‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தற்றுதல்
பொருள்
- தறுதல் / உடுத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
செருக்கினை அடைந்த அரக்கனாகிய இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்கால் பெருவிரலை ஊன்றி அழித்தவன்; முழுவதும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன்; புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன்; அப்படிப்பட்ட பெருமான் வீற்றிருந்து எழுந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
காத்தலின் நோக்கம் என்ன?
உயிர்கள் தம் வினையைப் பற்றச் செய்தல்