வெட்டும் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடும் கயிற்றால் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்துஉரை
துதிக்கைகளை உடைய மலைபோன்று எட்டுத் திக்குகளிலும் இருக்கும் எட்டு யானைகள் தத்தம் இடம் விட்டு விலகும்படி கண்களுக்கு எட்டாதவாறு ஆகாய வெளி வரைக்கும் மறையும்படியான விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே! வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது தோன்றி வரும் கடுமையும், உக்கிரம் நிறைந்து கொடுந் துன்பம் தரும் இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினை வீசி அடியேனைக் கட்டும் போது தேவரீர் காத்து அருள வேண்டும்.
நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள் தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
யோகியர்களே, நீங்கள் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு வேறு மருந்து ஒன்றும் தேவை இல்லை. (குரு முகமாக அறிக). மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள அறிவிற்கு ஆதாரமான உச்சியில் அதனை அப்பினாலும் மேலே குறிப்பிட்டவாறு சிவநீராக மாறும். இதனாலே நரையும் மாறும்.
விளக்கஉரை
நூறுதல் – பொடித்தல் என்பதால் ‘நூறு மிளகு“ எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாது.
அமுரி தாரணைக்குத் துணையாக இருக்கும் சிலவற்ரைப் பற்றி கூறுதல்
எவரிடத்து இருந்தும் ஏற்றல் செய்யாத வினைகள் இல்லாதவனை, எல்லா இடங்களிலும் உள்ளவன் தன்னை, இனியவற்றை நினையாதவர்களுக்குத் துன்பமானவனை, வலிமையுடைவனை, தன்னை விரைந்து சரண் அடைந்தவர்களுக்கு அருளுவதில் வல்லவன் ஆனவனை, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான் தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன் ஆகிய திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகனை, நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்ந்து அருளியிருப்பவனாகிய அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!
விளக்க உரை
இல்லான் என்பது குறித்து ‘எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன்’ எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. புலனாகாதவன் எனினும் இல்லாதவன் ஆகுதல் இல்லை. எனவே இது விலக்கப்பட்டுள்ளது. குரு உரை வண்ணம் பொருள் உணர்க.
காந்தள் மலர் போன்றதும், இதழ்கள் நிறைந்ததும் ஆன தோடார் மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும், செம்மையான அணிகலன்களையும் அணிந்து கொண்டுள்ள அம்மையோடும் உடனிருந்து, பெருமைக்கு உரிய இரும்பூளையில் உறையும் ஈசன், காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? இதனை எனக்குச் சொல்வீராக.
விளக்க உரை
அர்ச்சுனனோடு போர் செய்த வேடனாக வந்தது ஒப்புநோக்கி சிந்திக்கத் தக்கது.
தாமரை மலர்கள் கொண்டு, மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொண்டுவந்து சொரியச் செய்த போது அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி சென்று ஆட்கொண்ட அழகான தலமானதும், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், அதன் மேல் இருக்கும் மேல்மாடத்திலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்பி கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற தாமரை தடாகங்களில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற தலமானதும் ஆன இடம் திருக்கலயநல்லூரே என்று அறிக
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுற மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
நிழல் தரும் பந்தல் போன்றதாகிய இவ்வுடம்பு தன் நிலைகெட்டு விட்டது. உயிர்நிலை கட்டுப்பாடு இல்லாமல், ஒன்பது வாசலால் ஒருங்கே அடைத்து விடப்பட்டது. அனைவரும் துன்பம் அடையும் படியான துக்க காலம் வர அன்புடையவர்கள் மேலும் மேலும் அழுது அந்த இடம் நீங்கினர்.
விளக்க உரை
‘இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பது குறித்தப் பாடல்
‘துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு எனப் பொருள் கொண்டு விரைந்து துன்பம் கொடுப்பவனாகிய காலன் சேர்ந்து’ எனப் பொருளிளும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆன்றோர் பொருள் உணர்ந்து அறிக.
`மனைவி முதலான உறவுகள் உண்மையில் அன்புடையர்களாக இருப்பினும் , அவர்களால் நிலையாமை விலக்க இயலாது’ என்பது பற்றியது.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
கருத்துஉரை
நெருப்பில் இட்ட பஞ்சு எவ்வாறு இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அது போல் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போக செய்பவனும், உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் இருப்பிடம் செல்ல வைத்து நற்கதியை ஊட்டுபவனும், கடவுள் முதலியவர்களுக்கும் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேறுபவனும் ஆகிய கணபதியைத் துதித்து அவனின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.
விளக்க உரை
‘தொடரும் உயிர்கள்.. உறச்செய்யும் – உயிர்கள் வினை பற்றி பிறப்பு, இறப்பில் உழலும். அவ்வாறான வினைகளை மட்டும் விலக்குதல் அல்லாமல் அந்த உயிர்களுக்கு மேன்மையான தேவலோக கிடைக்கும்படியாக செய்பவன்.
கடவுள் முதலோர்க்கு .. எவனால் முடிவுறும் – திரிபுர தகனத்தின் போது ஈசனின் தேரின் அச்சினை முறித்து, அதனால் ஏற்பட்ட தடையை உடைத்து எறிந்ததை ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே
எனும் கந்தர் அநுபூதி பாடலில் ‘தேவர்களின் அரசனே’ என்ற வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
என் தந்தையே! அரிதானவனே! என்னை ஆட்கொண்ட நாளில் வெட்கம் இல்லாத நாய் போன்றவனாகிய யான், உன்னை வணங்குகின்ற அடியார் நடுவில் நின்று, மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலமாகிய அடியார் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் இருக்கும் உன் திருத்தோள்களின் அழகை நோக்கி, முன்னொரு காலத்தில், தகாச்சொற்களைச் சொல்லி ஒன்றுமே செய்யாதவனாக இருந்தேன்; உன்னை காண்பதற்கு உள்ளம் உருகுகின்ற அன்பு உடையவனாகவும் இல்லை; நீ ஆண்டு அருளுவதற்கு அடியேனும் தகுதியுடையனாக இல்லாதிருக்கும் இத் தன்மை அறிந்தும் என்னை ஆட்கொண்டாய். உன்னுடைய திருவடி எனக்கு உரியதே! அதைப் பிரிந்து வாழ முடியாது.
விளக்க உரை
இறைவன் திருவடிக்காட்சி பெற்றோர், அவரைப் பிரிந்து வாழ ஒருப்படார்.
‘எனதே நின்பாதம்’ – இறைவன் திருவடியில் தமக்கு உள்ள உரிமை பற்றியது.
‘பண்டு தோள் நோக்கி நகுவேன்’ – இறைவன் குருவாய் வந்த பொழுது அவனது தோற்றப் பொலிவைக் கண்டு மகிழ்ந்து இருந்தது அல்லாமல் ஞானத்தைப் பெற்று அன்பு செய்யவில்லை.
அருட் சுடரே! உண்ணத்தக்கவாறு இருக்கும் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! பேராற்றலை உடைய சிறந்த தவத்தினை உடையவர்களுக்கு அரசனே! உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் அழகியல் கலைகள் ஆனவனே! புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! யோகக் காட்சியில் சிறப்பாக விளங்குகின்றவனே! அறிவால் ஆராய்ந்து சிறப்பான இடத்தையுடைய அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே! சிவபிரானே! இருள் நிறைந்த இந்த உலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
விளக்கஉரை
இறைவன் அடியார் மனத்தினை கோயிலாகக் கொண்டு அருளுவான் என்பது பற்றிய பாடல்
பொருளுடைக் கலை – மெய்ந்நூல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது; `அவற்றின் பொருளாய் இருப்பவனே` என்று விளக்கப்பட்டுள்ளது. மெய்யை தானாக உணர்தல் வேண்டும் என்பதால் இது விலக்கப்பட்டுள்ளது. (கற்றறிந்தோர் விளக்கினால் பெரு மகிழ்வு)
திருவாரூர் அமர்ந்த கடவுளானவன், ஊழிக்காலங்களைத் தன்னால் அளக்கவல்லவன்; தன்னை விரும்பும் அடியவர்கள் தலை உச்சியின்மேல் உள்ளவன்; தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினை உடையவன்; ளிர்ச்சிபொருந்திய வலிமையும், உறுதியும் உடைய கொடியை உடையவன்; தோழிகள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலால் வணங்கத்தக்கப்படுபவன்.
விளக்கஉரை
சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலின் கையில் காட்சியளிப்பவன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. முன் வரிகளில் அடியார்கள் வணங்க என்பதாலும், பின் வரும் தொடர்களில் ‘கையினாலும்’ என உம்மைத் தொகை இருப்பதாலும் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன் எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
திருஅருட்பா – வள்ளலார்
கருத்துஉரை
எத்தகைய துன்பங்கட்கும் சலிப்புறாத, உறுதியான மனத்தில் இனிமை செய்து அதன் தன்மை கெடாது இயல்பாகவே ஞானவொளி பெற்று என்றும் இடையறாது விளங்கும் சுய சோதி ஆனவனே, அழகு விளங்குமாறு பழுத்த ஒப்பற்ற பழம் போன்றவனே, தில்லையம்பலத்தில் செம்மேனி அம்மானாய் ஞான ஒளி கொண்டு விளங்குகின்ற மாணிக்க மணியின் சுடரொளியை உடையவனே, குளிர்ச்சி பொருந்திய சந்திரனிடத்தே நிலவும் அமுதத்தைத் தந்தருள்வாய்; அதற்கு இதுவே சமயமாகும்; எண்ணத்தில் முதிர்வுடையவனகிய யான், உடலாலும், உள்ளத்தாலும் பெற்ற ஞானப் பேற்றால் மென்மை உற்று உலகியல் துன்பங்களைத் தாங்கும் சிறுமையைப் பொறாததால் இனிமேல் சிறியவனாகி இந்த உலகியல் தரும் துன்பங்களைத் தாங்க மாட்டேன்.
விளக்க உரை
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் – யோக முறையில் சிரசின் மேல் துவாத சாந்தத்தில் சந்திரனாகத் தோன்றி ஞான அமுது தருகின்றான் என்பது பற்றியது
இதுவே தருணம் – அதனைப் பெறுதற்குரிய பக்குவத்தைத் தான் அடைந்து கூறல்
மனத் துன்பங்களுக்கு காரணமான குற்றம் முழுதும் அற்று, இரண்டற்ற நிலையில், நின்திருவடியில் ஒன்றாக இணைந்து நிற்கும் நல்ல தவம் உடையவர்களுக்கு ஒப்பில்லாத ஒன்றாய் விளங்கும் உண்மை அறிவு இன்ப வண்ண வாழ்வே! நின் திருவடிக்கு அடித்தொண்டு பூண்டு உன்னிடத்திலே பேரன்பு பெருக எளியேனுக்கு நீ நின்திருவருள் தோற்றம் தந்து அஞ்சேலென்று அமிழ்த மொழியளித்து அருளும் நாள் எந்த நாளோ?
விளக்க உரை
‘வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே’ எனும் கந்தர் அலங்காரப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
இறைவனின் குணங்களாக ஆகமங்கள் கூறுவது என்ன? எண் குணங்கள்
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
பொறாமை உடையவர்களாக ஆகி, அறத்தின் வழியில் இருந்து விலகி, தீக்குணம் உடையவர்களாக பிறர் பொருளைக் கொள்ளாதீர்கள். நற்பண்பு உடையவர்களாக உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.
விளக்க உரை
இவ்வாறான நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பு.
`உணர்வு நிலையாமையை உணர்ந்து நிலைபெறுவதற்கு உரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது பற்றி கூறப்படும் பாடல்.
‘அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே’ எனும் அபிராமி அந்தாதி யாண்டும் சிந்திக்கத் தக்கது.
மோட்சம் பெறுவதற்கான சூட்சமத்தினை சொல்கிறேன். ஏமாற்றுதல், பொய், திருட்டு, மற்றும் கொலை செய்யாதே; கோபம் அதன் காரணமான காய்ச்சல் ஆகியவற்றைப் போடு; உலகத்தில் புண்ணியத்திற்கான வழிமுறைகளை கருத்தில் கொள்ளு; (மனத்தால்) நிலை இல்லாமல் தாவிக் கொண்டே இருக்காதே; அவ்வாறு இருந்து பாழாக போகாதே; பல வேதங்களும், சாத்திரங்களும் அவற்றின் மெய்யான பொருள் உணர்ந்து பார்; நம்பிக்கை உடையவர்கள் பிழைக்கச் செய்வதற்கான மார்க்கம் என இவைகளை எனது குடியாகவும், குழந்தைகளாகவும் உடைய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் செலுத்திய அம்பு மழையில், பெரும் பகைவர்களாகிய கெளரவர்களின் பெரிய சேனையை பொடிபட உதவியவரும், கதறிச் சென்ற பசுக்கள் மீண்டு வர தனது புல்லாங்குழலை ஊதியவரும், அர்ச்சுனன் ஏறிய தேரில் தேர்ப்பாகனாக இருந்தவரும், தங்க மயமானதும், வேத ஒலியைத் தருவதும் ஆன சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதில் பாம்பின் மேல் பள்ளி கொண்டவரும், மூன்று உலகங்களை மூன்று அடியில் அளந்த பாதத்தை உடையவரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும் ஆன திருமாலின் மருமகனே! அன்றலர்ந்த மலர் மாலையை அணிந்த மார்பினை உடையவனும், திருவண்ணாமலை அரசனும் ஆகிய ப்ரபுட தேவராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே! பூமிக்கு கீழ் பாதாலத்தில் இருக்கும் ஆதிஷேன் ஆடவும், அகிலத்தில் மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், சிவதாண்டவத்துக்கு மாறுபாடு இன்றி ஒற்றுமையாக காளி தாண்டவம் ஆடவும், அந்த காளியோடு அதை எதிர்த்து அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி ஊர்த்துவகோலத்தில் நடனம் ஆடி போட்டியிட்டவரான, ரிஷபத்தில் ஏறிய சிவன் ஆடவும், அருகில் பூத கணங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க சரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் அவர்களிடத்தில் பொருந்தி நிற்கும் தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரை மறையில் உறையும் மாமி ஆகிய லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனாகிய விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
மறைத்தலின் நோக்கம் என்ன? உயிர்கள் தம் வினைகளை நுகர்தல் பொருட்டு ஆசை உண்டாக்குதல்
வண்டு கூட்டங்கள் நிறைந்த, சோலைகள் நெருங்கியுள்ள கொன்றை மாலையை அணிந்தவனும், பாம்பின் வடிவம் ஒத்து இருக்கும் சடையாகிய நீண்ட, நிறத்தால் பொன்போன்ற முடியினையுடைய, அழகிய கருணையை உடையவனும் ஆன அவனை தலைவன் என்றும், தேவன் என்றும், இறைவன் என்றும் தன்னைப் பல நாளும் துதித்துத் தொழுகின்றவரது துன்பங்களைப் பார்த்துக் கொண்டிராதவன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அழித்தலின் நோக்கம் என்ன? உயிர்களின் களைப்பு ஒழித்தல்
செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான் புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும் தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்துஉரை
செருக்கினை அடைந்த அரக்கனாகிய இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்கால் பெருவிரலை ஊன்றி அழித்தவன்; முழுவதும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன்; புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன்; அப்படிப்பட்ட பெருமான் வீற்றிருந்து எழுந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காத்தலின் நோக்கம் என்ன? உயிர்கள் தம் வினையைப் பற்றச் செய்தல்
திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காணும் வல்லமை இல்லாதவர்கள் ஆயினர்; பொங்குவரும் கங்கை ஆற்றினை செஞ்சடையில் உடையவனும், நல் வினைப் பயன்களின் திரண்ட வடிவான தலைவனாகிய இறைவன் `இங்கு இருக்கிறேன்` என்று இலிங்க வடிவில் தோன்றினான்.
விளக்கஉரை
புண்ணிய மூர்த்தியே – உயிர்களிடத்தில் வினைகளை விலக்கி உயிர்களுக்கு அருளும் திரண்ட வடிவான தலைவன் எனும் பொருளில் எடுத்தாளப் பட்டுள்ளது. இரு வினைகள் விலக்கியவன் என்பதால் இப்பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தலின் நோக்கம் என்ன? உயிர்களிடத்தில் மலப்பரிபாகம் உண்டாக்கல்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – இருந்தவம்
பொருள்
பெரியதவம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
என்றும் எப்பொழுதும் ஈசன் என்பவர்களாக இல்லாமல், நன்கு பொறுமை உடையவர்களாக இருப்பினும், உண்ணாவிரதம் இருப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், விரும்பிச் சென்று நீரில் நீராடித் திரிந்தாலும் ஈசனை விலக்கிய மற்றவர்களுக்கு இவற்றால் பயன் இல்லை.
விளக்கஉரை
அகவழிபாடு சிறப்பினை விளக்கும் மற்றொரு பாடல்.
நோற்றல் – பொறுத்தல், தவம் செய்தல் எனும் பொருள் விளக்கம் இருப்பினும் இரண்டாவது வரியில் ‘குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்’ எனும் வரிகளால் பொறுமை உடையவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தில் செய்யப்படுகின்றன. மாயை ஆகிய சடப்பொருளிடத்தில்
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
சீர் பிரிப்புடன்
ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே, தேரின், கோள் நட்புத் திசைக்கு.
பதினெண் கீழ்க்கணக்கு – இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்துஉரை
கட்டளை இட்டு சொன்ன வேலைகளை அதில் மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். எல்லா காலங்களிலும் குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினை சொந்தமாக வைத்து விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் அனைத்து திசையிலும் நட்புக்கொள்ளுதல் இனிது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உயிர்களிடத்து செய்யப்படும் தொழில்கள் எவை? மறைத்தல், அருளல்