அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிட்டூரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நிட்டூரம்

பொருள்

  • கொடுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
   குப்பா யத்திற் …… செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
   கொட்டா விக்குப் …… புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
   அஆ உஉ…… எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
   மப்பே துத்துக் …… கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
   நிற்பாய் கச்சிக் …… குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
   நெட்டோ தத்திற் …… பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
   முட்டா திட்டத் …… தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
   முத்தா முத்திப் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலில் ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராமல் என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தமானவனே, இயல்பாய் பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே! வரிசையாக அமைந்திருந்த பற்கள் வேரற்று விழுந்து போக, பாழ்பட்டு இத் துன்பத்திற்கு காரணமான சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, உடலின் கண் இருக்கும் மயிரெல்லாம் கொக்கின் நிறம் போன்று வெளுத்து, உடல் கூன் அடைந்து, நடக்க இயலாமல் ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலையானது குனிதலை அடைந்து மற்றும் இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்று  பின்னர் இறந்தார் ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி,  அ ஆ உ உ என்னும் ஒலிகளுடன் உறவினர்கள் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ?

விளக்க உரை

  • ‘ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி’ எனும் பட்டினத்தாரின் பாடலும், ‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி இங்கு சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *