிய பின் இப்பொழுதும் சூலை நோய்  என்னைச் சுடுகின்றது. தலைவராகிய தேவரீர் அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பததே செய்யத் தகுத்த செயலாகும். அதனைப் புரிந்து அருளும் வகையில் சூலை நோயைத் தீர்த்தருள்க.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மூலை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மூலை

பொருள்

  • மூலாதாரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.

எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக (நமசிவாய) முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும் (நமவாசிய). அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும்(வாசிய). அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும் (வாசி).

விளக்க உரை

  • இவ்வாறு அறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பு.
  • பிற யோகிகள் யோகத்தை மந்திரம் இல்லாமலும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன் என்பது குறிப்பு.
  • இச் சிவயோக நெறியால் பாசமும், அத்துடன் நிற்கும் பசுத்துவமும் நீங்கிச் சிவத் தன்மையைப் பெறுவன்
  • மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்சாலப் பெரியர்என் றுந்தீபற;தவத்தில் தலைவர்என் றுந்தீபற

என்ற திருவுந்தியார் பாடலை ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அதெந்து

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அதெந்து

பொருள்

  • அறிவினால் அளக்கவொண்ணாதவன் அன்பு வலையில் படுவோன்
  • `காரணம்` என்னும் பொருளையுடைய தோர் திசைச்சொல்.`என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` என்பது பொருள்.
  • அஃது என்னும் பொருளை உடைய திசைச்சொல்
  • அஞ்சாதே என்னும் பொருளை உடைய திசைச்சொல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சோதியே சுடரே சூழொளி விளக்கே
  சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
  பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
  நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

சோதிப் பிழம்பானவனே! சுடரானவனே! பிரகாசம் தரும் சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே! சுருண்ட கூந்தலையும் பெருத்த தனங்களையும் உடைய உமாதேவியின் பாகத்தை உடையவனே! மேலானவனே!  பாலினது நிறத்தை ஒத்த வெண்ணீற்றை அணிந்தவனே! தாமரை மலரை இடமாக உடைய பிரமனாலும், திருமாலாலும் அறியமுடியாத நீதிமானே! செல்வம் மிக்க திருப் பெருந்துறையில், நிறைந்த மலர்களையுடைய குருந்த மரநிழலில் பொருந்திய சிறப்புடைய முன்னவனே! அடியேனாகிய யான், உன்னை விரும்பி அழைத்தால், அஞ்சாதே என்று  அருள் புரிவாயாக!

விளக்க உரை

  • அருளை வேண்டிப் பாடிய பத்துப் பாடல்களைக்கொண்டது அருட்பத்தில் உள்ளப் பாடல். அருளின்றி வீடுபேறு கிட்டாது என்பதை விளக்கும் பாடல்
  • மகாமாயாசுத்தி – மாயையினின்று விலகித் தூய்மை பெறுதல் குறித்தது இப்பாடல்
  • சோதி – எல்லாவற்றையும் அடக்கி விளங்கும் பேரொளி. `சிவம்` என்னும் நிலை. சுடர் – அப்பேரொளியின் கூறு. `சத்தி` என்னும் நிலை. சூழ் ஒளி விளக்கு – ஓர் எல்லையளவில் பரவும் ஒளியை உடைய விளக்கு. எல்லா நிலையிலும் இருப்பவன் எனும் பொருள் பற்றியது.
  • இது மலையாளச் சொல் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. தென்னிந்த மொழிகள் தமிழை ஆதாரமாக கொண்டவை என்பதாலும், திருவாசகத்தில் இச்சொல் இடம் பெற்றுள்ளதாலும் இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தேசவிளக்கு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தேசவிளக்கு

பொருள்

  • உலகில் உள்ள ஞாயிறு , திங்கள் , தீ போன்று ஒளிரும் பொருள்கள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
  ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
  மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
  என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு
  அகலாத செம்பொன்சோதீ!.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருவையாறு எனும் இத்தலம் விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! நீ, பொருள் தராத வெற்று ஓசையாகவும், பொருளைத் தரும் ஒலியாகவும்  உள்ளாய்; இந்த உலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய்; வாசனை தரும் மலரில் எங்கும் பரவியுள்ளாய். மலைமான் எனும் இமவானுக்கு மருமகனாய் உள்ளாய்; உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய்; எனக்குத் தலைவனாய் இருந்து  உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய்; உலகில் ஒளிர்தலைச் செய்யும் ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகி உள்ளாய்.

விளக்க உரை

  • ‘ஒசை, ஒலி’ என்பன, ‘சத்தம், நாதம்’ என்னும் பொருளில் முறையே வெற்றோசையும் பொருளோசையும் குறிக்கும். ‘சொல்லை வாக்கு’ என்றும், அகத்தெழு வளி இசையை, ‘மத்திமை வாக்கு’ எனவும், புறத்திசைக்கும் வளி இசையை, ‘வைகரி வாக்கு’ எனவும் மெய் நூல் கூறும். அகத்தெழு வளியொடு உடன்படாது நினைவில் நிற்கும் நிலையை ‘பைசந்தி வாக்கு’ எனவும், சொல்லானது இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ‘சூக்கும வாக்கு’ எனவும் கூறப்படும். இவற்றுள் சூக்கும வாக்கே ‘நாதம்’ எனப்படுவது.
  • ‘பிறரல்லர்; நீ ஒருவனே’ எனப் பிரிந்து நின்ற பிரிநிலை பற்றி அனைத்தும் நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மகோதரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மகோதரம்

பொருள்

  • பூதம்
  • பெருவயிற்று நோய் – வயிறு வீக்கம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே

புலிப்பாணி ஜோதிடம்

கருத்து உரை

ஒருவனுக்கு லக்னத்தில் இருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்கிரன் பலமுடன் சஞ்சாரம் செய்யும் போது,  அவர்களுக்கு ஆயுள் குறைவதுடன், பீசத்தில் நோயுறுதலும்,வாதநோயும் ஏற்படும்; மிகவும் சிறப்பு பெற்ற செம்பொன் மற்றும் வாழும் மனையும் நஷ்டமாகும்; மேலும் வயிறு வீக்கம், பாண்டு எனப்படும் காமாலை மற்றும் நீர்க்கோவை, குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும்; ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவன் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.

விளக்க உரை

  • சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கும் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பெற்றி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பெற்றி

பொருள்

  • இயல்பு
  • தன்மை
  • விதம்
  • காரியமுறை
  • பெருமை
  • நிகழ்ச்சி
  • பேறு
  • விரதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எல்லாவுலகிலும் சிவன் என்னும் சொல்லோசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செம்மையான சொல் வேறு எதுவும் இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன். அத்தகைய எம்பெருமான் யாசித்து உண்பவன்; தோலையே ஆடையாக உடையவன்; அத்தோல்மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன்; கவண் கல் அளவே ஆன மிக சிறிய அளவே உண்பவன்சு; சுடுகாடே அவன் இருப்பிடம் ஆகும்; அவனுடைய உண்ணும் பாத்திரம் மண்டையோடு ஆகும்; ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் இயல்பு தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஒண்புழுக்கல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஒண்புழுக்கல்

பொருள்

  • நெய்யால் மறைக்கப்பட்ட சோறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! மைபூசியும் ஒளிநிறைந்த கண்களையும் உடைய மகளிர் வாழும் சிறந்தத் தலமான மயிலாப்பூரில், கைகளில் திருநீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமான் உறையும்  கபாலீச்சரம் என்னும் கோயிலில், அணிகலன் அணிந்துள்ள மகளிர், நெய் வழிந்தும்  சிறப்பானதும் ஆன பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • வறியர் முதலானவர்க்கு அமுது அளிக்கும் தைப்பூசவிழாச் சிறப்பு பற்றியது இப்பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தெள்ளியன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தெள்ளியன்

பொருள்

  • தெளிந்த அறிவு உடையவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

நெஞ்சே! கொள்ளியில் இருந்து உண்டாகும் வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும், ஒளிரும் பூதகணங்கள் சூழ்பவரும், உமையை ஒரு பாகத்தில் கொண்டவரும், வெண்மையான திருவெண்ணீற்றினை அணிந்தவரும்,  அகோர முகத்தை உடையவரும்,  ஐயிராவதம் என்ற யானைக்குரியவரும், விடையேறியவரும் ஆன பெருமானுக்கு உரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திவா

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  திவா

பொருள்

  • பகல்
  • நாள்
  • நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

‘நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலத்திலும் தானம் கொடுக்கும் கைகளை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே’  என்று அவ்வாறு தகுதி இல்லாத பலரிடமும் பேசி என்னை உழல வைக்கும் வறுமையாகிய இருளை பிளக்கக்கூடிய ஞான சூரியனே, ‘கர்ணபூரம்’ என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும் வள்ளி நாயகியை  பெருமிதத்துடன்  தழுவும் மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய சிவபெருமானின் காதில் இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, எமன் என் உயிரை கொள்ளை கொள்ளாதபடி காப்பாற்றுவதற்காக வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்தும் என்னுடைய இருதயத்தில் நீ வீற்றிருந்தும் அருள வேண்டும். 

விளக்க உரை

  • ‘பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே’ என பல இடங்களில் விளக்கப்பட்டாலும் பொருள் பொருந்தாமையால் அவ்விளக்கம் இங்கு பயன்படுத்தப்படவில்லை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – செறுநர்

 

ஓவியம் : இணையம்

பொருள்

  • பகைவர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் – – – – – –
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் … ” – – – – – –

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

கருத்து உரை

தம்மைச் சார்ந்தவர்களாகிய அடியார்களையும், பக்தர்களையும் தாங்கிக் காத்தது அருளும், அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகளை உடையவரும், பகைவர்களை அழிக்கின்ற, இடியை ஒத்த பெருமை சார்ந்த திருக்கரங்களையும் உடையவரும் ஆன திருமுருகப்பெருமான், குற்றம் சிறிதும் அற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானையின் கணவன் ஆவார். 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – காரான்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  காரான்

பொருள்

  • எருமை
  • கருநிறப்பசு
  • மேகமாயிருப்பவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

செறிவுடைய சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவனாகிய ஈசன், மேகமாக இருந்து மழையாக பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். மகிழ்வோடு உமையம்மையை ஒருபாகத்தில் கொண்டு விளங்கும் புகழ் உடையவன்.  உம்முடைய இடர்கள் நீங்க அவனை துதியுங்கள்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அகை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அகை

பொருள்

  • கிளை
  • எரிதல்
  • மலர்
  • தளர்ச்சி
  • தகை
  • தடை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம்(அட்ட தள கமல முக்குண அவத்தை) – திருமூலர்

கருத்து உரை

தன் வயம் உடைமை,  தூய உடம்பு உடைமை,  இயற்கை உணர்வு உடைமை,  முற்றுணர்வு உடைமை,  இயல்பாகவே பாசமின்மை,  பேரருள் உடைமை,  முடிவில் ஆற்றல் உடைமை,  வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு நிலைகளில் நிறைந்து, எட்டு இதழ் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசை எட்டு, அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மர், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்தும்  முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையே ஆகும்.

விளக்க உரை

  • `தியானப் பொருள் சிவனே` என்னும் பொருள் உரைக்கும் பாடல்
  • `யோகத்தின் எட்டுறுப்புக்களில், `தியானம்` ஏதேனும் ஒன்றைத் தியானிப்பது அல்ல; சிவனைத் தியானிப்பதே` என்பது பற்றிய பாடல்
  • வகையெட்டும் நான்கும்மற் றாங்கே‘ எனும் பொழுது தியானப் பொருளானது அகாரம், உகாரம்,  மகாரம்,  விந்து எனும் தூல விந்து, அருத்த சந்திரன், சூக்கும விந்து எனும்  நிரோதினி, அதிசூக்கும விந்து எனும்  நாதம், தூலநாதம் எனும்  நாதாந்தம்,  சூக்கும நாதம் எனும்  சத்தி, அதிசூக்கும நாதம், வியாபினி, சுத்த மாயை  அல்லது ஆகிய  காரிய நிலை எனும்  சமனை, சுத்த மாயையின் சூக்கும காரண நிலை ஆகிய  உன்மனை ஆகிய  பிராசாத கலைகள் பன்னிரண்டு எனும் பொருளிலும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – உறுவித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உறுவித்தல்

பொருள்

  • பொருத்துதல்
  • நுகர்தல்
  • மிகுவித்தல்
  • அடைந்து நீராடச் செய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ் வினை
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர் பேரெயில் ஆளரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

மேரு மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான், அந்த வில்லினில் நாணேற்றப்பட்ட அம்பினைக் கொண்டு மூன்று கோட்டைகளையும் அழித்தவர். அவர் தனது அடியார்களை, பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடச் செய்து அதன் காரணமாக நற்பயன்களை அடையுமாறு செய்து அவர்களது ஊழ்வினைகளை அறுப்பதோடு மட்டும் இன்றி சிவஞானத்தை அளிக்கும் நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்து  பின் அவர்கள் பல விதமான நன்மைகள் பெறுமாறு செய்கின்றார்; இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகிறார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சுணங்கன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சுணங்கன்

பொருள்

  • நாய் போலத் திரிபவன்
  • இழிந்தோன்

வாக்கிய பயன்பாடு

ஏண்டா, எப்பவும் சொணக்கமாவே இருக்க, எப்படித்தான் கரை சேரப் போறீயோ?

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
   பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
   தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
   உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
   என்னினும் காத்தருள் எனையே.

திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

புலால் விற்கும் கடைகளில் தலையைத் தாழ்த்திக் கொண்டு,  அலைந்து கொண்டு சிறு இறைச்சி  துண்டங்களைப் பொறுக்கி உண்ணும் நாய் போன்றவனாகிய யான், பொருளை வாங்கி ஊருக்குள் கொண்டுவந்து விற்போருடைய உழைப்பையும் வாழ்வையும் எண்ணாது விலையை மதியாது இரக்கமின்றிக் குறைத்து விலை பேசி விலையை மட்டும் குறியாகக் கொண்டு இரக்கமில்லாத தீயவனாகவும், ‘இது கேடில்லை செய்க’ எனத் தீயவர் உடனிருந்து கூறிய கொடிய செயல்களை மேற்கொண்டு, பலகாலும் முயன்ற மனத்தவனாய், எனக்கு ஒப்பாரில்லை என்று அகம்பாவம் கொண்டிருந்த குற்றம்  உடையவனாயினும் என்னைக் காத்தருள்க.

விளக்க உரை

  • புலைவிலைக் கடையில் தலை குனிந்து அலைந்து பொறுக்கிய சுணங்கன்” -. சிதறுண்டு ஒழியும் இழிபொருள்களையும் அலைந்து பெறும் கீழ்மக்கள் இயல்பை குறிப்பது
  • தலைவிலை – பொருள் விளையுமிடத்து அமையும் விலை
  • கடைவிலை – விற்பனையாகுமிடத்து விலை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – விடாய்த்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விடாய்த்தல்

பொருள்

  • வேட்கையுறுதல்
  • களைப்படைதல்
  • விரும்புதல்
  • செருக்குக்கொள்ளுதல்

வாக்கிய பயன்பாடு

ரொம்ப விடாய்க்காத, காலம் இப்படியே போவாது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பசுக்கள், அரிசி கழுவிய நீராகிய கழுநீரை உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லாது; அக் கழுநீரையே விரும்பி ஏற்றுக் கொண்டு உடல் மெலியும். அத்தன்மையான  அப்பசுக்கள் தம் இயல்பில் இருந்து மாறுவது இல்லை. வளமையுடைய பருகும் பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பதை அறியாதவர்கள் கள்ளின் சுவையை நினைத்துக் கள்ளுண்ணும் மக்கள் தம் இயல்பில் இருந்து  நீங்கியவர்கள் ஆவார்.

விளக்க உரை

  • ‘கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா’ எனும் வரிகளால்   கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!