‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சுரர்
பொருள்
- தேவர்
- வானோர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
கருத்து உரை
நெருப்பில் இட்ட பஞ்சு எவ்வாறு இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அது போல் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போக செய்பவனும், உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் இருப்பிடம் செல்ல வைத்து நற்கதியை ஊட்டுபவனும், கடவுள் முதலியவர்களுக்கும் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேறுபவனும் ஆகிய கணபதியைத் துதித்து அவனின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.
விளக்க உரை
- ‘தொடரும் உயிர்கள்.. உறச்செய்யும் – உயிர்கள் வினை பற்றி பிறப்பு, இறப்பில் உழலும். அவ்வாறான வினைகளை மட்டும் விலக்குதல் அல்லாமல் அந்த உயிர்களுக்கு மேன்மையான தேவலோக கிடைக்கும்படியாக செய்பவன்.
- கடவுள் முதலோர்க்கு .. எவனால் முடிவுறும் – திரிபுர தகனத்தின் போது ஈசனின் தேரின் அச்சினை முறித்து, அதனால் ஏற்பட்ட தடையை உடைத்து எறிந்ததை ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
- விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே
எனும் கந்தர் அநுபூதி பாடலில் ‘தேவர்களின் அரசனே’ என்ற வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.