‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – என்பு
பொருள்
- எலும்பு
- உடம்பு, உடல்
- புல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்
கருத்து உரை
துளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே! புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).
விளக்க உரை
- புலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்
- புன் புலால் உடம்பு – புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்